மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு குக்கிராமம் அது. அங்கே உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இரு சிறுவர்கள். மளிகை பொருட்கள் வாங்க அவர்கள் இருவரையும் கடைக்கு அனுப்பி வைப்பாள் தாய். என்ன பொருள் என்ன விலை விற்கிறது என்கிற விவரம் அந்தத் தாய்க்கு அத்துபடி. அதனால் கூடுதலாக விலை சொல்லி அந்த சிறுவர்களால் காசு பார்க்க முடியாது. ஆனாலும் தம்பிகாரன் கையில் எப்போதும் காசு புழங்கும். மூத்தவன் கையில் பைசாகூட இருக்காது. இதனால் சந்தேகம் கொண்ட மூத்தவன் இளையவனிடத்தில் கேட்டான், " உன் கையில் மட்டும் எப்படிடா இவ்வளவு காசு. அம்மாவுக்கு விலைகள் நன்றாக தெரியுமே! அம்மா காசு வைக்கும் இடத்தில் இருந்து திருடிகிறாயா " என்று கேட்டான். அதற்கு இளையவன், " அம்மாவுக்கு எல்லா பொருட்களின் விலைதான் தெரியும். ஆனால் நான் வாங்கும் பொருளின் எடை தெரியாதே...!" என்றான் பலத்த சிரிப்போடு. அந்த சமத்துப் பையன் யார் தெரியுமா? சாட்சாத் நம்ம ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார் பிரணாப். ஆனால், அந்த வெற்றிக்கான பெருமிதம் அவரிடத்தில் இல்லை. இந்தியாவின் நிதியமைச்சர் என்கிற பொறுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி பதவி சுண்டைக்காய் என நினைக்கிறார் பிரணாப். அதோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதையும் அவர் விரும்பவில்லை. ஒலிம்பிக்கில் ஓடிக் கொண்டிருந்தவரை திடீரென ஓய்வு பெறச் சொன்னால் எப்படி இருக்கும்?! அது போலத்தான் பிரணாப்புக்கும் இருந்தது. ஆனாலும் அதனை நினைத்து அவர் வருந்தவில்லை. தான் மட்டுமே ராகுலின் பிரதமர் பதவிக்கு குறுக்கே நிற்பதாக சோனியாவும், காங்கிரஸ் சொந்தங்களும் நினைப்பதை அறிந்தார் பிரணாப். தன்னை ஜனாதிபதியாக்கி கட்சி கௌரவப் படுத்த நினைக்க வில்லை மாறாக தன்னைக் கட்டம் கட்டும் திட்டமாகவே நினைத்தார்.
உலக பொருளாதாரத்தையும் உள்ளூர் அரசியலையும் விரல் நுனியில் வைத்து கொண்டு சிங்கம் போல சுற்றி வந்தவருக்கு ஜனாதிபதி பதவியும் ஒருவகையில் ஓய்வுதான். மந்திரி சபை இயற்றும் தீர்மானங்களை கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட வேண்டிய ஒரே வேலை மட்டும் தான்.
எப்போதும் பரபரப்பாக துவங்கும் ஜனாதிபதி தேர்தல், வேட்பாளர்களின் அறிவிப்புக்கு பின் அமைதியாகி விடும். ஆனால் இந்த முறை வேட்பு மனுதாக்கல் செய்த சில நாட்களிலே அதிகாரம் மிக்க பதவியில் பிரணாப் இருக்கிறார் அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சங்மா கிளப்பிய பூதம் கடைசிவரை ஓயவே இல்லை. குளறுபடிகளை ஒதுக்கி விட்டு கடைசிவரை வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருந்தார்.
இன்றைய இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் ஜனாதிபதி அவர்கள் தன் பதவிக்காலத்தில் அனுபவிக்க போகும் சுக போகங்கள், சலுகைகள், அரசுமுறை பயணங்கள், பதவிக்கு பின் அவருக்கு அரசு வழங்கும் சலுகைகள் மரியாதைகள், இவற்றுக்கான விலை என்ன என்கிற அத்தனை விவரங்களும் தெரிகிறது. ஆனால் அன்றாடம் ஜனாதிபதி செய்யும் வேலைகள் என்னென்ன... ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் என்னென்ன... இந்த நாட்டின் வளர்ச்சியிலும் ,குடிமகன்களின் வளர்ச்சியிலும் அவரின் பங்குஎன்ன... அந்நிய தேச உறவுகளில் அவரின் நிலைப்பாடு என்ன என்கிற விவரங்களை எல்லாம் வெளிப்படுத்தும் விதமாக ஆளுமை கொண்ட ஜனாதிபதியாக பிரணாப் விளங்க வேண்டும். அரசியல்வாதிகளை எப்படி தன் அதிகாரத்தினை கொண்டு முடுக்கி விடவும் அடக்கி ஆளவும் முடியும் என்பதையும் பிரணாப் தன் ஆக்கபூர்வ செயல்பாடுகளால் நிரூபிக்க வேண்டும்.
இதனை செய்யும் வல்லமை மிகுந்தவராக பிரணாப் விளங்குவார் என நம்புவோம்... பிரணாப் வெற்றி பெற்ற போது டெல்லியின் காங்கிரஸ் புள்ளி ஒருவர் அடித்த கமென்ட் குறிப்பிடத்தக்கது. இதுதான் அந்தக் கமென்ட்...
''ராகுலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என்பதற்காக பிரணாப்பை ஜனாதிபதியாக்கி விட்டார் சோனியா. ஆனால், நாளைக்கே ராகுல் பிரதமராக வந்தால் தனது கோஷ்டியினரை லாவகமாக தூண்டிவிட்டு ஆட்சியைக் கலைக்கவும் பிரணாப் தயங்க மாட்டார். பிரதமர் என்கிற பிரமாண்டமான அறையில் ராகுலை அமரவைக்க நினைத்த சோனியா அந்த அறையின் சாவியை பிரணாப்பிடம் கொடுத்ததுதான் அறியாமையின் உச்சம்!"
- கும்பல்



+ comments + 1 comments
கட்டுரையின் துவக்கத்தில் வரும் கதை அருமை... கடைசி பாராவின் பஞ்ச் சூப்பர்...
Post a Comment