புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - சென்னை போலீஸ்
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு
31.12.2011 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னை காவல் ஆணையாளர், சென்னை நகரில் உணவு விடுதி மற்றும் கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கீழ்க்காணும் நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள்:
* உணவு விடுதிகள் / கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் வளாகத்தினுள் அதற்காக அனுமதிக்கப்பட்ட அரங்கங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
* கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம், பொதுத் பணித் துறை மற்றும் தீயணைப்புத் துறையினரிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ மேடை அமைத்தல் கூடாது.
* நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
* வாகனங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தும் இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளின் முடிவில், குடிபோதையில் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதிக்கக் கூடாது. உணவு / கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்களை சாலைகளில் நிறத்த நிர்வாகத்தினர் அனுமதித்தல் கூடாது. இவ்விதி மீறல் ஏதேனும் நிகழுமாயின், நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
* மது பானங்கள் அனுமதிக்கப்பட்ட குடிமையங்களைத் தவிர, இதர பகுதிகளில் பரிமாறுதல் கூடாது.
* உணவு மற்றும் மதுபான சேவை (உரிமத்துடன்) அதிகாலை 2 மணிக்குள் முடித்துக் கொள்ளப்பட வேண்டும். நேரக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.
* குடிபோதை மற்றும் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை உணவு விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
* கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை இழிவாக கேலி செய்வதை தடுக்க, போதுமான ஊழியர்களை நியமித்தல் வேண்டும்.
* உணவு விடுதி வளாகத்தினுள் கண்டிப்பாக பட்டாசு வெடித்தல் கூடாது.
மேற்கூறிய விதிமுறைகளை மீறும் உணவு / கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள்:
*பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது.
* இழிவான முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பிறர்மீது வர்ணப் பொடிகள் / வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பொது மக்கள் தவிர்த்தல் வேண்டும்.
* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
* இருசக்கர வாகனம் மற்றும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பொதுமக்கள் கடலில் விளையாடுதல் மற்றும் படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முற்படுவதை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Labels:
தமிழகம்

Post a Comment