போலீஸ் அதிகாரிகள் மாற்றம்... பின்னணி என்ன?
வழக்கமான தூக்கி அடிப்புதான்... ஆனாலும், இந்த முறை நடந்திருக்கும் தூக்கி அடிப்புக்கு வலுவான காரணங்களை சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
டெரர் காட்டிய டி.ராஜேந்திரன்
கடந்த தி.மு.க ஆட்சியில் சென்னை கமிஷனராக இருந்தவர். ஜெயலலிதா முதல்வரான உடன் சிறைத்துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டார். அடுத்த இரண்டே நாட்களில் உளவுத்துறையில் அமர்ந்து அசரடித்தார். தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் ஆசியைப் பெற்றவர், அ.தி.மு.க ஆட்சியில் மன்னார்குடி வகையறாக்களின் ஆசியோடு வளம் வந்தார். அதுவே அவருக்கு வினையானது.
எம்.நடராஜனுடன் அடிக்கடி கலந்து பேசுவதாக முதல்வருக்கு தகவல் வர, உடனடியாக விசாரிக்கப்பட்டார். விளைவு, உளவுத்துறையில் இருந்து தொழில் நுட்ப பிரிவுக்கு தூக்கி அடிக்கப்பட்டார்.
'மீண்டும் உளவுத்துறைக்கு வருவேன்' என சபதம் போட்டு அதற்கான நகர்த்தல்களை செய்து வந்தார். இந்த நேரத்தில் சசிகலா கார்டனை விட்டு வெளியேற, டி.ஆருக்கும் சிக்கல் வந்தது. நடராஜனின் ஆள் என்பதாலேயே மனித உரிமைகள் கமிஷனுக்கு தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார்.
எது நடந்தாலும் அதை பற்றி சட்டையே செய்து கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு அனுபவமும் பக்குவமும் கொண்டவர். அதனால், இந்த நடவடிக்கைக்கும் மனிதர் பெரிதாக ரியாக்ட் செய்து கொள்ளவில்லை. மன்னார்குடி செல்வாக்கு மறுபடியும் ஓங்கும் நாளில் மகத்தான பதவியில் நிச்சயம் வலம் வருவார் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
மாட்டிக்கொண்டாரா மகேந்திரன்?
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தொடர் ரெய்டு நடத்தியவர். 'அடுத்த ஆட்சியில் இவர் நிச்சயம் மண்டபத்தில் தான் இருப்பார்' என தி.மு.க. புள்ளிகள் கோபத்தோடு சொன்னார்கள். ஆனால், இந்த ஆட்சியிலேயே இவருக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டது தான் துயரம். தொடர் ரெய்டு நடத்தி கலக்கினாலும், குறிப்பிட்ட சிலருக்கு முன்கூட்டியே தகவலை கசிய விட்டார் என்பது இவர் மீதான புகார்.
ஆட்சிக்கு ஆகாத போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் விசுவாசமாக நடந்து கொள்கிறார் என தொடர் மொட்டை கடிதங்களும் படை எடுத்தன. 'நான் எடுக்கும் ரெய்டு நடவடிக்கைகளே என் தரப்பு நியாயத்தை சொல்லும்' என நம்பிக்கையோடு இருந்தார் மகேந்திரன்.
இவருக்கு கீழே பணியாற்றிய ஐ.ஜி. குணசீலனுக்கும் இவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே சரியாக ஒத்துப் போகவில்லை. ஒருகட்டத்தில் குணசீலனை தூக்கி அடிக்கவும் முயற்சி நடந்தது. கடந்த ஐந்து வருடங்களில் டம்மியான பதவிகளிலேயே அமர்த்தப்பட்டு, பழிவாங்கப்பட்டவர் குணசீலன். அதனால், அவரை மாற்ற இந்த அரசு சம்மதிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் மகேந்திரனுக்கு சொல்லாமலே குணசீலனிடம் சில முக்கிய நடவடிக்கைகளை ஒப்படைத்தது அரசு தரப்பு. இதில், மகேந்திரனுக்கு மிகுந்த மன வருத்தம். எப்படியும் நிலைமை சரியாகும் என நினைத்தார். 'ரெய்டு குறித்து நான் யாருக்கும் தகவல் சொல்லவில்லை. என்னை பழி வாங்க சிலர் கிளப்பி விடுகிறார்கள்' என உளவுத்துறை தலைவர் ராமானுஜத்திடம் விளக்கம் கொடுத்தார். ஆனாலும், மாற்றல் சூறாவளி இவரையும் தூக்கி வீசிவிட்டது.
சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு தூக்கி அடிக்கப்பட்டு இருக்கும் மகேந்திரன் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.
சேகருக்கு வந்த சிக்கல்!
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவர். அ.தி.மு.க. புள்ளிகள் பலரிடமும் அன்பு பாராட்டும் மனிதர். ஆன்மிக நம்பிக்கை மிகுதியானவர். பலமான பொறுப்பில் இருந்த போதும் உளவுத்துறைக்கோ, சென்னை சிட்டி கமிஷனர் பொறுப்புக்கோ வர வேண்டும் என்பது இவருடைய அவா. அதற்காக செல்வாக்கு புள்ளிகள் சிலரை சந்தித்தார். அவர்களும் சேகரை உளவுத்துறைக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சித்தார்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் சில காலம் உளவுத்துறையில் பணியாற்றியவர் சேகர். இவர் சென்னை கமிஷனராக இருந்த போதுதான் சட்டக் கல்லூரியில் மோதல் நடந்தது. அது, சாதிய மோதலாகவும் உருவெடுத்தது. இந்த தகவலை எல்லாம் மறைத்து சேகருக்காக சிபாரிசு செய்யப்பட்டது.
