Latest Movie :

''சமூகத்துக்கான அழுகை இன்றைய சினிமாக்களில் இல்லை!"


தொடர்கிறது தினந்தோறும் நாகராஜ் பேட்டி...

தினந்தோறும் நாகராஜ் 'மத்தாப்பூ' படம் குறித்து அளித்திருந்த நேர்காணல் வாசகர்கள் பலரையும் உருக்கத்தில் ஆழ்த்தியது. 'அவர் அவசியம் ஜெயிக்கணும் சார்...' என வாசகர்கள் பலரும் அனுப்பி இருந்த கருத்துக்களில் நாகராஜ் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தெரிந்தது. கௌதம் மேனன், பாலா, அம்மா பாசம் என சகலமும் பேசும் நாகராஜின் பேட்டி இதோ... 

"நீங்க மதுப் பழக்கத்துக்கு ரொம்பவே அடிமையாகி இருந்ததாகவும் அதனால் தான் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் சொல்றீங்க... ஆனா, இயக்குனர் பாலா சார் ஒரு பேட்டியில் 'சரக்கு இருக்கிறவரை சரக்கு தீராது'ன்னு சொல்லியிருக்கிறாரே...?
''ஒரு பெரும்  குடிமகனா சொல்றேன்... நமக்குள்ள இருக்கிற சரக்குக்கும் நம்மள குப்புற தள்ளுற சரக்குக்கும் துளி அளவுகூட சம்மந்தம் கிடையாது. பாலா சார் அதை விளையாட்டுக்காகக் கூட சொல்லி இருக்கலாம். இல்லை, அவர் சாதாரணமாக சொன்னதை சம்மந்தப்பட்ட நிருபர்கள் ஒரு அழகியலுக்காக மாத்தியிருக்கலாம். சரக்கு அடிச்சா சரியான போதை வரும்... சரியான பாதை ஒருபோதும் வராது. அதுதான் உண்மை!"
''இயக்குனர் கௌதம் மேனன் உடனான நட்பு பற்றி?"
''அடிப்படையில சினிமா தாண்டி கௌதம் நல்ல மனிதர். அவரோட 'மின்னலே' படத்தில வசனம் எழுதினேன். 'காக்க காக்க' படத்துல லவ் பார்ட் எழுதினேன். அப்போதெல்லாம் அவருக்கு நிறைய தொந்தரவா இருந்துருக்கேன். ஒரு குழந்தை அளவுக்கு அதிகமா தொந்தரவு கொடுத்தாகூட  நாம எரிச்சல் ஆகிருவோம். ஆனா, அவர் ஒருபோதும் என்மேல எரிச்சப்படலை. ஏதோ எழுதி கொடுத்தான்... படம் போச்சு அப்படின்னு அவர் நினைக்கல. அதையும் தாண்டி எனக்காக நிறைய சகிச்சிருக்கிறார். இத்தனைக்கும் நாங்க ஒரே ஊரோ, ஒரே கிளாஸ் மேட்டோ, ஒண்ணா ஒர்க் செஞ்சவங்களோ கிடையாது. நான் தண்ணியை அடியோடு விட்டுட்டு மாறணும்னு ஆத்மார்த்தமா ஆசைப்பட்டவர் அவர்."
''நீங்க கௌதம் மேனன் கம்பெனிக்குத்தான் படம் பண்ணப் போறதா பேச்சிருந்தது.  இப்ப திடீர்னு  வேறு ஒரு கம்பெனிக்கு படம் பண்ணுறிங்க... இடையில் என்ன நடந்தது?"
''மத்தாப்பு கதை உருவானப்ப கௌதம் சாரோட நண்பர் மதன் சாரை பார்த்து இப்படிஒரு லைன் இருக்குன்னு சொன்னேன். அவருக்கும் அந்த லைன் பிடிச்சிருந்தது. 'நாம பண்ணலாம்... கொஞ்சம் காத்திருங்க'ன்னு சொன்னார். அப்போ  அவங்க வேறவேற படங்கள் பண்ணிகிட்டு இருந்தாங்க. எனக்கு உடனே படம் பண்ணனும்கிறதுக்கு அவசியம் இல்ல. அதனால காத்துகிட்டு இருந்தேன். அப்போதான் நான் இப்போ கமிட்டாகி இருக்கிற தயாரிப்பாளர் வந்து மூவ் பண்ணினார். நான் இவங்ககிட்டையும்  கதை எதுவும் சொல்லலை. இப்படி ஒரு ஒன்லைன் இருக்குன்னு சொன்னேன். அவங்களும் நம்மகிட்ட எந்த டிமாண்டும் வைக்கல. உடனே படத்தை ஆரம்பிச்சிட்டோம். மற்றபடி எனக்கும் கௌதம் மேனன் கம்பெனிக்கும் எந்த வருத்தமும் இல்லை."
