கருணாவின் திட்டம்தான் என்ன?
திண்டாடும் ஈழத் தமிழர்கள்!
வருவாரா மாட்டாரா என்கிற பரபரப்பான விவாதத்துக்கு முடிவு வந்துவிட்டது. கருணாநிதியின் டெசோ மாநாட்டில் பங்கேற்பதாக அறிவித்துவிட்டார் பூதாகரப் புள்ளி சரத்பவார். காங்கிரஸ் அரசோடு நடத்திய கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்ததால், டெசோ மாநாட்டுக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார் சரத்பவார்.
இலங்கையிலிருந்து மாவை சேனாதி ராஜா எம்.பி., சுமந்திரன் எம்.பி. யோகேஸ்வரன் எம்.பி, கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வராஜா சுஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், விக்கிரமபாகு கர்னரத்தினே உள்ளிட்டோர் டெசோ மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. ஆனால், சம்மந்தப்பட்ட இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகளில் எத்தனை பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை. இதற்கிடையில் மாநாட்டை உலகளாவிய கவனத்துக்கு திருப்பும் விதமாக பரூக் அப்துல்லா, சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான், ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட தேசியக் கவனம் பெற்ற தலைவர்களை மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார் கருணாநிதி. அவர்களும் வருவதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள்.
அவர்கள் மட்டும் அல்லாது, நைஜீரிய ஒசிகேனா போய்டோனால்டு, துருக்கி கெமால், ஸ்வீடன் நசீம் உள்ளிட்ட பன்னாட்டுப் பிரசித்தி தலைவர்களும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். தனி ஈழக் கோரிக்கையை மட்டும் தவிர்த்துவிட்டு ஈழ விடிவுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார் கருணாநிதி. தமிழகத்தில் டெசோ முன்னெடுப்புகள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வந்தாலும், சர்வதேச கவனத்தை இந்த மாநாடு ஏற்படுத்தி இருப்பது உண்மை! ஆனாலும், நமக்கிருக்கும் மனவருத்தம் என்ன என்றால்... ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது போரைத் தடுக்கவோ இனப்படுகொலைகளைக் கண்டிக்கவோ செய்யாத கருணாநிதி, இப்போது திடீர் ஈழப் பாசம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் குணத்துக்கு ஒப்பானதுதானே இது?
இதற்கிடையில் கருணாநிதியின் டெசோ மாநாட்டு ஆர்வத்துக்கு வேறு விதமான அர்த்தத்தையும் கற்பிக்கிறார்கள் நடுநிலையாளர்கள் சிலர். ''மத்திய அரசின் பிடியை எப்போதும் கையில் வைத்திருக்க நினைப்பவர் கருணாநிதி. இப்போதைய நிலையில் மத்திய அரசின் தள்ளாட்டாம் கடுமையாக இருக்கிறது. மம்தா ஒருபுறம்... சரத்பவார் மறுபுறம் என காங்கிரஸ் அரசுக்கான குடைச்சல்கள் தீவிரமாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் ஈழ முன்னெடுப்புகளை செய்து தன் தரப்பிலும் சோனியாவுக்கு சங்கடத்தை உண்டாக்க வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் திட்டம். டெசோ மாநாட்டில் சோனியாவுக்கு உடன்பாடே இல்லை. மாநாட்டுக்கு சரத்பவார் வருவதிலும் சோனியாவுக்கு தலைவலிதான். கருணாநிதியும் சரத்பவாரும் சேர்ந்தால், அது என்றைக்கும் தங்களுக்கான தலைவலியாக மாறும் என்பதை சோனியா உணர்ந்து இருக்கிறார். அதனால், டெசோ மாநாடு குறித்து தி.மு.க. புள்ளிகளிடம் சோனியா பேச வேண்டிய இக்கட்டு இப்போது உருவாக்கி இருக்கிறது.
இதனைப் பயன்படுத்தி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கச் சொல்லி நீதிமன்றத்தில் கனிமொழி போட்டிருக்கும் மனுவை பரிசீலிக்க வைக்கப் பார்க்கிறார் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தி.மு.க. போடும் திட்டமே டெசோ மாநாடு. எந்தக் காலத்திலும் ஈழத்துக்காக கருணாநிதி நல்லது செய்ய மாட்டார். தன் மகளை மீட்க அவர் போடும் நாடகமே இது!" என்கிறார்கள் அந்த நடுநிலையாளர்கள்.
டெசோ மாநாடு கண்ணீரில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காகவா... இல்லை, கவலையில் அல்லாடும் கனிமொழிக்காகவா... என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்!
- கும்பல்



+ comments + 2 comments
KARUNA.... ENKIRA karunanidhi.
”உழவேண்டிய காலத்தில்
ஊருக்குப் போய்விட்டு
அறுவடைநாளில்
அரிவாளோடு வந்தவன் கதையாக...
கருணாநிதியின் டெசோ”
Post a Comment