திரும்ப வருகிறார் 'தினந்தோறும்' நாகராஜ்!
கௌதம் மேனன் உடனான நட்பு
சமீபத்திய தமிழ் படங்கள் மீதான பார்வை
தாய்ப்பாசம்
'மத்தாப்பு' பட அனுபவம்
அவருக்கும் நமக்கும் எவ்வித உறவும் இல்லை; நட்பு ரீதியான பழக்கமும் இல்லை. நேரில் பார்த்துப் பேசியதுகூட இல்லை. ஆனாலும், ''அவர் ஏன் இப்படியானார்... நல்லா வந்திருக்க வேண்டிய மனுஷன்... இப்புடிப் போயிட்டாரே..." என்கிற கவலை அடிக்கடி வந்துபோகும். நமக்கு மட்டும் இல்லை... தமிழ் சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அத்தனை பேருக்கும் அவர் மீது ஏதோவொரு அதீத அக்கறை. அவர்...
'தினந்தோறும்' நாகராஜ்!
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தென்னங்கன்று எங்கேயோ ஒரு கரையில் ஒதுங்கி வளர்வதைப்போல், 13 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் 'டேக் ரெடி ஆக்க்ஷன் ...' சொல்ல ஆரம்பித்திருக்கிறார் 'தினந்தோறும்' நாகராஜ். சற்றே உடல் கொஞ்சம் புஷ்டி போட்டிருக்கிறது. தாடிக்குள் விரல் நீவி ஆத்மார்த்தமாகப் பேசும் நாகராஜுடன் ஒரு சந்திப்பு...
''எப்படி இருக்கீங்க சார்?"
''நல்லா இருக்கேன். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகும் இன்னமும் என்னை நினைவில் வைச்சிருந்து பேட்டி எடுக்க வந்திருக்கீங்க... ரொம்ப சந்தோசமா இருக்கு. ஒருத்தங்களோட மனசுல நிலைச்சு நிற்கிறதைவிட பெரிய வெற்றி வேற ஏதும் இல்ல சார்!"
''ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி?"
''நானும், நான் குடிச்சிகிட்டு இருந்த மதுவும் தான் காரணம். கடந்த பத்து வருடங்களில் நான் ஒரு நாய்க்குட்டி போல மதுவின் பின்னால் ஓடிக்கிட்டு இருந்தேன். அப்ப நான் சரியா இல்லை. மனசைக் கட்டுப்படுத்தத் தவறித் திரிஞ்ச காலம் அது. இப்போ பட்டு உணர்ந்துட்டேன். எதுக்கு முழு நேர அடிமையா கிடந்தேனோ... அதைத் தூக்கி வீசிட்டேன். இப்போ நான் நல்லபிள்ளை. எந்தக் கட்டத்துலயும் சினிமா மீதான ஆர்வத்தையோ ஆசையையோ நான் குறைச்சுக்கிட்டது கிடையாது. மதுவை மறந்தவனா என்னை இன்னிக்கும் தூக்கி சுமக்கிற சினிமாவை மறுபடியும் ஆத்மார்த்த அன்போட கையில எடுத்திருக்கேன். படத்தோட பெயர் 'மத்தாப்பு'. பெயர்ல இருக்கிற பிரகாசம் இப்ப மனசுலயும் இருக்கு!"
''ஒரு நாள் மீடியா வெளிச்சத்தை தவற விட்டாலே சினிமா உலகம் நம்மை மறந்துவிடும். ஆனால், இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகும் உங்களுக்கு 'மத்தாப்பு' வாய்ப்பு வந்தது எப்படி?"
''சிலபேர் இதைத்தான் டைம்னு சொல்றாங்க. ஆனால், டைம் எல்லா நேரத்திலும் வொர்க் அவுட் ஆகாதே... ஒரு டைரக்டரா ஆகுறதுக்கு முன்னாடி நாம பிராப்பரா ஒர்க் பண்ண வேண்டி இருக்கு. நம்மை நாமே தயார்படுத்திக்க வேண்டி இருக்கு. வெறுமனே ஒரு டைரக்டருகிட்ட சேர்ந்தோம். நேரம் கிடைக்கிறப்ப வேலை பார்த்தோம்கிறது இங்கே சரிப்படாது.
