பாலாவின் 'பரதேசி' படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறாரா இல்லையா என்கிற பட்டிமன்றம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ''பாலா சார் என்னை அழைத்தது உண்மை... நான் நடிக்கப் போனதும் உண்மை... ஆனால், நடிக்க முடியாத இக்கட்டான சூழல் உருவாகிவிட்டது... ஒரு பிரம ரிஷியின் கையில் பயில்விக்கப்படும் வாய்ப்பை சில நிமிடங்களில் நான் இழந்து விட்டேன்...'' என உருக்கமாக சில உண்மைகளை இறக்கி வைத்திருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
''என்னை வைத்து நான் மட்டுமே படங்களைத் தயாரிக்கும் நிலைமை மாறி, இப்போது வெளியாட்களின் படங்களிலும் என்னை அழைக்கிறார்கள். என் சினிமா வாழ்வில் இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதிலும் குறிப்பாக இந்திய சினிமா உலகின் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருக்கும் பாலா சார் என்னை பரதேசி படத்துக்காக அழைத்த போது இது கனவா நனவா என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நான் சினிமா உலகுக்கு வந்ததற்கு இந்த ஒரு அழைப்பே போதும்... எனக்கு மிக நெருக்கமான நண்பர்களுக்கு போன் செய்து பாலா சார் அழைத்திருக்கும் விஷயத்தை சொன்னேன். அவர்கள் அனைவருக்கும் பார்ட்டி கொடுத்தேன்.
அடுத்த நாளே பாலா சாரை நேரில் போய் பார்த்தேன். என்னை ஏற இறங்கப் பார்த்தார். 'மீசையை எடுக்க வேண்டி இருக்குமே... பரவாயில்லையா?' என்றார். ஐந்து நிமிச அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் மீசை இல்லாமல் உங்கள் முன்னால் நிற்பேன்... என சொன்னேன். என் மரியாதையான பேச்சு பாலா சாருக்கு பிடித்துவிட்டது போலும்... சரி, நீங்க என் படத்தில் நடிக்கிறீங்க... கால்ஷூட் விசயங்களை மத்தவங்க சொல்வாங்க என்றபடி கிளம்பி விட்டார். எனக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. ஆனால், முதல் நிமிட சந்தோசம் அடுத்த நிமிசமே பறிபோன மாதிரி யூனிட்டில் உள்ளவர்கள் எனக்கான தேதிகளை குறிப்பிட்டபோது அதிர்ந்து விட்டேன். அந்த தேதிகளில் நான் வேறு சில வேளைகளில் கமிட்டாகி இருந்தேன். பாலா சாரிடம் போய் தேதியை மாற்ற சொல்ல முடியுமா என்ன? அதனால், என் துரதிஷ்டத்தை நொந்துகொண்டு கிளம்பிவிட்டேன். பாலா சாரின் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக என் லட்சக்கணக்கான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பாலா சாரும் என்னை மனமுவந்து மன்னிக்க வேண்டும்.
இந்த ஏமாற்றத்தை ஈடு செய்யும் விதமாக என் ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோசமான செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... தற்போது விக்ரம் நடிப்பில் ஷங்கர் சார் இயக்கிவரும் 'ஐ' படத்தில் என்னை நடிக்க அழைத்திருக்கிறார்கள். எவ்வித தேதி குளறுபடிகள் இருந்தாலும், நிச்சயம் அந்தப் படத்தில் நடிப்பேன். பாலா சாரை மிஸ் செய்தது போல் ஷங்கர் சாரை மிஸ் பண்ண மாட்டேன்!" என்கிறார் பவர் ஸ்டார்.
பின்குறிப்பு: இராம நாராயணன் மற்றும் நடிகர் சந்தானம் இணைந்து தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பவர் ஸ்டார். தமிழகமே தயாராகு..!
- எம்.சதிபாரதி



+ comments + 1 comments
Power star photos & comments ragalai kilappukirathu.
Post a Comment