''சினிமா நண்பர்களும் வெளியாட்களும் என்னை நிறைய விழாக்களுக்கு அழைக்கின்றனர். அவற்றில் கலந்துகொள்ள விருப்பம் என்றாலும், என்னால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. காரணம், என் மருத்துவர்கள் எனக்கு சொல்லியிருக்கும் அறிவுரை அப்படிப்பட்டது. வெளியிடங்களுக்கு செல்லும் பொது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான் என்னால், எங்கேயும் செல்ல முடியவில்லை!" - 'கும்கி' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசிய பேச்சு இது.
ரஜினியின் உடல்நிலை இன்னும் நார்மலான நிலைக்கு வரவில்லை என்பதை ரஜினி ரசிகர்களே அந்த பேச்சுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டார்கள். ஆனால், இதற்கிடையில் உயிரின் கடைசிக் கட்டப் போராட்டத்தில் இருந்த தன் ரசிகனுக்காக ரஜினி செய்த உதவி, எல்லோரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கார்த்திக் என்ற சிறுவன் ரஜினியின் தீவிர ரசிகன். அவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஒருகட்டத்தில் சிகிச்சை வெற்றி தராது என முடிவு செய்தனர். அதனை வெளிப்படையாக கார்த்திக்கிடம் சொல்லாமல், 'உன்னுடைய முக்கியமான கனவு என்ன?' எனக் கேட்டிருக்கிறார்கள். 'ரஜினி என்றால் எனக்கு உயிர். அவரை ஒருமுறை நேரில் பார்த்தால்... அந்த நிறைவே எனக்குப் போதும்' என்றான் கார்த்தி. இந்த விஷயம் ரஜினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனே அந்த சிறுவனை சந்திக்க வேண்டும் என ரஜினி சொல்ல, மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள். 'புற்றுநோய் பரவும் தன்மை அற்றதுதான். ஆனாலும், அங்கிருக்கும் இதர நோயாளிகளுக்கு என்னென்ன தோற்று இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதனால், தயவு செய்து அந்தப் பையனைப் பார்க்க போக வேண்டாம்' என சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். சரி எனச் சொல்லி அமைதியான ரஜினி, அன்று மாலையே என்ன நினைத்தாரோ... தன் டிரைவரை கார் எடுக்கச் சொல்லி நேரே ஆஸ்பத்திரிக்கு கிளம்பிப்போய் கார்த்தியை சந்தித்து இருக்கிறார்.
கார்த்திக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அத்தனை மருத்துவர்களையும் அழைத்து 'ரஜினி அங்கிளை பார்த்துட்டேன்... இதுபோதும் எனக்கு!' என ஆனந்தமாக கொண்டாடி இருக்கிறான். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பையனை தோள்மீது அணைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார் ரஜினி. மருத்துவர்களின் எச்சரிக்கையை சட்டையே செய்யாமல் கார்த்திக்குடனும், இதர நோயாளிகளுடனும் ஆறுதலாக உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருக்கிறார் ரஜினி.
ரஜினி என்கிற மகத்துவ வார்த்தையின் அர்த்தம்... இந்த எளிமையும், எதையும் செய்யத் துணியும் வலிமையும்தானே!

Post a Comment