Latest Movie :

''நான் நல்ல படங்கள் எடுத்ததில்லை!"


விக்ரமன் ஒப்புதல் வாக்குமூலம் 


மேகம் போர்த்திய வானம், பழுப்பு நிறப் பகல் பொழுது, மெல்லிய மழைத்தூரல், ஈரம் படர்ந்த காற்று, கருமை ஏறிய தார்ச்சாலை... இயக்குனர் விக்ரமனை  சந்தித்த நாளும் அத்தனை குளுமையானது.எந்த ஒரு காத்திருப்புகளுக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகுந்த உற்சாகமாய் பேசினார். தற்போது இயக்கும் 'இளமைக்காலங்கள்', 'நினைத்தது யாரோ' படங்கள் பற்றியும், தற்போதைய தமிழ் சினிமா பற்றியும் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பகிர்வு இங்கே.... 


''தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் நீங்கள். சமீபத்திய வருடங்களில் உங்கள் படங்களைப் பார்க்க முடியவில்லையே.... இந்த தேக்க நிலைக்கு என்ன காரணம்?'' 
''விக்ரமன் படங்கள் என்றாலே ஒரே மாதிரி இருக்கும்னு என் காது படவே எல்லோரும் சொன்னாங்க. அது எந்த அளவுக்கு உண்மைன்னு யோசிச்சப்பதான் எனக்கு சில உண்மைகள் புரிந்தது. என்னோட படங்களின் கதையோ, கதையின் நாயகன், நாயகியோ, பாத்திரங்களோ  ஒரே மாதிரியானவங்க கிடையாது. படத்தில் இடம் பெற்ற பின்னணி  இசையும், ஒரே பாடலில் நாயகன் உச்சத்தைத் தொடுவது போன்ற காட்சி அமைப்புகளும் ஒரே மாதிரியான படங்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருகின்றன. இந்த விஷயம் எனக்குத் தாமதமாகத்தான் புரிந்தது. எனது முந்தைய படங்களின் சாயல் எதுவும் இல்லாத முற்றிலும் மாறுபட்ட ஒரு விக்ரமன்  படத்தை எடுக்க விரும்பினேன். அப்படி ஒரு படத்தை எடுக்க என்னை நானே தயார்படுத்திக்க வேண்டி இருந்தது. இந்த இடைவெளிக்கு அதுவும் ஒரு காரணம். தற்போது 'இளமைக் காலங்கள்', 'நினைத்தது யாரோ'ன்னு இரண்டு படங்களை இயக்கிக்கிட்டு  இருக்கேன். விக்கிரமனின் புது விலாசத்தை நீங்கள் சீக்கிரமே பார்க்கலாம்!"
''இடைவெளியை நிரப்புவதற்குத்தான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களா?" 
''அதுக்காக இல்லை. 'இளமைக்காலங்கள்' 2010-ல் ஆரமித்த  படம். சில காரணங்களால் அந்த படத்தை முடிக்க  முடியலை. அதனால அந்த படத்தை தூக்கி ஓரமா வச்சுட்டு,'நினைத்தது யாரோ' படத்தை எடுக்கத் தொடங்கினேன். அந்தப் படம் தற்சமயம் முடியும் தருவாயில் இருக்கு. இந்த நேரத்தில் 'இளமைக்காலங்கள்' தயாரிப்பாளரும் அந்த படத்தை முடிச்சு கொடுக்க சொல்லி கேட்டார். சரி அதையும் முடிச்சு கொடுக்கலாமேன்னு அதற்கான வேலைகள்ல இறங்கினேன் . இப்ப இரண்டு படமும் முடியிற நிலையில் இருக்கு. முதல் படமா 'நினைத்தது யாரோ' வெளிவரும்." 
''பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர் நீங்கள்... தற்போது புது முகங்களை வைத்து எடுப்பதற்கு என்ன காரணம்?''
''நான் இதுவரை எந்த ஹீரோவுக்காவும் கதை பண்ணியது இல்லை. முதல்ல
கதை. அதை முழுமையா எழுதி முடிப்பேன். அதன் பிறகு அந்த பாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை அதில நடிக்க வைப்பேன். அதுதான் நான் வழக்கமா செய்யுறது.பூவே உனக்காக படத்துல விஜய் நடிக்கும் போதும், 'வானத்தை போல' படத்துல விஜயகாந்த் நடிக்கும் போதும் இதுதான் நடந்தது. 'மரியாதை' படத்துக்கு பிறகு முற்றிலும் புது முகங்களை போட்டு 'இளமைக்காலங்கள்' படம் எடுத்தேன். அதோட ரஷ்  பார்த்தப்போ  திருப்தியா இருந்தது. எல்லோருடைய நடிப்பும் நல்லா இருந்தது.எனக்கே  ஏதோ ஒரு புது இயக்குனரோட படத்தை பார்ப்பது போல உணர்வு வந்தது. அதனால இப்ப எடுத்துக்கிட்டு இருக்கிற 'நினைத்தது யாரோ' படத்துலயும் புதுமுகங்களைப்  போட்டு எடுக்கிறேன்!"  