''உங்க பார்வையில் எது நல்ல சினிமா?"
''(யோசிக்கிறார்). ஸ்கிரிப்ட் எழுதும் போது எந்த ரைட்டரும் இது நேஷனல் லெவல்ல போகும், தேசிய விருது வாங்கும் அப்படின்னு எழுதிட முடியாது. சினிமாங்கறது வெறுமனே டைம் பாஸா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். இரண்டரை மணி நேரம் ஜாலியா இருந்துச்சுன்னு யாரும் சொல்ல கூடாது. அப்படி ஜாலியா இருக்கணுமுன்னா ஒயின் ஷாப் போகலாம். அங்க இதைவிட ஜாலியா இருக்கலாம்.சினிமாவுக்கு நிறைய பொறுப்பு இருக்கு. நமக்கு மூணு முதல்வர்களை சினிமா உலகம் கொடுத்துருக்கு. இது ஒரு உணர்வான விஷயம் இல்லையா ?           
வெறுமனே ஒரு படம் எடுத்தோம்; கமர்சியலா ஹிட் கொடுத்தோம்; ஒருகோடி ரூபா சம்பளம் வாங்கினோம்; பிளாட்  வாங்கினோம். அதுக்காக மட்டும் சினிமா எடுத்திட கூடாது. எனக்குகூட இந்த படத்துக்கு பிறகு ஒரு கோடி ரூபா சம்பளம் கிடைக்கலாம். ஆனா அதுக்காக மட்டும் சினிமாவுக்கு வரலை. ஒரு படம் சாதாரண மனுஷனையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தணும். படிப்பறிவில்லாத எங்க அம்மா பார்த்தாகூட புரியணும். 'நான் எட்டாவது படிக்கட்டுல இருந்து பார்த்தேன்; மக்களுக்கு புரியல. நான் வேறொரு கோணத்துல பார்த்தேன்; ஜனங்களுக்கு புரியல'ன்னு சொல்ல கூடாது. நாம சிரிச்சா பாக்குறவன் சிரிக்கணும்... நாம அழுதா பாக்குறன் அழணும். அதுதான் நல்ல சினிமா!"
''சமீபத்தில் நீங்க பார்த்த நல்ல சினிமா எது? சரியில்லாத சினிமா எது?" 
''சரி இல்லாத சினிமான்னா ஒரு பெரிய லிஸ்டே இருக்கு... ஆனால், அதை எப்படி சொல்லுறது... (சிரிக்கிறார்) நல்ல சினிமா பத்தி சொல்லாம். சமீபத்தில் பருத்திவீரனை சொல்லலாம். அதுல  இருக்கிற வன்முறை, உள்ளுக்குள்ள இருக்கிற ஏகபட்ட குளறுபடிகள் எல்லாத்தையும் தாண்டி ஒரு பாத்திரமா பார்க்கும் போது பருத்தி வீரன் பிடிச்சிருந்தது. ஒரு அடாவடி ஆளோட  வாழ்க்கை எனக்கு பிடிச்சுருந்தது. ஆனா,  இன்னைக்கும் ஒரு 'முள்ளும் மலரும்' காளியா,ஒரு மங்காவா. ஒரு வள்ளியா, 'நாயகன்'ல வர்ற வேலு நாயக்கர் பாத்திரமா எதையும் பார்க்க முடியலை. 'விதை யார் போட்டாது'ன்னு தேவர் மகன்ல சிவாஜி கேட்ட வசனம் எல்லோரையும் உலுக்கியதே... இன்னிக்கு எத்தனை வசனங்களை உங்களால அப்படி சொல்ல முடியும்? தேவர் மகன் போன்ற ஒரு கமர்சியல் படத்துல கமலஹாசன்னு ஒரு மனுஷன்   செஞ்சது சாதாரண விசயமில்லை. 'மகாநதி'யில் 'நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கு கிடைக்குதே'ன்னு  தலையில அடிச்சிகிட்டு கமல் அழுவாரே... அது இந்த சமூகத்துக்கு தேவையான அழுகை. அந்தக் காட்சியைப் பார்த்தப்ப நிஜத்துல இப்படித்தானே நடக்குதுன்னு நெஞ்சுக்குள்ள ஒரு வலி வந்தச்சே... அதை இப்போ எந்தப் படத்துலயாவது உணர முடியுதா? நான் யாரையும் குறையா சொல்லலை... இப்படி ஒரு விஷயத்தை நாம செய்யலையேன்னு ஏக்கமாத்தான் சொல்றேன்!"