'எந்த நேரத்திலும் நல்ல செய்தி வரலாம்' என செல்வாக்கு புள்ளிகள் சொல்ல, சேகர் ஆவலோடு காத்திருந்தார். இந்த நேரத்தில் தான் செல்வாக்கு புள்ளிகளுக்கு சிக்கல் வந்தது. காட்டாறுக்கு தெரியுமா கருவேல மரமா சந்தன மரமா என்று. செல்வாக்கு புள்ளிகளுக்கு வந்த சிக்கல் சேகர் சாரையும் சிக்க வைத்தது.
ரயில்வே துறையில் ஏ.டி.ஜி.பி. என்கிற பதவியே இதுநாள் வரை கிடையாது. சேகர் சாருக்காகவே புதிதாக இந்த பதவி உருவாக்கப்பட்டு உள்ளது.
தட்டுத் தடுமாறிய தாமரைக்கண்ணன்!
பொன் மாணிக்கவேல் உளவுத்துறையில் இருந்து தூக்கி அடிக்கப்பட போவதாக பரபரப்பு கிளம்பிய போதே 'முக்குலத்து லாபிக்கு சரிவு தொடங்கி விட்டது' என்கிற கிசுகிசுவும் கிளம்பியது. ஆனால், உளவுத்துறைக்கு மறுபடியும் முக்குலத்து புள்ளியான தாமரைக்கண்ணனை கொண்டு வந்து பலரையும் புருவம் உயர்த்த வைத்தது முக்குலம். இவர் வந்த நேரமோ என்னவோ... சசிகலாவுக்கு சரிவு தொடங்கியது.
சசிகலா உறவுகளை வெளியே அனுப்பிய ஜெயலலிதா, 'அவர் சசிகலா சிபாரிசில் வந்தவராமே' என தாமரைக்கண்ணன் பற்றி உளவுத்துறை தலைவர் ராமானுஜத்திடம் குரலை உயர்த்தி இருக்கிறார். 'யாருடைய சிபாரிசில் வந்தவராக இருந்தாலும், அவர் நல்லபடி செயல்படக் கூடியவர். இதுகாலம் வரை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்' என சர்டிபிகேட் கொடுத்தார் ராம்ஸ்.
இதற்கிடையில், கார்டனில் கால் வைத்திருக்கும் ஆலோசனை குழு வடக்கத்திய அதிகாரிகள் தான் உளவுத்துறைக்கு சரிப்படுவார்கள் என சொல்ல, தாமரையின் உளவு நாற்காலி சற்றே தடுமாறத் தொடங்கியது. ராமானுஜம் பெரிதாக போராடிய நிலையிலும் தாமரையை காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உளவுத்துறையில் இருந்து தூக்கப்பட்டாலும், சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டதில் தாமரைக்கு சற்றே நிம்மதி.
மீண்டு(ம்) வந்த டி.கே.ராஜேந்திரன்!
கடந்த தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர்சேட் தேர்தல் ஆணையத்தால் தூக்கி அடிக்கப்பட்ட போது, நடுநிலையான அதிகாரியாக அந்த இடத்துக்கு வந்தவர் டி.கே.ராஜேந்திரன். தேர்தல் குளறுபடிகளை வெகுவாக தடுத்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே இவருக்கு பொற்காலம் ஆரம்பித்து விட்டதாக பலரும் வாழ்த்து சொன்னார்கள். நிர்வாக பிரிவில் இருந்த டி.கே.ஆர். ஒருவழியாக மீண்டு வந்து ஊழல் ஒழிப்பு பிரிவின் இயக்குனர் சீட்டில் அமர்ந்து இருக்கிறார்.
இஷ்டத்துக்கு ரெய்டோற்சவம் நடத்தாமல் முக்கிய புள்ளிகளை மட்டுமே சிக்க வைப்பது தான் இவருடைய திட்டமாம். இவருடைய வருகையால் அம்மையாருக்கு ஆகாத சில அதிகாரிகளும் ஆடிப்போய் இருக்கிறார்கள்.
சசிகலா உறவினர்களுக்கு எதிரான கோபம் முதல்வருக்கு இனியும் குறையா விட்டால், மன்னார்குடி உறவுகளின் வீடுகளுக்கும் ரெய்டு விடுகிற நிலை வரலாம். அதனை கச்சிதமாக செய்யக்கூடியவர் டி.கே.ஆர். உறவுகளுக்கு தலை வணங்காத தகுதியே இவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறது.
இதர மாற்றங்கள் எதற்காக?
உளவுப் பிரிவுக்கு அம்ரீஷ் பூஜாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ராஜேந்திரன், பொன் மாணிக்கவேல், தாமரைக்கண்ணன் என உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்ட தமிழ் அதிகாரிகள் யாரும் சரிவர செயல்படவில்லை என முதல்வர் எண்ணியதன் விளைவு... வடக்கத்திய அதிகாரியான பூஜாரி உளவுத்துறைக்கு வந்திருக்கிறார்.
எம்.கே.ஜா தொழில் நுட்ப பிரிவுக்கும், நரேந்திர பால் சிங் சி.பி.சி.ஐ.டி.க்கும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அம்மா ஆட்சி வந்தாலே வடக்கத்திய அதிகாரிகளுக்கு செல்வாக்கு அதிகமாவது வழக்கம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நியமனத்தில் இது அப்படியே உறுதியானாலும், போலீஸ் அதிகாரிகளில் குறிப்பிடத்தக்க பொறுப்புகளில் இதுகாலம் வரை தமிழ் அதிகாரிகளே இருந்தார்கள். இனி முக்கிய பொறுப்புகளுக்கு படிப்படியாக வடகத்திய அதிகாரிகளின் வரவு அதிகமாகும். -எம்.ஆர் .ராதா










Post a Comment