''இந்தப் படங்கள் விக்ரமனின் வேறொரு  பிம்பத்தை காட்டுமா?"
''நிச்சயமா..வழக்கமா என்னோட படங்கள்ல குடும்பஉறவுகள் பெரிசா இருக்கும். அதுல ஒரு பகுதியா காதலும்,காதலர்களும்  வந்து போவாங்க. ஆனா இப்ப எடுக்கிற படங்கள்ல காதலும் காதலர்களும் முழுமையா இருக்கிறாங்க. அதுல குடும்பம் ஒரு பகுதியா வந்து போகுது. லா லா மீயுசிக்கையும் சுத்தமா தவிர்த்திருக்கிறேன். அதுக்காக S.A. ராஜ்குமாரை விலக்கி 'வைச்சிருக்கேன். அது போல என்னுடைய படங்களில் இருக்கும்  சில விஷங்களை அப்படியே இருக்கவும் அனுமதிச்சிருக்கேன். இந்த படத்துலயும் 3 பாடல் ஆசிரியர்களை அறிமுகப் படுத்துறேன். என்னோட படத்துல எப்போதுமே ஆபாசம் இருக்காது. தம்பி பொண்டாட்டியை வக்கிரமா பார்க்கிற பாத்திரங்கள் இருக்காது. பெரிய கோடரிய எடுத்து மண்டைய பிளக்குற கோரமான வன்முறை இருக்காது. ஆனால், எளிய மனிதர்களோட வாழ்க்கை இருக்கும். கனவுகளை மட்டும் வச்சுகிட்டு அதை நனவாக்கப் போராடும் ஒருவனோட வாழ்க்கை இருக்கும்.அவனுக்கு பக்கபலமா ஒரு நண்பன் இருப்பான்.ஒரு காதலி இருப்பாள்." 

''நீங்க சொல்றத பார்த்தா மறுபடியும் உங்க கதாநாயகன்கள் ஒரே பாட்டுள்ள பெரியா ஆளா வந்திருவாங்க போல இருக்கே?"
''ஒரே பாட்ல ஒருத்தன் பெரியாள வருவது, பணக்காரனா ஆவது எல்லாம் சாத்திய படாது, லாஜிக் இல்லாத விஷயமுன்னு எல்லோரும் சொல்வது எனக்கும் தெரியும்.ரெண்டரை மணிநேரம் ஓடுற ஒரு படத்துல ரெண்டு மணி நேரம் அவனை(ஹீரோவை ) கஷ்டப்படுகிற மாதிரி காட்டும்போது அடுத்த அரை மணி நேரமாவது அவன் முன்னேறினான்; இனி   சந்தோசமா இருப்பான்னு காட்டினால் தானே அந்த கதாபாத்திரம் உயிர்ப்போட இருக்கும்.     ஹீரோ கஷ்டப்பட்டான், கஷ்டப்பட்டான்கடைசி வரை கஷ்டப்பட்டுக்கிட்டே இருந்தான்னு சொன்னா அந்த பாத்திரத்தில் ஜீவன் இருக்காதே.
நான் கடத்தல் தொழில் செய்பவனையோ, கஞ்சா விற்பவனையோ, பிச்சை எடுப்பவனையோ, இல்ல நம்பர் டூ பிஸ்னஸ் ஆட்களையோ ஒரே பாட்டுல பெரிய ஆளா  வருவது போல காட்டல. முன்னேறுவதற்காக கடுமையா உழைப்பவனை, போராடுகிறவனை, புறக்கணிக்கப்  பட்டவனை, வாழ்க்கையோட விளிம்பில் இருக்கிறவனைத்தான் வாழ்க்கையில ஜெயிக்கிறதா காட்டி இருக்கிறேன். என்னைப் பொருத்தமட்டில் உழைக்கிறவன் ஜெயிக்கணும். கஷ்டப்பட்டவன் முன்னேறனும். புறக்கணிக்கப்பட்டவன் சந்தோசமா வாழனும். அவ்வளவுதான். அதை என்னோட படத்துலயும் பாடல்களிலும் காட்டுறேன். இன்னைக்கு சென்னையில இருக்கிற பெரிய பெரிய ஆட்களில் முக்கால் வாசிப் பேரு ஒத்த பைசா இல்லாம வந்து தன்னோட உழைப்பால் இன்னைக்கு பெரிய இடத்துல இருக்காங்க.
