கூடங்குளம் மின் உற்பத்தியில் 50% தமிழகத்துக்கு!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதற்கட்டமாக இரண்டு உலைகள் இயங்கத் தொடங்கும்போது அதிலிருந்து 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
மூன்று நாள் ரஷிய பயணத்துக்குப் பின்னர் மாஸ்கோவில் இருந்து சனிக்கிழமை இரவு தில்லி திரும்பிய அவர், விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ.14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அந்த அணுமின் நிலையத்தை இயக்காமல் அப்படியே கிடப்பில் போட முடியாது.
கூடங்குளம் பகுதி மக்களில் சிலர், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அணுஉலைகள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவை என்பதை எடுத்துரைத்து அவர்களின் அச்சத்தைப் போக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு சார்பில் 15 நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழுவினர் தமிழக அரசு பிரதிநிதிகளுடனும், கூடங்குளம் பகுதி மக்களுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெகு விரைவில் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு 1,000 மெகாவாட்: ""கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அணு மின் நிலையம் அமைக்க முன்வராதபோது பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று துணிந்து கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைய ஒப்புக் கொண்டதால் தமிழகத்துக்கு என்ன சிறப்பான பயன் கிடைக்கிறது'' என்ற கேள்விக்கும் பிரதமர் பதில் அளித்தார்.
கூடங்குளத்தில் முதற்கட்டமாக இரு அணுஉலைகள் செயல்படத் தொடங்கும்போது 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 1,000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும். மீதமுள்ள 1,000 மெகாவாட் மின்சாரம் மத்திய மின் தொகுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஏனைய மாநிலங்களுக்குத் தேவைக்கேற்றார்போல் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
""மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியும் மத்திய அரசு செவி சாய்க்காதது ஏன் என்கிற கேள்விக்கு, முதல்வரின் கோரிக்கையை மத்திய மின் துறை பரிசீலித்து உடனடியாக 100 மெகாவாட் மின்சாரத்தை வழங்க முடிவெடுத்திருக்கிறது, மேலும் தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.
முல்லைப் பெரியாறு விவகாரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் இணைந்து சுமுகத் தீர்வு காண மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன காரணத்தாலோ பலனளிக்கவில்லை. எனினும், எனது முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டேன். பிரச்னைக்கு விரைவில் சுமுகத் தீர்வு காண தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வேன்.
இந்த விவகாரத்தில் இரு மாநில முதல்வர்களும் ஒன்றாக அமர்ந்து பேசும்போது திருப்திகரமான முடிவு எட்டப்பட்டுவிடும் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முன்னின்று செயல்பட பிரதமர்தான் பொருத்தமான நபர் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.
தமிழ்நாடு, கேரளம் இரண்டுமே மத்திய அரசுக்கு மிகவும் முக்கியமானவை. இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை எழும்போது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.
லோக்பால் மசோதா: லோக்பால் மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக மத்திய அரசு இரவு, பகலாக உழைத்து வருகிறது. நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லோக்பால் மசோதா எடுத்துக் கொள்ளப்படும். அமைச்சரவை முடிவுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. லோக்பால் மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை.
ப. சிதம்பரம் விவகாரம்: தில்லி ஹோட்டல் அதிபர் எஸ்.எஸ். குப்தா மீதான கிரிமினல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகளை நாளிதழ்கள் மூலமாக மட்டுமே அறிந்து கொண்டேன். இது தொடர்பாக ப. சிதம்பரத்திடம் நேரிடையாகப் பேசவில்லை. இந்த விவகாரத்தில் அவர் அளித்திருக்கும் விளக்கமே போதுமானது.
அமைச்சரவை மாற்றம்: மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு எந்தவிதமான விதிமுறையும் கிடையாது. சூழ்நிலைக்கு ஏற்ப மட்டுமே முடிவு எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Post a Comment