Latest Movie :

காலை வாரிவிட கலைஞர் திட்டமிட, ஜெயலலிதா அவருக்கு வைத்த செக்!


தமிழக சட்டசபை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விசேடமாக கூட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததன் மூலம் ஒரே கல்லில் நான்கைந்து மாங்காய் அடித்திருக்கிறார். அதில் ஒன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வைக்கப்பட்டுள்ள சோதனை என்பதுதான் விசேஷம்.

முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டும் திட்டம் ஒன்றுதான் முதல்வருக்கு இருந்திருக்கின்றது. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை அக்கட்சியின் பிரதிநிதிகளை தமிழக அரசே டில்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அரசிடம் கொடுப்பது என்பதுதான் திட்டம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சில அதிகாரிகளுக்கு முதல்வரிடமிருந்து உத்தரவும் போயிருக்கின்றது.

இந்தக் கட்டத்தில் நடந்தது, ஒரு ஃபவுள் கேம்!

ஏற்பாடுகள் செய்யுமாறு உத்தரவிடப்பட்ட தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் கோபாலபுரத்துடன் கனெக்ஷனில் இருப்பவர். இவர் மூலமாக கதை கோபாலபுரம்வரை போனது என்கிறார்கள்.

இதையடுத்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ஆராய வேண்டும்” என்று ஒரு வரி சேர்க்கப்பட்டிருந்தது. அதன் நோக்கம் மிகவும் சிம்பிளானது. நாளைக்கே முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியபின், “இப்படிச் செய்ய வேண்டும் என்று நாம்தானே அரசுக்கு ஐடியா கொடுத்தோம்” என்று தி.மு.க. சொல்லிக் கொள்ளலாம்.

அதாவது, அப்படியொரு கூட்டம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடப்பதை ஒரு அதிகாரி மூலம் தெரிந்து கொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் கலைஞர்.

கலைஞரின் அறிக்கையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட உடனே முதல்வர் விஷயத்தைப் புரிந்து கொண்டார் என்கிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரி பற்றிய உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றும் பெறப்பட்டு, நடந்ததை உறுதிப் படுத்திக் கொண்டாராம் முதல்வர். (தமாஷ் என்னவென்றால் இந்த அதிகாரி இன்னமும் அதே பதவியில் தொடர்கிறார். எதற்கு விட்டு வைத்திருக்கிறார்களோ!)

அந்த நிலையில்தான் அனைத்துக் கட்சி கூட்டம் ட்ராப் செய்யப்பட்டு, சட்டசபை சிறப்புக் கூட்டம் நடாத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் அன்று சட்டசபைக்கு வரவேண்டும் என்ற உத்தரவு போயிருக்கிறது. சட்டசபை செயலகமும் தன் பங்குக்கு “இது முக்கிய பிரச்னை. எல்லா எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு அழைப்பு அனுப்பியுள்ளது. தே.மு.தி.க. சார்பிலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று முதலில் கூறி அரசுக்கு செக் வைக்க நினைத்த தி.மு.க. தலைவருக்கு, இப்போது ஜெயலலிதா செக் வைத்திருக்கிறார்.

நாளை கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், “அவரை சட்டசபைக்கு வர வைத்தோம் பார்த்தீர்களா” என்று சொல்லலாம். வராவிட்டால்? ”தமிழகமே கொந்தளிக்கும் மக்கள் பிரச்னைக்கே கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை” என்றும் சொல்லலாம்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger