வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது 'சுந்தரபாண்டியன்' பாடல்கள் வெளியீட்டு விழா. யாருக்குமே தெரியாமல் சசிகுமார் நடத்திய இந்த விழாவில் என்ன நடந்தது என்பது பற்றி சில சினிமா புள்ளிகளிடம் பேசினோம்.
அதிலிருந்து... மயிலாட்டம், கரகாட்டம் எனப் பட்டையைக் கிளப்பிய விழாவில் இயக்குனர் பாலாதான் சிறப்பு விருந்தினர். பாலாவுடன் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த லெட்சுமி மேனன், சூரி, இனிகோ, அப்புக்குட்டி உள்ளிட்டோர் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். பாடல் கேசட்டை வெளியிட பாலா அழைக்கப்பட்டபோது ஏகக் கரகோஷம். மேடையை விட்டு இறங்கி சசிகுமார் பாலாவை கைப்பிடித்து அழைத்துவர குருவும் சிஷ்யனும் நடைபோட்டு வந்த அழகே அழகு.
பாலா கேசட்டை வெளியிட, யார் பெற்றுக்கொள்வது என்கிற கேள்வி பலரையும் படபடக்க வைத்தது. 'கேசட்டை பெற்றுக்கொள்வது யார்?' என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, சசிகுமார் இரு வாலிபர்களை மேடையேற்றினார். 'யார் இவர்கள்?' என மேடையே ஆர்ப்பரிக்க, 'என்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்க இருக்கும் புதுமுக இயக்குனர்கள் இவர்கள். ஒருவர் முத்தையா... இன்னொருவர் சாக்ரடீஸ். நாளைய இயக்குனர்களாக அவதரிக்க இருக்கும் இந்த இருவருக்கும் உரிய மரியாதை செய்யும் விதமாகவே பாலா அண்ணனிடம் இருந்து கேசட்டை பெற இவர்களை அழைத்தேன்' என சொல்லியிருக்கிறார் சசிகுமார். இரு புதுமுக இயக்குனர்கள் முகத்திலும் அத்தனை நெகிழ்ச்சியாம்!
பெரும்பாலும் எந்த மேடையிலும் வாய் திறக்காத பாலா, ''சசிகுமாரை எல்லாரும் நம்ம குடும்பத்துல ஒருத்தர்னு சொன்னாங்க... அதேதான் நானும் சொல்ல விரும்புறேன். சுந்தரபாண்டியனை சசி எந்தளவுக்கு எதிர்பார்க்கிறானோ அதைவிட அதிகமா நான் எதிர்பார்க்கிறேன்'' என மனம் திறந்திருக்கிறார்.
நிகழ்ச்சியின் முடிவில் சசிகுமாரிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டிருக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ''பாலா, அமீர் இருவரில் உங்களுக்குப் பிடித்த இயக்குனர் யார்? ஒருவர் பெயரைத்தான் சொல்ல வேண்டும். இதற்கு பதில் சொல்ல மழுப்பினால், எல்லோர் மத்தியிலும் நீங்கள் டான்ஸ் ஆட வேண்டும்" என நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொல்லி இருக்கிறார்.
இந்த தகவல்களை எல்லாம் நம்மிடம் சொல்லிய அந்த சினிமா புள்ளியிடம், ''அதுக்கு சசி என்னண்ணே பண்ணினார்?" என ஆவலாகக் கேட்டோம். ''எல்லாத்தையும் இப்பவே சொல்லிட முடியுமா... சசி பதில் சொன்னாரா... டான்ஸ் ஆடினாரான்னு சன் டி.வி நிகழ்ச்சியிலேயே பார்த்துக்கங்க" என சொல்லிவிட்டு ஜூட் ஆனார் அந்த சினிமா புள்ளி. அதுவரைக்கும் மனசு தாங்காதே மக்கா!
+copy.jpg)
+ comments + 2 comments
Bala peyarai thaan solli iruppar sasi...
Pl reply sasi
Post a Comment