சினிமாங்கிறது ஏதோ ஒரு கார்பரேட் கம்பெனிக்கு வேலைக்கு போற மாதிரி இல்ல. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை பார்த்தோம்; சூட்டிங் போனோமுன்னு இருந்தா இங்கே எதுவுமே சாத்தியப்படாது. சினிமாவுக்காக நாம ஆத்மார்த்தமா வேலை செய்ய வேண்டி இருக்கு. 24 மணி நேரமும் நாம சினிமாவுக்குள்ளேயே இருக்க வேண்டியிருக்கு. குளிக்கிறப்ப, நடக்கிறப்ப, சாப்பிடறப்ப, தூங்குறப்பன்னு எந்நேரமும் சினிமாதான். எந்தக் கேரக்டரை நாம எடுக்க நினைக்கிறோமோ... அந்தக் கேரக்டராகவே வாழ வேண்டி இருக்கு. அப்படி மாறிட்டா நாம எடுக்க வேண்டிய சினிமாவை எடுத்துடலாம் . நாம அடைய வேண்டிய உயரத்தையும் எட்டிடலாம்.
தினந்தோறும் படத்துக்கு பிறகு கடந்த 13 வருசமா படம் எதுவுமே செய்யலை. செய்ய முடியலைங்கிறதுதான் உண்மை. அதுக்கு தயாரிப்பாளர் காரணம் இல்லை,சினிமா காரணம் இல்லை, நண்பர்கள் காரணம் இல்லை. முழுக்க முழுக்க நான்தான் காரணம். அப்ப தண்ணி அடிச்சிகிட்டு தவறா இருந்திட்டேன். அப்படி தண்ணி அடிச்ச காலத்திலும் நான் சினிமாவ விட்டு எங்கேயும் விலகிடலை. சினிமா மேல இருந்த நேசிப்பு குறையலை. 'மின்னலே' படத்துக்கு வசனம் எழுதும் போதும், 'காக்க காக்க' படத்துக்கு லவ் ட்ராக் எழுதும் போதும் என்னுடைய வேலையை மிகச் சரியா செய்தேன். அந்த சமயத்துல என்னால படம் பண்ண முடியலை. காரணம் இடைவிடாத தண்ணி... இப்போ தண்ணிய விட்டுட்டேன். தண்ணி அடிச்சப்ப கிடைக்காத வாய்ப்பு, தண்ணியை விட்ட உடனே கிடைக்குதுன்னா... இத்தனை வருட இடைவெளிக்கு தண்ணிதான் காரணம். ஆனால், இந்த இடைவெளியை நினைச்சு வருந்துற நிலையில் நான் இல்லை. இத்தனை வருசத்துக்கு அப்புறமும் வாய்ப்பு வர நான் கொடுத்து வைச்சிருக்கேன். வனவாசத்தை கடந்துட்ட நிறைவோட இப்போ களத்துல நிற்கிறேன்!"
'' உங்களோட முதல் பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?"
''காதல் கோட்டை படத்துல கொஞ்ச நாள் மட்டும் டிஸ்கஷன்ல வேலை பார்த்தேன். நான் பாலசேகரன் , சசி, களஞ்சியம் எல்லாம் ஒரே ரூம் மேட்ஸ். களஞ்சியம் மட்டும் 'பூமணி' படம் பண்ணிகிட்டு இருந்தார். நான் ஒரு தயாரிப்பாளர்கிட்டே 'தினந்தோறும்' கதைய சொன்னேன். அவருக்கு கதை பிடிச்சிருச்சு. 'யாருக்கிட்ட ஒர்க் பண்ணிங்க'ன்னு கேட்டார் . நான், 'அகத்தியன் சார்கிட்ட' என்றேன். என்னிடம் பேசிக்கிட்டே, 'உங்களுக்கு வேண்டியவர் பேசுறார் இந்தாங்க பேசுங்க...' என்று தன்னிடம் இருந்த போனை என்னிடம் நீட்டினார். எதிர் முனையில் அகத்தியன் சார்... 'நீங்க எப்ப என்னிடம் வேலை பார்த்திங்க' என்றார். 'காதல் கோட்டை படத்துல கொஞ்சநாள் டிஸ்கஷன்ல இருந்தேன் சார்...'ன்னு சொன்னேன். 'ஏன் இப்படியெல்லாம் பொய் சொல்றீங்க' என்று என்னை கடிந்தவர் சட்டென போனை வைத்து விட்டார். நான் ஏதும் சொல்லாமல் அமைதியா இருந்தேன். தயாரிப்பாளர், 'நீங்க யார்கிட்ட ஒர்க் பண்ணிங்கன்னு எனக்கு முக்கியமில்லை... கதை நல்லா சொல்றீங்க... அதை நல்லா எடுத்து கொடுப்பிங்கன்னு நம்புறேன்' என்றார். 'யாரை ஹீரோவா போடுறதா ப்ளான் பண்ணி இருக்கிங்க' என்றார். நான் முரளி சார் பெயரை சொன்னேன். அவர்கிட்ட பேசி ஓகே வாங்க சொல்லிட்டார்.
அப்போ முரளி சார் 'பூமணி' படத்தோடா சூட்ல இருந்தார். அன்னைக்கே அவரை போய்ப் பார்த்துக் கதையை சொன்னேன். கதையை நான் முழுசா கேக்கணுமே என்றவர் அன்னைக்கு இரவே முழு கதையையும் கேட்டார்.அவருக்கு கதை ரொம்ப பிடிச்சு போச்சு. மறுநாள் கலையில முரளிசார் தயாரிப்பாளர்கிட்ட பேசினார். அடுத்த மூணா நாளே ஆபீஸ் போட்டு உட்கார்ந்தோம்... சினிமாங்கிறது பெரிய வரம். ஆனா, அது ரொம்ப சுலபமா எனக்கு கிடைச்சது. அதை தக்க வைச்சுக்காததுதான் என்னோட தவறு."
''இன்றைய தினத்தில் முக்கிய இயக்குனரா வந்திருக்க வேண்டிய நீங்கள் எப்படி குடி பின்னாடி போனிங்க?"
''எல்லோருக்கும் கடினமா இருந்த சினிமா... என்னிடம் மட்டும் பக்கத்து வீட்டுப் பெண் போல இலகுவாக பழகியது. எல்லோரும் உதவி இயக்குனராக போராடியா போது நான் ரொம்ப சுலபமா இயக்குநராகி விட்டேன். 'தினந்தோறும்' படத்தோட வெற்றி என்னை மேலும் சினிமாவை அசட்டையாக பார்க்க வைத்தது. அந்த அசட்டையான எண்ணம்கூட என்னை முழு நேர குடிகாரனாக மாற்றி இருக்கும்னு நெனைக்கிறேன்."
''எப்படி குடியை விட்டீங்க?"
''ஏதும் ப்ளான் பண்ணி நான் குடியை விடலை. புத்தனுக்கு எப்படி போதிமரமோ அப்படித்தான் எனக்கு எம்.எம்.டி.ஏ. பஸ் ஸ்டாப்புக்கு எதிர்த்தாப்புல இருக்குற ஒரு டாஸ்மாக் கடையும்! எப்பவும் அங்கேதான் கிடப்பேன். 'இப்படி குடிச்சு அழியிறோமே'ன்னு என்னிக்குமே வருத்தப்பட்டது இல்ல. என்னைக்கும் போல ஒரு நாளு மூச்சு முட்டக் குடிச்சுக்கிட்டு இருந்தேன். உடம்பு முழுக்க போதை ஏறிவிட்டது. இனியும் குடிக்கனுமான்னு ஒரு எண்ணம் முதல் முறைய மனசுக்குள்ள எட்டி பாக்குது. சிகரெட் எடுத்து பத்த வைச்சேன். திடீர்னு மனசுக்குள்ள ஒரு யோசனை... 'ஏழு தலைமுறைக்கும் சேர்த்து குடிச்சாச்சு... இனி புதுசா குடிக்கிறதுக்கு ஒண்ணும் இல்லை. இனியும் ஏன் குடிக்கணும்... இன்னையோட குடிய விட்றணும்'னு தோணியது. டக்குன்னு கையில இருந்த தம், தண்ணி எல்லாத்தையும் மொத்தமா தூக்கி தூரப் போட்டுட்டு எழுந்து வந்துட்டேன். அதையெல்லாம் தலைமுழுகி அஞ்சு வருசத்துக்கு மேல ஆச்சு. தவறான நண்பனை சர்வ சாதாரணமா தூக்கிப்போட்டுட்டு கடக்குற மாதிரி, தண்ணியையும் அப்படியே விட்டுட்டேன். நமக்கு சரிப்படலைன்னு தோணினா, அதை முதல்ல கைவிட்ரணும்!"
அனுபவங்களையும் வாழ்வியல் உண்மைகளையும் சினிமா மீதான பேரன்பையும் மனம்திறந்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் தினந்தோறும் நாகராஜ் மேற்கொண்டும் நிறைய பேசினார்.
என நம்மோடு பகிர்ந்துகொண்ட விசயங்களின் தொகுப்பு அடுத்த பதிவில்... கூடவே நாகராஜின் வீடியோ பதிவும்...


+ comments + 4 comments
Mika sirappana nerkaanal... Daily Nagaraj win panna vazhthukkal.
மிக நல்ல பதிவு. இவர் என்ன ஆனார் என்கிற குழப்பமும் ஏக்கமும் எல்லோருக்குமே இருந்தது. அவர் மதுவின் பிடியிலிருந்து மீண்டு வந்திருப்பதை படிக்கையில் ஏதோ நாமே ஜெயித்தது போல இருக்கிறது. நாகராஜ் மறுபடியும் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துகிறேன்!
i believe, defenectly he will give good cinema
vazhtthukal...
Post a Comment