போராளி போட்ட புதிய பாதை!
சினிமா செய்திகளை முடிந்தமட்டும் தவிர்க்கவே நினைக்கிறோம்; ஆனாலும், அத்தி பூத்தார் போல் சில நிகழ்வுகள் கோடம்பாக்கத்தில் நடக்கிற போது, அதனை பெருமகிழ்வோடு பகிரத் தோன்றுகிறது. அந்த ரகத்தில் ஒன்றுதான் போராளி படமும்.
'இலங்கைக்கு விநியோக உரிமை கொடுக்க மாட்டேன்' என தைரியமாக சொன்ன போதே சசிகுமாருக்காக தலை வணங்கத் தோன்றியது. ஈழத்துக்காக குரல் கொடுப்பவர்களின் உணர்வையும் உழைப்பையும் நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவது இல்லை. ஆனாலும், குரலில் காட்டும் உறுதியை செயலில் காட்ட மறுக்கிறார்களே என்கிற ஆதங்கம் எப்போதும் நமக்கு உண்டு. அப்படியிருக்க, ஈழம் குறித்து வெளிப்படையாக வாய்வீரம் காட்டாது இருந்த இயக்குனர் சசிகுமார் தமிழ் சினிமாவின் முன்னோட்ட முயற்சியாக இலங்கைக்கு விநியோக உரிமையை மறுத்து அளித்திருந்த பேட்டி, நம்மை ஆச்சரியபடுத்தியது உண்மை. உணர்வு மிகுந்த தமிழ் படைப்பாளிகள் அதனை தொடர வேண்டும் என்பது எமது பிரார்த்தனை.
சரி, படத்துக்கு வருவோம்... எப்படி இருக்கிறான் போராளி?
சொந்த பந்தங்களால் துரத்தப்படுகிற ஒருவனின் கதை. சொத்துக்காக எதையும் செய்யத் துணிகிற சொந்தங்கள்... மனநிலை தவறியவனாக ஒருவனை சித்தரித்து செய்கிற கொடுமைகள்... அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான்? மற்றவர்களையும் எப்படி மீட்கிறான்? இதுவே கதைக்கான களம். அதனை சசியும் சமுத்திரகனியும் கையாண்டு இருக்கும் விதம்... அட!
சசிகுமார் திரையில் தெரிகிற போது எல்லாம் கைதட்டல் கிளம்புகிறது... அடுத்தடுத்த படங்களை சசி மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அந்த கைத்தட்டல் சில சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே வாய்த்தது. நம்மில் ஒருவனாக கிளம்பி வந்திருக்கும் சசிக்கு எப்படி இந்த கைத்தட்டல்? இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அவர் அள்ளித் தெளிக்கும் அறிவுரைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மற்றவர்கள் பேசி இருந்தால் நிச்சயம் தியேட்டரிலேயே கிண்டல் கிளம்பி இருக்கும்.
வாழ்கையின் போக்கை இலகுவாக காட்சிப்படுத்தி இருக்கிறார் சமுத்திரகனி. கையில் கிடைத்த கடைசி ஆயுதமாக சசியை பயன்படுத்தி இருக்கிறார். நிஜ வாழ்வில் நிறைய காயப்பட்டு இருப்பார் போலும். கதை, வசனம் எழுதிய போதே படத்தின் வெற்றி உறுதி என கனி நினைத்து இருக்கலாம். அந்த அளவுக்கு எந்த இடத்திலும் வேகம் குறையாத திரைக்கதை. அதில், வாழ்வியல் சிரமங்களையும், வதைப்புகளையும் கோர்வைப்படுத்தி இருக்கும் விதம் நம்மை கண்கலங்க வைக்கிறது. சசியை கட்டித் தூக்கிக் கொண்டு போகும் காட்சியில் தலைகீழாக தொங்குகிறது ரசிகனின் மனம்.
மிக வீரியமான கருத்துக்களை போகிற போக்கில் தூவிவிட்டு போவது அசாத்தியம்! ஒருவனின் மனதில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதுதான் இன்றைய சமூகத்துக்கு அவசியமானது. அதனை செவ்வனே செய்து இருக்கிறான் போராளி.
தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வியை மீடியாக்கள் சில வலிந்து கேட்டு இருக்கின்றன. படத்தின் முதல் வசனத்திலேயே அதற்கு பதில் இருக்கிறது. தாமதமாக சென்றவர்களுக்கு, சிலோன் பரோட்டா வசனம் மட்டும் போதும்... காரணம், நகைச்சுவை என்கிற பெயரில் சிலோன் என்கிற அரக்க சக்தியின் கன்னத்தில் அரை விட்டிருக்கும் சசி, நிச்சயம் களத்தில் நிற்கிற போராளிக்கு நிகரானவர்தானே..