'சார் நான் தற்கொலை செய்ய வேண்டிய நிலையில இருந்தேன். உங்களோட 'நான் பேச நினைப்பதெல்லாம்' படம்தான் என்னோட தற்கொலை முடிவை மாத்தியது. இன்னைக்கு நான் படம் பண்றதுக்கு உங்க படம் தான் சார் காரணம்'னு சொன்ன  ஒரு மனுஷனை இப்போ நினைச்சு பார்க்குறேன். அந்த கணத்தில் உண்மையிலே நான் ஆடிப்போய்ட்டேன். என்னைக்கும் இல்லாம என்னோட படங்கள் மீது எனக்கே மரியாதை உண்டானது. ஒரு படைப்போட வேலையே நாலு பேருக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான். அதனை என்னோட படங்கள் செய்யுதுன்னு நினைக்கிறேன்."
 ''தமிழ் சினிமாவுல சிறப்பான படங்கள் இயக்கிய திருப்தி உங்களுக்கு இருக்குதானே?''
''அப்படி ஒரு எண்ணம் துளி கூட இல்லை. 30 வருடங்களுக்கு முன்னால வந்த 'உதிரிப்பூக்கள்' உன்னதமான படமா இருக்கு. 60 வருடங்களுக்கு  முன்னால வெளிவந்த 'ரத்தக்கண்ணீர்'  தலை சிறந்த படங்களில் ஒண்ணா இருக்கு. இதுபோன்ற ஒரு படத்தைக்கூட விக்ரமன் இதுவரை இயக்கவில்லை என்பதுதான் உண்மை." 
''அது போன்ற படங்களை இயக்கும் எண்ணம் இருக்கா?'' 
''நிறைய  இருக்கு. எந்த அளவுக்கு நான் அதை எடுக்கப் போறேன்னு தெரியலை. 
காலத்துக்கும் மனதில் நிற்கிற மாதிரியான படத்தை எடுக்கணும்கிற துடிப்பு இருக்கு. அதுக்காக போராட மனசு இருக்கு. சீக்கிரமே அப்படியொரு படத்தை எடுக்கணும்." 
''நீங்கள் தற்போது எடுத்துவரும் இரு படங்கள் அந்தப் பட்டியலில் வராதா?"
''இல்லை. எனக்குத் தற்போது ஒரு ஹிட் படம் தேவைப்படுது. அந்த ஹிட்டுக்காக மட்டும் தான் இப்ப படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த இரண்டு படங்களையும் முடிச்சுட்டு காலத்துக்கும் பேர் சொல்லும் படத்தைக் கையில் எடுப்பேன்!"  
''தற்போது வரும் தமிழ் சினிமாக்கள் எப்படி இருக்கு?'' 
''ரொம்ப  நல்லா  இருக்கு.சமீபத்தில் சுந்தரபாண்டியன் படம் பார்த்தேன். அருமையான ட்ராவல். கதையும் கதாநாயகனும் நம்மை மூணு மணி நேரம் கட்டிப் போட்டுட்றாங்க... தமிழ்ல மட்டும் தான் எல்லாவகையான படமும் வருது. இன்னைக்கு வருகிற பெரும்பாலான படங்கள் தரமானதா வருது. இங்கதான் எல்லா வகையான படத்தை ரசிக்கிற மக்களும் இருக்காங்க.'7- ஆம் அறிவு' போன்ற படங்கள் உலக அளவில் வியாபாரத் தளத்தை அமைச்சு கொடுக்குது. உலக படங்களுக்கு இணையா 'வழக்கு எண் 18 / 9' போன்ற மனசை ஆழமா பிசையிற படங்கள் வருது, அதுபோல மூட நம்பிக்கையை சாடுகிற 'வெங்காயம்' போன்ற நேர்த்தியான படங்களும் வெளிவருது. வெங்காயம் படத்திற்கு நிகரா மூடநம்பிக்கையை சாடிய படம் சமகால தமிழ் சினிமாவில்  இல்லை. பெரியார் போன்றவர்கள் இருந்திருந்தால் இந்த படம் உயர்வான அங்கீகாரத்தை பெற்று இருக்கும். இது போன்ற  படங்கள் வசூல் ரீதியா சரியா போகலைன்னு தான் எனக்கு வருத்தம்.'' 
''தரமான படங்கள் சரியா போகாததற்கு என்ன காரணம்?" 
''ஒரே காரணம் சாட்டிலைட் சேனல்களின் அபார வளர்ச்சி மட்டுமே. இன்னும் சில வருடத்தில் உலக அளவில் தமிழ்லதான் அதிகமான சாட்டிலைட் சேனல் இருக்கும்.  இன்று படம் வெளிவந்து அடுத்த அரை நாளில் உங்கள் படத்தை நீங்களே யூ ட்யுபில் பார்க்கலாம். இப்படி இருந்தால் படம் பார்ப்பவன் எப்படி தியேட்டருக்கு வருவான்? திருட்டு விசிடி தடுப்பும் சரியா இல்லை. அப்புறம் எப்படி படம் ஓடும்?"   
