குடியரசுத் தலைவர் தேர்தலில் எவ்வித நிபந்தனையும் செய்யாமல் வலிய வந்து ஆதரித்து வழிமொழிந்த கடமைக்காக தி.மு.க.வை கவுரவிக்கக் காத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. ''தி.மு.க.வுக்காக இரு மத்திய அமைச்சர்கள் பதவி காத்திருப்பில் வைக்கப்பட்டு உள்ளது'' என பல மாதங்களுக்கு முன்னரே அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். ஆ.ராசா. தயாநிதி மாறன் ஆகிய இருவரின் பதவிகளுக்கு மாற்றாக தி.மு.க.வில் அமைச்சர் பதவியைப் பெறப் போகிறவர்கள் யார் என்கிற பட்டிமன்றம் இப்போதே தொடங்கி விட்டது.
ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என கருணாநிதியை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், ஏற்கனவே பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி இருக்கும் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி சாத்தியமே இல்லை என மறுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. இதற்கிடையில் தன்னுடைய தீவிர ஆதரவாளரான செல்வகணபதிக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுத்தரும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் ஸ்டாலின். தயாநிதி மாறனின் இடத்துக்கு செல்வகணபதியும், ஆ.ராசாவின் இடத்துக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த நாகப்பட்டினம் எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயனும் அமர்த்தப்பட்ட இருப்பதாக உறுதியான செய்திகள் அலையடிக்கின்றன.
ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான விஜயன், கனிமொழியிடமும் உரிய செல்வாக்கை சம்பாதித்து இருப்பவர். ஆனாலும், ராசாத்தி அம்மாள் விஜயனுக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார். இதற்கிடையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு எதிராகவும் சில நிகழ்வுகள் கட்சிக்கும் தொடர்கின்றன. அதனால், அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அவர் இடத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதற்கிடையில் இன்னொரு விதமான பேச்சும் அடிபடுகிறது. அமைச்சர் பதவிக்கு ஆட்களை நியமித்தால் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என மறுபடியும் குடும்பப் பூசல் தலைதூக்கும் என நினைத்து, இப்போதைக்கு அத்தகைய நியமனங்கள் எதுவும் வேண்டாம் என கருணாநிதியே காங்கிரஸ் தலைமையிடம் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
கும்பல்



Post a Comment