பொன்னியின் செல்வன் கனவு பலிக்குமா?
தமிழ் மண்ணின் வரலாற்றுக் காவியம் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். இன்றைக்கும் இளைய தலைமுறை விரும்பிப் படிக்கும் பேரபிமானம் பெற்ற நாவல் இது. இதனைப் படமாக்கி அதில் தானே நடிக்க ஆசைப்பட்டார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதற்கான கதை விவாதக் குழு, தயாரிப்புக்கான ஆள் என அனைவரையும் ரெடி செய்த நிலையில், எம்.ஜி.ஆருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அத்தோடு ட்ராப் ஆனது பொன்னியின் செல்வன். அதன் பிறகு பல தயாரிப்பு ஜாம்பவான்கள் பொன்னியின் செல்வனை படமாக்கப் போராடியும், கதாநாயகர்கள் யாரும் சம்மதிக்க மறுத்ததால், அந்த ஐடியாவே தலைமுழுகப்பட்டது.
அதன் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த ஐடியாவை மறுபடியும் கையில் எடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். நான்கு மணி நேரத்துக்கு ஓடக்கூடிய படமாக பொன்னியின் செல்வனை உருவாக்கத் திட்டமிட்ட மணிரத்னம், அதற்கான திரைக்கதை பொறுப்பை எழுத்தாளர் ஜெயமோகனிடம் ஒப்படைத்தார். திரைக்கதை தெளிவாக வளர்ந்த நிலையில், வந்தியத்தேவன் பாத்திரத்துக்காக நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரும் அதற்கு சம்மதித்தார்.
அடுத்தபடியாய் நடிகர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 'ஆறு மாத காலம் கால்ஷூட் தரத் தயார்' என்றார் விஜய். இதைவைத்து மணிரத்னம் - விஜய் இணைந்து கலக்கும் பொன்னியின் செல்வன் என செய்திகளும் பரபரப்பு கிளப்பின. ஆனால், அடுத்த சில நாட்களில் என்ன சிக்கலோ... 'பொன்னியின் செல்வன் திரைக்கதையைப் படமாக்க வேண்டாம்' என ஜெயமோகனிடம் சொல்லிவிட்டார் மணிரத்னம். அதன்பிறகு பல நாட்களாகக் கிடப்பில் கிடந்த பொன்னியின் செல்வன் கதை இப்போது இயக்குனர் செல்வராகவன் மூலமாக மறுபடியும் உயிர் பெற்று இருக்கிறது.
''நிச்சயமாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்குவேன். அதற்கு எவ்வளவு பட்ஜெட் ஆனாலும் எனக்குக் கவலையில்லை." என்கிறார் செல்வராகவன். அதேநேரம், செல்வராகவன் எடுத்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை மையமாக வைத்து கிளம்பும் எதிர்ப்பும் கடுமையாக இருக்கிறது. ''சோழர்களின் வரலாற்றை எடுப்பதாக சொல்லி, சோழ மண்ணின் மரபுகளையே கேவலப்படுத்திவிட்டார் செல்வராகவன். பொன்னியின் செல்வனும் சோழ மண்ணின் வரலாறுதான். அதனால், செல்வராகவன் பொன்னியின் செல்வனை எடுக்காமல் இருந்தால், அதுவே உத்தமம்!'' என்கிறார்கள் ஆவேசமாக.
பொன்னியின் செல்வன் கதை அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அதற்காக பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் சென்டிமெண்டாக பொன்னியின் செல்வனை எடுத்தால் சிக்கல் வரும் என்கிற தவறான நம்பிக்கையும் கோடம்பாக்கத்தில் நிலவுகிறது. குறிப்பாக ஐம்பது கோடிக்கும் குறையாத பட்ஜெட்டும், இரண்டு வருட கால உழைப்பும் இருந்தால் தான் பொன்னியின் செல்வனை படமாக்குவது சாத்தியம். இத்தகைய தயக்கம்தான் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி... அந்த வரலாற்றுக் காவியத்தைக் கையிலெடுக்கும் தைரியம் யாருக்கு வருகிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்!
- கும்பல்



+ comments + 1 comments
பொன்னியின் செல்வனை பொறுமையாகப் படிப்பதற்கே நம் ஆட்களுக்கு நேரமிருக்காது. இவர்களுக்கு எப்படி அதனைப் படம் எடுக்க நேரம் கிடைக்கப் போகிறது. சும்மா பரபரப்புக்காக கிளப்பி விடுவாங்க...
Post a Comment