Latest Movie :

சும்மா அலட்டிக்காம படம் பண்ணுங்க சார்...!


முகம் தெரியாத பத்துப் பசங்க... நாலு பொண்ணுங்க... அப்படியே ஒரு பைவ் டி கேமிரா... இவை இருந்தாலே இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் பண்ணக் கிளம்பிடலாம். விஞ்ஞானம் எல்லாவற்றையுமே எளிதாக்கி விட்டது. வருடக் கணக்கில் உதவி இயக்குநராகக் கஷ்டப்பட்டு, தட்டுத் தடுமாறி ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, அவர் ஏதோ ஒரு ஆசையில் ஐந்து சதவீத படத்துக்கு மட்டும் பணம் போட்டுவிட்டு, ஆகாயத்தை வெறித்துப் பார்க்க... 'படம் வருமா வராதா' எனத் தெரியாமல், அடுத்த தயாரிப்பாளரையும் பார்க்க முடியாமல் அல்லாடி தவிக்கும் எத்தனையோ பேரை இந்தக் கோடம்பாக்கம் பார்த்திருக்கிறது. இன்றைக்கு வெற்றிப்பட இயக்குனர்களாக இருக்கும் பலரும்கூட இத்தகைய அல்லாட்டங்களுக்கு ஆளாகி மீண்டவர்கள்தான்.

ஆனால், இன்றைய நிலைமை அப்படிப்பட்டது இல்லை. 50 லகரங்கள் இருந்தால் குறைந்த பட்ஜெட் படத்தை நிச்சயமாக எடுத்துவிட முடியும் என்கிற நிலைமை இன்றைக்கு எல்லோருக்கும் ஆறுதல் அளிக்கிறது. மனதில் கதை உருவான உடனேயே பைவ் டி கேமிராவும் ஆட்களுமாக ஏதாவது ஒரு கிராமத்தை நோக்கி ஓடிவிடுகிறார்கள். பிலிம் ரோல் பிரச்சனையே இல்லாமல் எத்தனை தடவை வேண்டுமானாலும் ரீடேக் சொல்லி புதுமுகங்களை பெண்ட் கழட்டி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான மதுபானக் கடை இதற்கு நல்ல உதாரணம். படத்தில் கதையே இல்லை; அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கவலைப்படவும் இல்லை. ஒரு மதுபானக் கடையில் நடக்கும் பலவிதமான சம்பவங்களின் கலவைதான் படம். வித்தியாசமான முயற்சி என பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது மதுபானக் கடை 
 படம். அதேபோல் அடுத்து விழி விரிய வைத்த யதார்த்த படம் 'அட்டகத்தி'. படத்தில் கதையோ காவியமோ எதுவுமில்லை. ஆனால், ஒரு வாலிபன் மீது ட்ராவல் ஆகும் கேமிராவின் பார்வையாக இருந்தது அந்தப் படம். 
இனி படம் எடுக்க கதை விவாதமோ எங்கேயோ ரூம் போட்டு மூளையை கசக்க வேண்டிய அவசியமோ இருக்காது போலிருக்கிறது. 'சும்மா அலட்டிக்காம படம் பண்ணுங்கப்பா' என தயாரிப்பாளர்களே துண்டுச் சீட்டில் கதை எழுதி வந்து காட்டினாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை. 
ஆனால், இதேநிலை தொடர்வது நல்லதுதானா...?
எப்போதாவது இத்தகைய படங்கள் வந்தால் ரசிக்கலாம்; சிரிக்கலாம். ஆனால், சும்மா நாலு பேரை வைத்துப் படம் பண்ணலாம் என்கிற 'துணிச்சலோடு' படம் எடுக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நிச்சயம் கோடம்பாக்கம் தாங்காது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வழக்கு எண் படத்தைப்போல் வித்தியாசமான கதைக்களங்களை யோசிக்க ஆள் இல்லாமல் போய்விடக் கூடாது.  


சமீபத்தில் பிரபு சாலமன் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் 'சாட்டை' படத்தின் மொத்த பட்ஜெட்டே 1.90 லட்சம்தான். கல்வியின் அவசியத்தையும் குறிப்பாக அரசுப் பள்ளிகளின் அவல நிலையையும் சுட்டிக்காட்டும் இந்தப் படம் இப்போது வர்த்த ரீதியில் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தனியார் சேனலுக்கு சாட்டிலைட் உரிமை மட்டுமே இரண்டு கோடி ரூபாய்க்கு பேசப்பட்டிருக்கிறது. இத்தகைய ஆரோக்கிய சூழலுக்கு தமிழ் சினிமா உலகம் தன்னைத் தயார்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்வியல் பதிவுகளாக - பெங்காள்  - மலையாள படங்களைப் போல் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களாவது கோடம்பாக்கத்தில் மலர வேண்டும். அதுவே தமிழ் சினிமாவின் அடையாளத்தைக் காப்பாற்றும் கடமையாக இருக்கும்!
- எம்.சதிபாரதி 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger