இயக்குனர் ஷங்கர் என்ன தலைப்பு வைத்தாலும் அதில் ஒரு மிரட்டல் இருக்கும். அதேபோல் அதில் சர்ச்சையும் வெடிக்கும். ரஜினியை வைத்து சிவாஜி என்கிற தலைப்பில் ஷங்கர் படம் எடுத்தபோது, வடக்கத்திய எழுத்தின் கலப்புகொண்ட டைட்டிலுக்கு வரிவிலக்கு கொடுக்கக் கூடாது என பலரும் ஆட்சேபனை தெரிவித்தார்கள். பிறகு ஒருவழியாக 'ஒரு நபரின் பெயரைக் குறிப்பிடுவதால் வரிவிலக்குக் கொடுக்கலாம்' என அப்போதைய அரசுத் தரப்பு விளக்கம் கொடுத்தது. இப்போது ஷங்கர் இயக்கும் படத்துக்கு ஐ என பெயரிடப்பட்டு உள்ளது. இது ஆங்கில டைட்டிலா, தமிழ் டைட்டிலா என கோடம்பாக்கமே பட்டிமன்றம் நடத்தி வருகிறது. ஆங்கிலத்தில் I என்றால் 'நான்' என்றும், EYE என்றால் 'கண்' என்றும் அர்த்தம். ஆனால், 'ஐ ஆங்கிலத் தலைப்பு இல்லை' என உறுதியாக மறுக்கிறது ஷங்கர் யூனிட். சரி, 'ஐ தலைப்புக்கு என்னதான் அர்த்தம்?' என்றால், 'படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஐ தலைப்புக்கு விளக்கம் சொல்வோம்' என்கிறது ஷங்கர் தரப்பு.
ஷங்கர் சொல்லும் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? ஐ என்கிற ஒற்றை எழுத்துக்கு என்ன அர்த்தம்? நமக்குத் தெரிந்த தமிழ் அகராதிகளை புரட்டியும், தமிழாசிரியர்களிடம் பேசியும் நாம் திரட்டிய அர்த்தங்கள்... அழகு, வியப்பு, தலைவன், ஐயம், கணவன், அரசன், ஐந்து, அசை, மேன்மை, நுண்மை, தந்தை... என மொத்தமாக ஐ என்கிற எழுத்துக்கு 11 அர்த்தங்கள் உள்ளன. இதில் ஷங்கர் ஐ என்கிற தலைப்பை தலைவன் என்கிற அர்த்தத்திலேயே வைத்திருப்பதாகவும், ரிலீஸ் சமயத்தில் இந்த ரகசியத்தை ஷங்கர் வெளியிட இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தியன், முதல்வன், அந்நியன் வரிசையில் அடுத்து தலைவன்...!
அசத்துங்க ஷங்கர் சார்!

+ comments + 1 comments
aha.. ithu nalla iruke..
Post a Comment