உம்ரா பயணமாக மெக்கா சென்ற இயக்குனர் அமீர் 22.8.12 அன்று சென்னை திரும்பிவிட்டார். ஆதிபகவன் ஷூட்டிங், கரு.பழனியப்பனின் புதிய படத்தில் நடிப்பு என பிஸியாக இருக்கும் அமீர் இந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் மெக்காவுக்கு சென்றார். வழிபாடு முடித்த அவர், திடீரென மனதில் என்ன நினைத்தாரோ... அங்கேயே தலைக்கு மொட்டையும் அடித்திருக்கிறார். அமீர் எப்போது சென்னை வருவார்... எப்போது ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என ஆவலோடு காத்திருந்த கரு.பழனியப்பன் அமீரின் மொட்டைக் கோலத்தைக் கண்டு விக்கித்து போய்விட்டாராம். மெக்காவில் இருந்து வந்த உடனேயே ஆதிபகவன் படத்தின் எடிட்டிங் வேலைகளில் தீவிரமாகிவிட்ட அமீர் விரைவில் ஜிகாத் படத்தின் கதை விவாதத்தையும் தொடங்க இருக்கிறார். 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜிகாத் தயாராக இருப்பதால் சர்வதேசத் திரைப்படத் தயாரிப்பாளர் யாரேனும் படத்தை தயாரிக்கக் கூடும் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
பின்குறிப்பு: தலையை மொட்டை அடித்த அமீர் முழு நீளத் தாடியை இன்னும் நீக்கவில்லையாம். அதனால், வில்லன் கெட்டப்பில் வித்தியாசமாக உலவி வருகிறார் அமீர்.

Post a Comment