ஜாதகத்தால் சரிந்தாரா சசிகலா?
ஆட்சியைக் கைப்பற்ற திட்டம் தீட்டினார், உறவினர்கள் மூலமாக நிழல் அரசாங்கம் நடத்தினார், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சிலரோடு நட்பு பாராட்டினார்... இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறார்கள். ஆனால், சசிகலா கார்டனில் இருந்து விரட்டப்பட்டதற்கு என்னதான் காரணம் என்பது இப்போது வரை உறுதியாகத் தெரியவில்லை. பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ள ஜெயலலிதாவும் சசிகலாவும் ஆடும் நாடகம் இது என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் இருவரின் பிரிவுக்கும் என்ன தான் காரணம்?
ஜாதகம் தான் என அடித்துச் சொல்கிறார்கள் மன்னார்குடி உறவுக்காரர்கள். ஜெயலலிதாவுக்கு சனிப்பெயர்ச்சி மிக அற்புதமான நேரத்தைக் கொடுக்கிறது. ஆனால், சசிகலாவுக்கு அஷ்டம சனி இப்போதுதான் தொடங்குகிறது. சசிகலாவின் உறவுக்காரர்கள் 16 பேர்களில் 13 பேர்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை. இதற்கு பரிகாரம் செய்ய கொடநாட்டில் யாகம் வளர்க்கலாம் என சொல்லி ஜெயலலிதாவை அங்கு அழைத்துபோக சசிகலா முயன்றதாகவும், இதற்கிடையில் சில ஜாதகர்களை ஜெயலலிதா தனியே பார்த்ததாகவும், சசிகலா உறவுக்காரர்களை அருகில் வைத்திருந்தால் சாதக ரீதியாக மிகுந்த சறுக்கலையும், ஆயுள் பலத்தையும் இழக்கக் கூடும் என அவர்கள் சொன்னதாகவும், அதன் பிறகே சோ உள்ளிட்ட பிராமணப் புள்ளிகளை ஜெயலலிதா வரவழைத்து ஆலோசித்ததாகவும் சொல்கிறார்கள் மன்னார்குடி உறவுக்காரர்கள்.
ஜாதக விஷயத்தையே தங்களுக்கு சாதகமாக சோ உள்ளிட்ட பிராமண புள்ளிகள் மாற்றிக்கொண்டதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கொடநாடு பயணத்தை அரசு தரப்பு அறிவிப்பாகவே வெளியிட்ட ஜெயலலிதா திடீரென அதில் இருந்து பின்வாங்கியது ஏன் என்பதும் இவர்களின் கேள்வி.
இதற்கிடையில் மன்னார்குடி பகுதியில் ஒரு நிர்வாண சாமியார் அலைந்து திரிந்ததாகவும், அவரைத் தரிசிக்க சசிகலாவின் தம்பி திவாகரன் நேரில் சென்றதாகவும்,.அப்போது திவகரனை அந்த சாமியார் கேவலமாக திட்டியதாகவும் , பதிலுக்கு திவாகரனின் ஆதரவாளர்கள் அவரை புடைத்து எடுத்ததாகவும், அதையடுத்து அவர் விட்ட சாபமே இப்போது பலித்து இருப்பதாகவும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பயங்கரமான பேச்சு!
முக்குலத்துப் பெண்ணை தனக்கு நிகராக கொண்டால் ஆயுள் பலமும், ஆத்மா பலமும் கிட்டும் என ஜோதிடர்கள் சொன்னதை நம்பித்தான் திருக்கடையூர் சென்று சசிகலாவின் கழுத்தில் மாலை மாற்றினார் ஜெயலலிதா. அப்போது மீடியாக்களின் கிண்டலையோ , நாத்திக புள்ளிகளின் விமர்சனத்தையோ ஜெயலலிதா சட்டை செய்யவில்லை. ஜாதகத்தை அவர் எந்தளவுக்கு நம்புவார் என்பதற்கு இதனையே பலரும் உதாரணமாக சொல்கிறார்கள்.
சசிகலாவையும் , அவருடைய உறவுக்காரர்களையும் அருகே வைத்திருந்தால் ஜாதகத்தில் சரிவு ஏற்பட்டு , சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கார்டனில் கணிப்பு சொல்லப்பட்ட பிறகே, நீக்கப்படலாம் தொடங்கியதாகவும் சொல்கிறார்கள்.
ஜாதகத்தாலோ... மக்களுக்கான சாதகத்தாலோ... ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் இதேபோல் தூள் கிளப்பினால் சரிதான்!
- எம்.ஆர்.ராதா






Post a Comment