டெல்லியில் தமிழர்கள் பேரணி
டெல்லி: முல்லைப்பெரியாறு அணையை விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி தமிழ்ச்சங்கத்தினர் புதன்கிழமையன்று பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்த அமைதிப் பேரணியில் டெல்லி தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் நீர்தேவையை நிறைவேற்றுவது முல்லைப் பெரியாறு அணைதான். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த அணை வலுவடைந்து விட்டதாக கூறி முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது.
5 மாவட்டங்கள் பாதிப்பு
கேரளா அணை கட்டினால் தமிழ்நாட்டின் ஜீவாதாரம் பாதிக்கப்படும். 5 மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பொய்த்துப்போகும் என்பதால் கேரள அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு மக்களும், அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையை காக்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மவுனம் சாதித்து வருகிறது.
டெல்லியில் பேரணி
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லியில் பேரணி நடத்த டெல்லி தமிழ்ச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 21ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் ஜெந்தர் மந்தரில் நடைபெறும் அமைதிப் பேரணியில் டெல்லி வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்

Post a Comment