''வேறு எந்த படமும் பிடிக்கவில்லையா?" 
''ஒரு படமா... 'வெண்ணிலா கபடி குழு'  பிடிச்சிருந்தது. ஆனா ஒரு கேரக்டரா அது என்னைய தொந்தரவு பண்ணலை. படத்தோட பாத்திரம் நம்மளை நொறுக்கணும். அப்படி சமீப காலங்களில் எந்த படமும் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தலை." 
''உங்களோட 'மத்தாப்பூ' படம் அத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமா?"
''சில படங்களில் புத்திசாலித்தனம் தெரியும். பழைய பாலசந்தர் படங்களில் ஒருவித இன்டலக்சுவல் தெரியும்.  சில படங்கள் மனசை நெகிழ வைக்கும் இல்லையா? இப்பவும்  'முதல் மரியாதை' பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு வலி இருக்கும். லாஜிக்கெல்லாம் தாண்டி பல வருஷம் கழிச்சு வாற ராதா கைக்குள்ள ஒரு பாசி இருக்குமே... அதைப் பார்க்கிறப்ப நமக்குள்ள ஒரு வலி ஏற்படும் இல்லையா?அந்த உறவுகளுக்குள்ள ஒரு ஏக்கம் இருக்கும் இல்லையா? அந்த ஏக்கத்தையும் வலியையும் 'மத்தாப்பூ' ஏற்படுத்தும்னு நினைக்கிறேன். 
நாம எடுக்கிற சினிமா அன்போட பகிர்வா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். இன்னைக்கு பெரிய அளவுல சம்பாதிக்கிறவனா இருக்கட்டும், இல்ல ரோட்டோரத்துல படுத்து கிடக்கிறவனா இருக்கட்டும்... எல்லாருக்கும் இன்னிக்கு அன்பு தேவையா இருக்கு. அன்பு மட்டும் நிறைவா இருந்தா இன்னக்கி பல பிரச்சினை இருக்காது. அன்புங்கிறது ஒரு பையன் பொண்ணு மேல வைக்கிறது மட்டுமில்ல.. நண்பன், தோழி, அக்கா, தங்கை, அம்மான்னு எல்லார் மேலயும் ஒரு செடி மாதிரி படருது பாருங்க... அதுதான் அன்பு. சக மனிதருக்கு தேவையான அன்பை 'மத்தாப்பூ' சொல்லுமுன்னு நம்புறேன்."
''அன்புக்கு அவ்வளவு வல்லமை இருக்குன்னு சொல்றீங்களா?"
''நிச்சயமா! இப்ப என்னைய எடுத்துக்கோங்க... இன்னிலே இருந்து நாம குடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணி நான் குடியை நிறுத்தலை. நிறைய பேரு......  இப்ப உங்க மாதிரி... கௌதம் மாதிரி... இன்னைக்கு இருக்கிற உதவி இயக்குனர்கள் பாதி பேரு
எனக்காக  ஆத்மார்த்தமா வருத்தப்பட்டு இருப்பாங்க...  'ஏய்யா இந்தாளு இப்படி ஆயிட்டான்.  நல்ல மனுஷன்யா... நல்ல வந்துருக்க வேண்டிய ஆளு, இப்படி வீணாப் போயிட்டானா.. எங்கிட்டயே 20 ரூபா வாங்கிட்டு போறான்யா... எனக்கே கையெல்லாம் கூசுதுய்யா... அப்பேர்பட்ட மனுஷனை கடவுளு நமகிட்ட எல்லாம் இப்படி கையேந்த வச்சுட்டானே'ன்னு என் காதுபட வருத்தப்பட்ட ஆட்களே உண்டு. இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காக வருத்தபட்டவங்க குறைஞ்சது நூறு பேராவது இருப்பாங்க... இந்த வருத்தம் என் மேல ஏன் இவங்களுக்கு வரணும்? அதான் சார் அன்பு! அந்த மனுஷங்களோட ஒட்டுமொத்த  அதிர்வும் அன்பும்தான் என்னைய மாத்தியதுன்னு நெனைக்கிறேன். அன்புக்கு இதைவிட வேறென்ன வல்லமை வேண்டும்?!"
