அந்த பேட்டி...
''நான் திரு. கோவைத்தம்பி அவர்களிடம் கதை சொல்ல சென்றேன். அப்போது அவர் நடிகை ராதா, அம்பிகாவின் கால்சீட்டை வைத்திருந்தார். அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு கதையை முடிவு செய்து வைத்திருந்தார். அந்த கதையை படமாக்கி தரும்படி என்னிடம் கேட்டார். அதற்கு நான் இந்த கதை என்னுடை கதை இல்லை. என்னுடைய படம் என்பதை பிரதிபலிக்கும் எந்த ஒரு விசயமும் இந்த படத்தில் இல்லை.
இது போன்ற படத்தை என்னால் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் அது என்னுடைய படமாக இருக்காது என்று அவரிடம் கூறினேன். உடனே அவர் எனக்கு முன்னாலேயே ராதா, அம்பிகாவின் கால்சீட்டை கேன்சல் செய்து விட்டு உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். ஒரு நல்ல கதையை கொண்டு வாருங்கள் நாம் படம் செய்யலாம் என்றார். என் மீது இவ்வளவு மரியாதை வைத்து இருக்கிறாரே அவருக்காக நாம் ஒரு படம் பண்ணலாமே என்று எண்ணி அந்தப் படத்தை இயக்கும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை கற்றுக்கொண்டே அந்த படத்தை இயக்கி முடித்தேன். அந்த படம் தான் எனது அடுத்த படத்திற்கான தலைப்பைத் தந்தது. அது 'மௌனராகம்'. அனாலும், நான் இயக்கிய படங்களிலேயே மிகவும் மோசமான படம் 'இதயக்கோவில்''.
மணிரத்னத்தின் இந்த வார்த்தைகள் தான் 'இதயக்கோவில் படத் தயாரிப்பாளர் கோவைத்தம்பியை கொதித்து எழச்செய்து இருக்கிறது.
''இதயக்கோவில் படம் பண்ணும் போது மணிரத்னம் பெரிய இயக்குனர் இல்லை.ஆனால், அப்போது என்னுடைய மதர்லேண்ட் பிக்சர்ஸ் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து புகழின் உச்சியில் இருந்த பெரிய நிறுவனம். அப்போதைய பெரிய இயக்குனர்கள் பலரும் என்னுடைய கம்பெனிக்கு படம் செய்ய விரும்பிய நேரம். நானாக மணிரத்தினத்திடம் போய் என்னுடைய கம்பெனிக்கு படம் பண்ணித்தர கேட்கவில்லை. அவர் தான் என்னுடைய கம்பெனிக்கு பல முறை அழைந்து தனக்கு ஒரு படம் பண்ண ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டார். என்னிடம் இதயக்கோவில் இயக்கும் வாய்ப்பை தங்களுக்கு வழங்குமாறு பல முன்னணி இயக்குனர்களும் என்னிடம் கேட்டனர். நான்தான் நெடு நாட்களாக மணிரத்தினம் அழைகிறாரே அவருக்கே கொடுப்போம் என்று கொடுத்தேன். இத்தனைக்கும் அப்போது மணிரத்தினத்திற்கு சரிவர சினிமா எடுக்க தெரியாது. அதனால் நான் நிர்ணயித்த பட்ஜெட்டை விட எனக்கு பல மடங்கு செலவானது. இன்னும் பச்சையாக சொல்லப்போனால்... என்னுடைய இதயக்கோவில் படத்தில் தான் மணிரத்தினம் சினிமாவையே கற்றுக் கொண்டார்.
மணிரத்தினத்திற்கு வக்காலத்து வங்கப் போய் எங்கள் நிறுவனத்திற்கும் இளையராஜாவுக்கும் பிணக்கு வந்தது. இவை எல்லாம் மணிரத்தினத்திற்கு நன்றாக தெரியும்.ஆனால், இதயக்கோவில் படத்திற்கு பிறகு உலக படங்களில் அங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் உருவி தன்னை ஒரு உலக தரமான இயக்குனர் என்று காட்டிக்கொண்டார். சரி... அது அவரின் விருப்பம். அதில் தலையிடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று விட்டு விட்டேன்.இந்த சமயத்தில் 'இருவர்' படம் வெளி வந்தது. அந்த படம் தமிழத்தின் இரு பெரும் தலைவர்கள் பற்றிய படம் என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள். உண்மையில் அந்த படத்தில் திராவிட இயக்க வரலாறும், இரு பெரும் அரசியல் தலைவர்களின் வாழ்வும் கேலிகூத்தாக்கப்பட்டு இருந்தது கண்டு என்னால் பொறுக்க முடியவில்லை. அதனால் அந்த படத்தினை கடுமையாக சாடி அறிக்கைகள் விட்டேன். இது மணிரத்தினத்தை கோபத்தில் ஆழ்த்தி விட்டது போலும். அதன் பிறகு என்னுடைய கம்பெனியில் இயக்கிய 'இதயக்கோவில்' படம் பற்றி மிகவும் தரக் குறைவாக பேச ஆரம்பித்தார். அப்போதே அவருக்கு என்னுடைய ஆதங்கத்தையும் கண்டனத்தையும் தெரிவித்தேன்.
ஆனாலும், மீண்டும் மீண்டும் என்னுடைய கம்பெனியில் படம் இயக்கியது தான் மணிரத்தினம் செய்த பெரிய தவறு என்றும், இதயக்கோவில் மிக மோசமான படம் என்பது போன்ற செய்திகளை பத்திரிகைகளில் வெளிவர வைத்து தனக்கு எதுவும் தெரியாதது போல் இருக்கிறார். இத்தனைக்கும் இதயக்கோவில் ஒரு வெள்ளி விழா படம்.
அவரின் கூற்றுப்படி இதயக்கோவில் மோசமான படமாகவே வைத்துக் கொள்வோம். அவர் இதயக்கோவிலுக்கு முன்பு இயக்கிய படங்கள் எல்லாம் என்ன உலக தரமான படங்களா? இல்லை சமுகம் சார்ந்த படங்களா? அவைகள் அனைத்துமே மூன்றாம் நிலை மசாலா படங்கள் தானே. தற்போது அவர் இயக்கம் எல்லாப் படமுமே எதோ ஒரு வெளிநாட்டு படத்தின் அப்பட்ட தழுவல் என்று பரவலான ஒரு பேச்சு இருக்கு. அவை பற்றி எல்லாம் பேசுவதை நாகரிகம் கருதி நான் தவிர்க்கிறேன்,
இது போன்று செய்திகளும் இனி தொடராமல் இருக்க மணிரத்தினம் அவர்கள் தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்க வேண்டும். இல்லையேல் நானும் அவரின் படங்கள் பற்றிய முழுமையான விமர்சனத்தை மக்கள் முன் வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரும். அது மணி அவர்களின் கௌரவத்துக்கும் என்னுடைய கண்ணியத்திற்கும் அழகாக இருக்காது'' என கொந்தளிக்கிறார் கோவைத்தம்பி.
தமிழ் சினிமா உலகை பரபரக்க வைத்திருக்கும் இந்த விவகாரத்தில் மணிரத்னம் - கோவைத்தம்பி இருவருக்கும் சமாதானம் ஏற்படுத்தவும் முயற்சி நடக்கிறது. அமைதியான சுபாவம் கொண்ட மணிரத்னம் கோவைதம்பியின் பேச்சால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக 'கடல்' பட யூனிட் ஆட்கள் சொல்கிறார்கள்.
- எம்.சபா


.bmp)


Post a Comment