சரி... போராளி படத்துக்கு இத்தனை நாட்கள் கடந்து ஏன் இந்த பாராட்டு என நீங்கள் கேட்கலாம்? போராளி படத்தை பாராட்டுவது அல்ல நம் நோக்கம். போராளி போட்டிருக்கும் இலங்கைக்கு எதிரான பாதையை இதரத் தமிழ்ப் படைப்பாளிகளும் பின்தொடர வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். போராளிக்கு அடுத்தபடியாய் இலங்கைக்கு விநியோக உரிமை கொடுக்க மாட்டேன் என எந்தத் தமிழன் சொல்கிறானோ... அவனே இரண்டாவது போராளி!
Labels:
சினிமா

+ comments + 8 comments
mika nalla katturai.
சசிகுமாரின் அத்தனை விதமான செயல்பாடுகளும் பாராட்டும் விதமாக இருக்கின்றன. இலங்கைக்கு வெளிநாட்டு விநியோக உரிமையைக் கொடுக்காததால் எவ்வளவு நஷ்டம் என்பதைக் கூட இதுவரை சசிகுமாரோ, சமுத்திரகனியோ சொல்லவில்லை. சமீபத்தில் கடலூர் புயல் பாதிப்புக்கு போய் சசிகுமார் உதவியதாக விகடனில் செய்தி படித்தேன். சொல்லிச் செய்பவர்களை விட சசி போல சொல்லாமல் செய்பவர்களைத் தான் பாராட்ட வேண்டும்!
சசிகுமார் சார்... உங்களோட அடுத்த படத்துல கனி சார்தான் கதாநாயகனா... இந்த மாதிரி இன்னும் ரெண்டு படம் சேர்ந்து பண்ணுனீங்கன்னா... கோடம்பாக்கத்துல பாதி பேரு வயிறு எரிஞ்சே செத்துடுவானுக. ரெண்டு பேரு சேர்ந்து இருந்தா இங்க யாருக்குமே புடிக்காது சார்... பாத்து சூதனமா இருந்துக்கங்க
வருங்கால சூப்பர் ஸ்டார் சசிக்குமார் தான்... மறந்தும் மண்ணுக்காகவோ மக்களுக்காகவோ போராடாத விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்களை மக்கள் விரைவிலேயே புறக்கணித்து மூலையில் உட்கார வைப்பார்கள். வாழ்த்துக்கள் சசிக்குமார்!
சினிமாகாரர்களின் ஈழ ஆர்வத்தை நான் ஒருபோதும் சட்டை
செய்வதே இல்லை. ஈழத்துக்காக பெரிதாகக் குரல் கொடுத்த
இயக்குநர்கள் பலரும் இன்றைக்கு எங்கே போனார்கள்? அமீர்,
பாரதிராஜா உள்ளிட்ட அத்தனை பேரும் அனைத்தையும் மறந்துவிட்டு
படம் எடுக்கப் போய்விட்டார்கள். இலங்கைக்கான விநியோக
உரிமையை மறுக்க அவர்கள்தானே குரல் கொடுத்திருக்க வேண்டும்.
சசிக்குமார் குரல் கொடுத்து, அதனை வெற்றிகரமாக அமல்படுத்திய
பிறகாவது இந்த ஈழ ஆதரவுப் புலிகள் அதனைப் பின்பற்றி
இருக்கலாமே... இத்தகைய வாய் வீரகளுக்கு மத்தியில் சசிக்குமார்
செய்திருக்கும் உணர்வு ததும்பிய உதவி போற்றத்தக்கது.
வாழ்த்துக்கள் சசிக்குமார்... வாழ்த்துக்கள் சமுத்திரக்கனி!
சசிகுமாரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. ஈழத் தமிழர்களின் வேதனையைப் பயன்படுத்தி வாழத் துடிப்பவர்களுக்கு மத்தியில், அவர்களின் வேதனையில் பங்கேற்கும் சசிகுமார் போன்றவர்கள் இருப்பதால் தான் இந்த மண்ணில் மழை பெய்கிறது. சசிக்குமார் இன்னும் பாலா வெற்றிகளைக் குவிக்க மனமார வாழ்த்துகிறேன்!
சூப்பர் பதிவு. தொடரட்டும் உங்களின் அரசியல் அலப்பறை...
ஈழத்துக்காக குரல் கொடுப்பவர்களின் உணர்வையும் உழைப்பையும் நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவது இல்லை.
ஒருவனின் மனதில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதுதான் இன்றைய சமூகத்துக்கு அவசியமானது.
சசிக்குமார் இன்னும் பாலா வெற்றிகளைக் குவிக்க மனமார வாழ்த்துகிறேன்
Post a Comment