''உங்கள் குடும்பத்தைப் பத்தி சொல்லுங்களேன்?"
''எங்க அம்மா எழுத படிக்க தெரியாதவங்க. ஆனா, தான் பெத்த ஏழு  புள்ளைகளையும் நல்லா படிக்க வைச்சாங்க. இன்னிக்கு என்னோட அண்ணன்கள் அக்காக்கள் எல்லோரும் நல்ல பொறுப்புல இருக்காங்க. நான் மட்டும் படிச்சிட்டு மெட்ராஸ் வந்து சினிமா சினிமான்னு அலைஞ்சு திரிஞ்சுட்டு ஒண்ணரை வருசத்துக்கு அப்புறம்  ஊருக்கு போனேன். என்னைய பார்த்ததும் அம்மாவுக்கு சந்தோசம். எனக்கு ஆசை ஆசையா சாப்பாடு போட்டு வைச்சாங்க. 'ஏன் மக்கா, மெட்ராஸ் போயி என்ன வேலை பாக்குற?'ன்னு கேட்டதுதான் தாமதம்... 'தட்ட தூக்கி எறிஞ்சிட்டு போயிருவேன்'னு  சொன்னேன். 'கோபப்படாதல்ல... உன்னைய நான் என்ன சம்பாருச்சு கொடுன்னா கேக்கேன். பக்கத்து வீட்டுகாரங்க, அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம், சின்ன மக்கா என்ன வேலை செய்யான்னு  கேக்கா... அதுக்காத்தான் கேக்கேன் மக்கா. நீ என்னமோ வேலை செய்யீ. அத சொன்னா....  இன்ன வேலை ஏம்புள்ள  செய்யான்னு சொல்லிபுட்டு ஏன் வேலையே நான் செய்யேன்ல'னு சொன்னாங்க. 'அதல்லாம் உனக்கு சொன்னா புரியாதும்மா!'ன்னு கோபமா சொன்னேன். என்னோட அம்மா, 'யான் மக்கா... நீ இங்க பாலிடெக்னிக் படிச்சப்போ பெரிய பெரிய புத்தகமா வாங்கியாந்து படிச்ச... அப்ப என்ன மக்கா பண்ணுதேன்னு  கேட்டேன். ஒனக்கு ஒண்ணும் புரியாதுன்னு சொன்னே. படிப்பு முடிஞ்சு ஊருலேயே ரெண்டு வருஷம் இருந்தே.. அப்ப என்ன மக்கா செய்யுதேன்னு கேட்டேன். உனக்கு ஒண்ணும் புரியாதுன்னு சொன்னே... இப்ப ஒண்ணரை வருசமா மெட்ராஸ்ல வேலை பாக்கேன்னு சொன்னே. இப்ப என்ன மக்கா பண்ணுதேன்னு கேட்டா... உனக்கு ஒண்ணும் புரியாதுன்னு சொல்லே. ஏலே மக்கா... நான் சாகறதுகுள்ளே எனக்கு புரியுற மாதிரி எதாவது பண்ணுதே'ன்னு அம்மா சொன்ன வார்த்தைகள் உச்சந்தலையில் ஆணி அடிச்ச மாதிரி இருந்தது. 
''அப்புறம்?"
அந்த வார்த்தைதான் என்னை 'தினந்தோறும்' படத்தை சீக்கிரம்  பண்ண வைத்தது. 
 படம் ரிலீசானது. ரொம்ப நல்ல பேரு. நாகர்கோவில் தியேட்டருக்கு அம்மாவை கூட்டிகிட்டு போய் காட்டினேன். 'அம்மா ஏதாவது புரியுதா'ன்னு கேட்டேன்.  அம்மா அழுதுக்கிட்டே, 'எல்லாரும் என்னென்னமோ சொல்லுதே மக்கா... எனக்கு அது மட்டும் புரியுது மக்கா'ன்னு சொன்னாங்க. ரெண்டு பேருக்குமே கண்ணுல நீர் கோத்துக்கிச்சு. 
நான் போதையிலே மூழ்கி சீரழிஞ்சு கிடந்தப்ப என்னோட நிலமைய கேள்விபட்டு நல்லா இருந்த மனுசி திடிர்னு படுக்கையில விழுந்திருச்சி. கொடங்ககையிலேயே போட்டு வளர்த்த கடைசி பையன் கைநழுவி போயிருவானோங்கிற நினைப்பு அவளை சாச்சு போட்டுறுச்சு. அதுவரை அவளை பாக்குறதுக்கு தைரியம் இல்லாம கிடந்த நான் நாகர்கோவில் போயி பாக்கிறேன்... என்னோட கையை பிடிச்சுகிட்டு 'நீ இங்கேயே இருந்திருந்தா நல்லா இருந்திருப்பியோ மக்கா'ன்னு என்னோட கைகளை பிடிச்சிகிட்டு அழுதாங்க. எனக்கு அழுகை வருது.... அவளோட கைய பிடுச்சுகிடு அழுகிறேன். ஒரு 80 வயசு மனுசிய அழ வச்ச நாம, எவ்வவு பெரிய பாவிபயன்னு அப்பத்தான் எனக்கு புரிஞ்சுச்சு.
 இத்தனைக்கும்  நான் சம்பாதிச்சு இதுவரைக்கும் அம்மாவுக்கு ஒத்த ரூபாகூட  கொடுத்ததில்லை. நாளைக்கு நான் கோடி ரூபா சம்பாதிச்சா கூட என்னுக்கிட்ட ஒரு ரூபா அம்மா எதிர்பார்க்க மாட்டங்க. அம்மாவுக்கு லட்சம் லட்சமா பணம் கொடுக்கிறதுக்கும் கவனிக்கிறதுக்கும் நிறைய புள்ளய்ங்க இருக்காங்க. இப்ப என்னோட அம்மாவுக்கு 85 வயது. சாக கிடந்த மனுசி. தன்னுடைய மகன் இப்ப குடிக்கிறத  விட்டுட்டான்னு தெரிஞ்ச ஒடனே எழுந்திரிச்சி நடக்க  ஆரம்பிச்சிட்டாங்க.... 'இப்படியே நீ இருந்த இந்த சந்தோசத்துல இன்னும் பத்து பதினைந்து வருஷம் வாழ்ந்துருவேன் மக்கா'ன்னு  அம்மா இப்ப தைரியமா நடமாடிகிட்டு இருக்காங்க. அம்மா என் மேல வைச்சிருக்கிற பாசம்தான் அவங்களை எந்திரிச்சு நடமாட வைச்சிருக்கு."
அம்மா மீதான பேரன்பின் பெறு வாசத்தை, மனித குலத்துக்கு தேவையான பற்றுதலின் ஈரக்கசிவை, ஜீவனை உயிர்ப்புட்டும் பாசத்தின் நெகிழ்ச்சியை நாகராஜ் சொல்லச் சொல்ல சிலிர்க்கிறது நமக்கு. 
''படம் எப்படி வந்திருக்கு?"
''நானே சொல்லக்கூடாது... படம் ரொம்ப நல்ல வந்திருக்கு. காதல்னா ஒரு மரியாதை இருக்கு. சும்மா காதலிச்சேன்... சக்சஸ் ஆகலை... எழுதிவச்சிட்டு செத்துபோறேன்னு சொல்றது... காதல் வாழ்கன்னு ரோட்டுல நின்னு கத்துறது; காதலுக்காக தேவதாஸ் மாதிரி திரியிறது எல்லாமே சுத்த ஹம்பக். சினிமாவுக்கு வேணும்னா இது அழகா தெரியும். ஆனா, எதார்த்தத்துல  தற்கொலைபோல ஒரு ஈனத்தனமான காரியம் இல்லை. ஒரு பெண்ணுக்கு எல்லாமுமா இருக்கிற வல்லமையை கொடுக்கிறதுதானே காதல். அப்படி ஒரு வல்லமை உனக்கு இல்லைன்னா எதுக்கு காதல்? காதல்னா கம்பீரம்னு மனசுக்கு நிறைவா சொல்லி இருக்கேன். நீங்க தூர நின்னு தொட்டு பார்த்த அக்காவின் அன்பை, சின்னம்மாவின்  சிநேகத்தை, உறவுகளோட கண்ணியத்தை காட்டி இருக்கேன்.வெறும் கல்லா கட்டுறதுக்கா மட்டும் படம் பண்ணாம... கண்ணீரை  கட்டி வைக்கும் அன்பை   இந்த மத்தாப்புக்குள்ள அடக்கி வச்சிருக்கேன்.  அன்பை அடக்கி வச்சிருக்கும் எல்லோருடைய மனசையும் இந்த மத்தாப்பு கட்டவிழ்த்து விடும்!"
நம் கரங்களை இறுகப் பற்றி விடைதருகிறார் தினந்தோறும் நாகராஜ். இறுக்கம் குறையாத பிடியில் வழிகிறது நாகராஜ் வலியுறுத்திச் சொல்லும் அன்பு!


