அமைச்சர் பதவியா... கட்சிப் பதவியா?
டெசோ மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து தி.மு.க. முகாமிலிருந்து ஓர் அறிக்கை வந்ததைப் படித்திருப்பீர்கள். அறிக்கையை வெளியிட்டவர் திருமதி கனிமொழி. ''டெசோ மாநாட்டில் கலந்துகொள்ள வரயிருக்கும் வெளிநாட்டுத் தமிழ் பிரதிநிதிகளை இங்கிருக்கும் சிலர் வரவிடாது தடுக்கிறார்கள். ஆனாலும், அந்தப் பிரதிநிதிகள் டெசோ மாநாட்டில் கலந்துகொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள். டெசோ மாநாட்டு வெற்றியை யாராலும் தடுக்க முடியாது!'' என ஆவேசமும் அதிரடியும் நிரம்பியதாக இருந்தது அந்த அறிக்கை.
கனிமொழி திடீரென முன்னிறுத்தப்படுகிறார் என்கிற எண்ணத்தை ஸ்டாலின் மற்றும் அழகிரி வட்டாரத்தில் இந்த அறிக்கைதான் உருவாக்கி இருக்கிறது. இதற்கிடையில் தொடர்ந்து கனிமொழிக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எழுதும் தினமலர் நாளிதழ் 'கனிமொழிக்கு அமைச்சர் பதவி' என திடீர் செய்தி வெளியிட்டது. தி.மு.க. முகாமையே குழப்பத்தில் கும்மியடிக்க வைத்திருக்கிறது கனிமொழி குறித்த இந்த மாதிரியான சர்ச்சைகள்.
200 நாட்களை திகார் சிறையில் கழித்த கனிமொழிக்கு கட்சி ரீதியாக எதையாவது செய்ய வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருக்கிறாராம். ''கனிமொழிக்கு வழங்குவதாக இருந்தால் நான் வகிக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்'' என அறிவித்திருக்கிறார் திருமதி சற்குண பாண்டியன். இதுகாலம் வரை ஒருவருக்கு பதவி கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்னொருவர் தன் பதவியை ராஜினாமா செய்யும் ஆச்சரியங்கள் எல்லாம் ஒருபோதும் தி.மு.க.வில் அரங்கேறியது இல்லை. 'கனிமொழி பட்ட கஷ்டங்கள் அப்படிப்பட்டவை' என இதற்கு நியாயம் சொல்லப்படலாம்.
ஆனாலும், கனிமொழிக்கு ஏற்றம் அமைந்தால், அது என்றைக்கு இருந்தாலும் தனக்கு சிக்கல் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். 'மத்திய அமைச்சர் பதவியை கனிமொழிக்கு வழங்க நான் மறுப்பு சொல்லவில்லை. ஆனால், கட்சிப் பதவிக்கு அவர் இப்போதைக்கு கொண்டுவரப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை' என்பதை அழுத்தமாக கருணாநிதியிடம் வலியுறுத்தி இருக்கிறார் ஸ்டாலின். மத்திய அரசின் ஆயுள் இன்னும் ஒருவருடம் தான் என்பது ஸ்டாலின் கணக்கு!
இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவி அல்லது கட்சியில் முக்கியப் பதவி கிடைக்கும் காலம் கனிமொழிக்கு கைகூடி வந்துவிட்டதாகவே உறுதியாக நம்புகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். பார்க்கலாம்... எல்லாமே குளறுபடியாக நடக்கும் தி.மு.க. முகாமில் இந்த விவகாரம் எத்தகைய திருப்பத்தை எட்டுகிறதென்று!
- கும்பல்


+ comments + 3 comments
PHOTO COMMENT SUPER BOSS... KALAKKURENGA...
எது எப்படியோ... மறுபடியும் காங்கிரசுக்கு நம்ம மக்கள் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் சரி...
ஸ்பெக்ட்ரம் குற்றவாளிக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுக்கலாம்? கேட்பதற்கு ஆள் இல்லை என்றால், இங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கும்? கனிமொழி என்ன... ஆ.ராசா அமைச்சரானால் கூட ஆச்சரியத்திற்கில்லை!
Post a Comment