தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த வீர மறவர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் தினம் வரும் நவம்பர் 27. கார்த்திகை நாளாக, களத்தில் மடிந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாளாக, அவர்கள் விட்டுச்சென்ற பணியைத் தொய்வில்லாமல் தொடர உறுதி ஏற்கும் நாளாக மாவீரர் தினத்தைப் போற்றுகிறார்கள் உலகெங்கும் வாழும் தமிழீழ மைந்தர்கள்.
தமிழீழமே சுடுகாடாகிக் கிடக்கும் இன்றைய காலத்தில், மாவீரர் தினம் மிக முக்கியமான நினைவு நிகழ்வு. முள்ளிவாய்க்கால் பயங்கரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்றழிக்கப்பட்ட நிகழ்வு, இன அழிப்பின் துயர சாட்சியாக நிலைத்திருக்கும் நிலையில், இந்த வருட மாவீரர் தினம் பல முன்னெடுப்புகளுக்கான உந்து சக்தியாக அமைய வேண்டும். ஈழ மண்ணில் நிகழ்ந்த இன அழிப்பும் போர்க்கொடுரங்களும் ஐ.நா. உள்ளிட்ட உலக மன்றங்களில் நீதிக்காகக் காத்திருக்கும் தருணம் இது. கண்முன்னே நடந்த தாங்கொணா துயரத்தை தமிழ்த் தலைமுறை தன் மனதில் நிறுத்தி, அடுத்தகட்ட அரசியல் முன்னெடுப்புகளை எடுக்கத் துணிய வேண்டும்.
புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக இந்திய - இலங்கை அரசுகள் ஆவேசம் பாடும் இந்தக் கணத்தில், நியாயபூர்வமான நடவடிக்கைகளையும் அடுத்தகட்ட அரசியல் முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டிய கடமை இன்றைய இளைய சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது?
கனடாவில் கச்சேரியும், சர்வதேச அரங்குகளில் புலிகளை விமர்சிக்கும் அரக்கத்தனங்களும் அரங்கேறுவதுதான் அந்த ஆத்மாக்களுக்கு நாம் செய்யும்
நன்றிக்கடனா? இளையராஜா எங்கே வேண்டுமானாலும் கச்சேரி நடத்தட்டும்... காசு பணத்தைக் குவிக்கட்டும். ஆனால், மாவீரர்களின் மரணங்களை நினைவுகூறும் தருணத்தில் அத்தகைய உணர்வுகளை அசிங்கப்படுத்தவும், இளைய தலைமுறையின் எண்ணங்களை பொழுதுபோக்கில் லயிக்க வைக்கவும் இசைக்கச்சேரிகள் நடத்தப்படுவது இழவு வீட்டு சங்கீதத்துக்கு சமமான கொடுமையல்லவா? இந்த கொண்டாட்டங்களை அடுத்த மாதம் நடத்தினால் தமிழ் ரசிகர்கள் வராமல் போய்விடுவார்களா? இந்தக் கச்சேரிக்கு விஜய் தொலைகாட்சி பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை பரப்புரை பாடிய அவலத்தை எங்கே சொல்வது?
இளையராஜா நிகழ்ச்சி சீமான் போன்றவர்களின் கடுமையான எதிர்ப்புகளால் தடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேசங்களிலும் சிறிய அளவிலான சினிமா ஆட்களை வைத்து இந்த மாதத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் பின்னணியில் சிங்கள அரசின் நயவஞ்சகத்தனம் இருப்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த உண்மை.
இதற்கிடையில் தமிழக பத்திரிக்கைகள் மூலமாக இந்திய உளவுத்துறை பரப்பும் செய்திகளும் கொடுரத்தின் உச்சமாக உலகளாவிய தமிழர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இந்த வார ஆனந்த விகடனில், 'நேற்று நான் போராளி... இன்று நான் பாலியல் தொழிலாளி!" என்கிற கட்டுரை வெளியாகி இருக்கிறது. இந்தக் கட்டுரை உண்மையா பொய்யா என்கிற ஆராய்ச்சிக்கு நாம் போக விரும்பவில்லை. ஆனால், ஒரு போராளி பாலியல் தொழிலாளியாக மாறியதாகவும், அவருக்கு உதவக்கூட துப்பற்றத் தமிழகத் தலைவர்களின் அரசியல், ஈழ விடிவுக்குத் தேவையற்றதாகவும் சொல்லப்பட்டிருப்பது எத்தனை பேரின் போராட்டங்களை கொச்சைப் படுத்துகிற செயல்? அரைகுறை உயிரோடு அல்லாடும் ஒரு பெண் போராளி தங்களின் துயர் தீர்க்க துப்பற்ற இந்த சமூகத்தை எப்படி வேண்டுமானாலும் சாடி இருக்கலாம். ஆனால், அதனை பன்முகப் பார்வைக்குக் கொண்டுவந்த நோக்கம் சரியானதுதானா?
இதற்கிடையில் பிரபாகரன் மறுபடியும் வருவார்... பொட்டம்மான் மாவீரர் உரையாற்றுவார் என வழக்கம்போல போலி நம்பிக்கைகளைக் கிளப்பிவிட்டு, அவை நடக்காத பட்சத்தில் 'புலிகள் அவ்வளவுதான்' என சுணங்கிப்போகிற நிலையை இணையதளங்களிலும் இதர மீடியாக்களிலும் சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள்.
மண்ணுக்காக மடிந்த மாவீர்களுக்கு தமிழர்களாக நாம் செய்யும் கைம்மாறு இதுதானா? அவர்களின் உணர்வுப்பூர்வமான தியாகங்களை மனதில் ஏந்தி, அனைத்து விதங்களிலும் நியாயமான அவர்களின் சுதந்திர தாகம் தீர்க்கபடவும், போர் முடிந்தும் வாழ்வாதார நிலையற்று பிழைப்புக்கு அல்லாடும் தமிழர்களைக் கரையேற்றவும் உறுதி எடுக்க வேண்டிய தமிழ்ப் பிள்ளைகள் பொழுதுபோக்கிலும் போலித்தனங்களிலும் மூழ்குதல்தான் முறையா?
நாம் போராட வேண்டாம்... புரட்சி செய்ய வேண்டாம்... ஆனால், களத்தில் மடிந்த கடமையாளர்களைக் களங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும். முடிந்தால் இந்த மாதம் 27-ம் தேதி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள். இல்லையேல், அன்றைக்கும் உங்களின் அலுவல்களில் தீவிரமாக மூழ்கி விடுங்கள். உங்களின் வெட்டிப் பேச்சுக்கும் இற்றுப்போன விவாதங்களுக்கும் மாவீரர்கள் இனியும் இரையாக வேண்டாம்!
மாவீர்களுக்கு வீர வணக்கம்!
- கும்பல்



Post a Comment