Latest Movie :

''காவிரியை மறுத்தால் கரண்ட் கட்!"




சீமான் சீற்றம்! 


காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரைக்கூட விட மாட்டோம் என்று கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தவாசி பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
 
அந்தப் பொதுக்கூட்ட உரைவீச்சின் சிறு பகுதி...


'கச்சத் தீவு எங்கள் பாட்டன் சேதுபதி அரசுக்கு சொந்தமானது, ஆனால் அதனை தமிழனைக் கேட்காமல் தூக்கி இலங்கைக்கு கொடுக்கிறது இந்திய அரசு. இதனை தட்டிக்கேட்டால் பிரிவினைவாதம் என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாகவும் கூறி சிறையில் அடைக்கிறது. இலங்கையுடன் நட்பை வளர்த்துக்கொள்ள கச்சத்தீவை தூக்கி இலங்கைக்குக் கொடுப்பதை எதிர்க்கும் நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என்று காங்கிரஸ்காரர்கள் குற்றம்சாற்றுகிறார்கள். 

தமிழ்நாட்டை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் ஆகியன ஆட்சியில் இருந்தாலும், அவைகள் அந்த மாநில உரிமைகளுக்காக அந்த மண்ணின் மக்களின் உணர்வுகளை மதிக்கும் மாநிலக் கட்சிகளாகவே ஆட்சி செய்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன, ஆனால் இவைகள் தேச ஒற்றுமையைப் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டும் காணாதவை போல நடந்துகொள்கின்றன. அதுதான் முல்லைப் பெரியாற்றில் இருந்து காவிரி வரையிலான நதி நீர்ப் பிரச்சனைகளுக்கும், கச்சத் தீவு பறிபோனதற்கும் காரணமாகும்.


லங்கையில் இந்திய அரசின் துணையோடு தமிழினத்தை சிங்கள இனவெறி ராஜபக்ச அரசு படுகொலை செய்ததை தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம், தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இல்லாததே காரணமாகும். மதத்தாலும், சாதிகளாலும் பிளவுண்டு கிடந்த காரணத்தினாலும், நம்மை ஆண்ட கட்சி தமிழின உணர்வற்று, டெல்லியின் அடிமையாக இருந்த காரணத்தினாலும்தான் இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதாகும். தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், தமிழினத்தின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மலர வேண்டும். சாதி, மத பேதங்களை கைகழுவிட்டு, மொத்தத் தமிழரும் சேர்ந்து ஒற்றைத் தமிழரை ஆதரித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி சாத்தியம்.

ஒவ்வொரு நாளும் பறிபோகும் தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு மாநில சுயாட்சி வேண்டும். அது நிறைவேற வேண்டுமெனில் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மலர வேண்டும். கூட்டாட்சி என்றால் கூட்டணி ஆட்சி அல்ல, அது அரசியல்  பதவி பேரத்திற்கு ஆனது. நாம் வலியுறுத்துவது கூட்டாட்சி. அது ஏற்பட வேண்டுமெனில் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையிலான ஆட்சி அமைவது தடுக்கபட வேண்டும். அது தடுக்கப்பட முதலில் தமிழ்நாட்டில் இருந்து இவ்விரு கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் உரிமைகளை காப்பாற்றும் கட்சிகளே ஆட்சிக்கு வரவேண்டும். அப்போதுதான் டெல்லியில் உண்மையான கூட்டாட்சி மலரும். அப்படிப்பட்ட கூட்டாட்சியில்தான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் முழுமையாக கிடைக்கும்.
 
தமிழினத்தை அழித்தொழித்த இலங்கை அரசுக்கு ஆதரவு தந்ததற்குக் காரணமாம் இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பு கருதியே என்று இந்திய மத்திய அரசு கூறியது. ஆனால் தமிழினம் அழித்தொழிக்கப்பட்டு போர் முடிவுற்ற இந்த மூன்றாண்டுக் காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் வலிமையாக கால் ஊன்றிவிட்டன. இலங்கையுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள தூக்கிக் கொடுத்த கச்சத் தீவில் இன்றைக்கு சீனாவின் கடற்படை காலூன்றி உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இதுதான் இலங்கையுடன் நட்பு கொண்டதற்கு கிடைத்த பரிசு. நமது நாட்டின் மீனவர்கள் 500க்கும் அதிகமானோரை கொன்றொழித்த இலங்கையை நட்பு நாடு என்று இன்று வரை பேசிக்கொண்டிருக்கிறது டெல்லி அரசு. அதனுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுகிறது தி.மு.க. இந்த ஏமாற்று அரசியலை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்."

கும்பல்
 


Share this article :

+ comments + 1 comments

இந்தியா என்னும் நாட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லை இந்த கர்நாடகத்துக்கு... நதிகளை எல்லாம் தேசிய மயமாக்குவதுதான் இதற்கு ஒரே தீர்வு...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger