ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியா சங்க்மாவா என்கிற போட்டி தீவிரமாகி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பிரணாப் வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பிரணாப்பை ஆதரிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பிரனாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கொடநாடு கிளம்புவதற்கு முன்பு, ''நான் ஏற்கெனவே சொன்னபடி சங்க்மாவைத்தான் ஆதரிப்பேன். அதில் மாற்றுக் கருத்தே இல்லை" என உறுதியாக சொல்லிவிட்டார் ஜெயலலிதா. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது.
உதிரிகளாக இருக்கும் தமிழகக் கட்சிகளின் நிலவரம்தான் யாருக்கும் புரியாததாக இருக்கிறது. ஒரே ஒரு எம்.பி.யை மட்டும் வைத்திருக்கும் ம.தி.மு.க. பிரணாப்பை ஆதரித்தால் ஈழக் கொடுமைக்கு ஆதரவு காட்டலாமா என்கிற குரல் எழுமே என அஞ்சுகிறது. அதேநேரம் சங்க்மாவை ஆதரித்தால் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு தலையாட்டியது போல் ஆகிவிடுமே என்றும் வைகோ நினைக்கிறார். அதனால், அனேகமாக அவரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவே செய்வார் என்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.ம.க., புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை யாரை ஆதரிப்பது என்பது புரியாமல் திண்டாடுகின்றன. ஜெயலலிதாவோ இல்லை சங்கமா மூலமாகவோ யாராவது வெளிப்படையாக அழைத்தால் இந்த உதிரிக் கட்சிகள் உர்சாகமாகிவிட வாய்ப்பிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரனாப்புக்கு ஆதரவு தெரிவுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் நெருக்கடியான போட்டி நிலவினால், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி தமிழக கட்சிகளை உற்சாகத்தில் தள்ளியிருக்கும். ஆனால், பிரனாப்பின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், உப்புச் சப்பில்லாத தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் அமைந்து விட்டது. அதனால், தமிழக அரசியல் கட்சிகள் ஏமாந்து போய்விட்டன.
சரி விடுங்கள்.... ஒரு ரப்பர் ஸ்டாம்பை தேர்ந்தெடுத்து அவரை பன்னாடுகளுக்கும் விமானத்தில் அனுப்பி வைத்து வேடிக்கை காட்ட ஒரு தேர்தல்... அதற்கு இத்தனை வாக்குகள். எல்லாம் இந்தியாவின் நேரம்!
- கும்பல்

Post a Comment