''நீங்கள் புது வசந்தம் இயக்கிய போது பாடலாசிரியர் வைரமுத்து உங்களை மதிக்கவில்லை என்றும்,அதனால்தான் நீங்கள் புது புது பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துவதாகவும் பேச்சு இருக்கே... உண்மையா?"
''கொஞ்சம்கூட இதில் உண்மை இல்லை. தமிழ் சினிமாவுல தலை சிறந்த பாடல்களை வைரமுத்துவும் வாலியும் எழுதி இருக்காங்க. அவங்களோட தீவிரமான ரசிகர்களில் நானும் ஒருத்தன் என்பதுதான் உண்மை. அவங்க இருக்கிற உயரத்துக்கு என்னால நெருங்க முடியல. அதனால என்னை அணுகும் ஆட்களை வச்சு பாட்டு எழுதுறேன். புது பாடலாசிரியருங்கிட்டே    பாடல் வாங்குவது எனக்கு எளிதாக இருக்கிறது. நம்மளால நாலு பேரு உருவாகணும்கிற  எண்ணமும் இதுக்கு காரணம்!". 
''உங்கள் அபிமான நடிகர் முரளி பற்றி ?'' 
 ''அவரை சிறந்த நடிகர் என்பதைவிட என்னோட மிக சிறந்த நண்பர்னு சொன்னா சரியா இருக்கும். நான் 'பிரிவோம் சந்திப்போம்'னு ஒரு படத்தில் உதவி இயக்குனரா வேலைப் பார்த்தேன். பின்னாடி அந்த படம் வேறு ஒரு பெயர்ல வெளிவந்தது. அந்த படத்தோட ஹீரோ முரளி. அப்பவே அவர் பிரபலமான ஹீரோ. தான் ஒரு ஹீரோ என்ற நினைப்பு அவருக்கு இருக்காது. எல்லாருகிட்டேயும் எளிமையா பழகுவாரு. ஒரு நாள் திடிரென்று 'நீங்க பண்ணுற முதல் படத்தில் நாம சேர்ந்து பண்றோம்' என்றார். ஒரு உதவி இயக்குனரா இருந்த என்னிடம் ஒரு இயக்குனருக்கு உரிய பார்வையோடு  என்னை முதன்முதலில் அணுகியவர் முரளி. சௌத்திரி  சார்கிட்டே 'புது வசந்தம்' படத்தோட கதைய சொன்னப்போ முரளி ஹீரோன்னு சொல்லித்தான் கதை  சொன்னேன். ஆனா சூட்டிங் போற முதல் நாள் வரைக்கும் புதுவசந்தம்  படத்துல நடிக்கிற விசயம் அவருக்கு தெரியாது. நான் படம் பண்ணுகிற விசயத்தை சொன்ன உடனே தானே படம் பண்ணப்போவது  போல சந்தோசப்பட்டார். எனக்காக வந்து நடிச்சுக் கொடுத்தார்.
அதுபோல பூவே உனக்காக படத்துக்காக நான் கூப்பிட்டபோது ஒரு பாட்டுக்கு ஆட சொல்லுறாரேன்னு முகம் சுளிக்கலை. என்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல்,ஒரு பைசா வாங்காமல் எனக்காக நடிச்சுக் கொடுத்தார். அவரோட மறைவை இதுநாள் வரை என்னால ஏத்துக்க முடியல. என் கூடவே இன்னும்  இருக்காருன்னு தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்."   
''தமிழ்ல இருக்கிற முக்கிய இயக்குனர்கள் எல்லாம் ஹிந்தியில படம் பண்ணுவதற்கு முயற்சி செய்யுறாங்க. நீங்களும் அமிதாப்பை வச்சுப் படம் பண்ண முயன்றவர். தற்போது அதுபோன்ற எண்ணம் இருக்கிறதா?" 
''உண்மைதான். அப்படியொரு எண்ணம் இருந்தது. ஆனால் இப்ப ஹிந்தியில படம் பண்ணுற ஐடியா இல்லை. ஆனால், ஹாலிவுட்டுல படம் பண்ண முயற்சி பண்ணிகிட்டு இருக்கிறேன். அது சீக்கிரம் கைகூடும். நல்ல நண்பர்கள் துணை இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்னு சொல்வாங்க. என்னோட ஹாலிவுட் சாதிப்பும் சீக்கிரமே சாத்தியம் ஆகும்!"    
ஈரம் மாறாத வார்த்தைகளோடு நம்மை வழியனுப்பி வைக்கிறார் நம்பிக்கை குறையாத நாளைய ஹாலிவுட் இயக்குனர்.
- எம்.சபா 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger