சீமான் - அமீருக்கு உளவுத்துறை சம்மன்!
நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இயக்குனர் அமீருக்கும் தமிழக உளவுத்துறை போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். ஈழத்தில் போர் தீவிரமாக நடந்த போது அதனைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் தமிழக திரையுலகத்தினர் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதற்காக சீமான், அமீர் இருவர் மீதும் அப்போதே வழக்கு பதிவானது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் சீமான் அமீர் இருவருடைய முகவரிகளுக்கும் தமிழக உளவுத்துறை போலிசார் அந்த வழக்கு குறித்த விவரங்கள் கேட்டு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.
ஈழ ஆதரவு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில், சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கும் விஷயம் பலரையும் ஆச்சரியத்தோடு பார்க்க வைத்திருக்கிறது. இது குறித்த தகவலை இன்றுவரை சீமான் தரப்பு வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனாலும், சீமானுக்கு எதிராக இருக்கும் தமிழக போலீஸ் அதிகாரிகள் சிலர் இந்த விவகாரத்தை வைத்து சிக்கலைக் கொடுக்க காத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து சீமான் சீக்கிரமே வாய் திறப்பார் என்றும், முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேச அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். அமீர் தரப்போ வழக்கு வந்தால் சந்திக்க தயார் என சொல்லி வருகிறது.
Labels:
தமிழகம்

Post a Comment