நாகராஜ் சிலிர்ப்பை அப்படியே கேட்டு மகிழ ஆசையா?
விரைவில் வீடியோ பதிவு...
காணத்தவறாதீர்கள்... 
-எம்.சதிபாரதி  


Share this article :

+ comments + 3 comments

5 October 2012 at 20:56

நாகராஜ் சார் வாழ்த்துக்கள்... உங்களின் பேட்டியை கும்பலில் வாசித்தேன். அடுத்த பகுதியை எப்போது போடுவார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்தேன். இன்று இரவுதான் அடுத்த பகுதியை படித்தேன். அம்மா மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை படித்த போது அழுதுவிட்டேன். நிச்சயம் நீங்கள் மத்தாப்பூ படத்தில் ஜெயிப்பீர்கள். அதே போல் அம்மாவை நாகர்கோயில் தியேட்டருக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் அம்மா இன்னும் சந்தோசப்படுவார். வாழ்த்துக்கள் சார்.
எம்.தனபால், மதுரை

பத்து வருடங்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்த நாகராஜ் இத்தனை வருடங்களுக்கு பின்னர் என்ன பேசிவிட போகிறார் என்கிற அலட்சியத்தில் தான் இந்த நேர்காணலை படித்தேன். இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் இயக்குனர்கள் கூட பேச முடியாத அளவுக்கு அன்பு தொடங்கி இன்றைய சினிமாவின் நிலவரம், சினிமாவுக்கான அடிப்படை, குடும்பம் என நாகராஜ் பேசியிருக்கும் விசயங்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தன.
மது ஒருவனை எப்படி சீரழிக்கும் என்பதை இரண்டு பேட்டிகளிலும் வலியுறுத்தி சொல்லியிருக்கும் நாகராஜ் மண்டைக்குள் இருக்கும் சரக்குக்கும் ஊற்றிக் குடிக்கும் சரக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லி இன்றைய இளைய வர்க்கத்துக்கு சரியான பாடம் சொல்லி இருக்கிறார்.
நாகராஜ் அவசியம் ஜெயிக்கணும்.

8 October 2012 at 19:49

சமீப காலங்களில் நான் படித்த மிக சிறப்பான பேட்டி இது. சினிமா உலகம் குறித்தும் குடும்ப நிலவரங்கள் குறித்தும், தினந்தோறும் நாகராஜ் விரிவாகவும் உருக்கமாகவும் பேசி இருக்கிறார். கடைசி கேள்விக்கான பதிலை படித்த போது கண்ணீர் வந்து விட்டது. நாகராஜ் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். என்னை போன்ற எந்த்தனையோ பேர் அவருக்காக பிரார்த்தனை செய்வோம்.
சுப்புராஜ் நண்பர்கள்

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger