பா.ம.க.வில் இருந்து பிரிந்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கியவர் வேல்முருகன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேல்முருகன் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட வடக்கு மண்டல மண்ணில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். இவருடைய பிரிவால் பா.ம.க.வுக்கு வடக்குப் பகுதிகளில் கடுமையான சரிவு ஏற்பட்டிருப்பதும் உண்மை. கட்சியை விட்டுப் பிரிந்தபோது ராமதாசுக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார் வேல்முருகன். இதனால், வேல்முருகனைக் காலி செய்ய பா.ம.க. தரப்பிலேயே ஆள் தயாரானது. வன்னியர் சங்கத் தலைவரான காடுவெட்டி குருவுக்கும் வேல்முருகனுக்கும் கடுமையான பகை இருப்பதால், பல தரப்பில் இருந்தும் வேல்முருகனுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது.
சமீப காலங்களாகவே வேல்முருகன் எங்கே செல்கிறார், எந்த வாகனத்தில் செல்கிறார், அவரோடு செல்பவர்கள் யார் என்கிற விவரங்களை எல்லாம் சிலர் சேகரிப்பதாக உறுதியான தகவல் போலீஸ் தரப்பை எட்டியிருக்கிறது. ஏற்கெனவே ஈழ விவகாரத்தில் வேல்முருகன் மீது ரகசியக் குழுக்களின் கண் பதிந்திருக்கும் நிலையில், அரசியல் ரீதியான பழிவாங்கலும் அவரைத் துரத்தத் தொடங்கியிருக்கிறது.
ஆள் பலத்துக்கு சற்றும் குறைவில்லாதவர்தான் வேல்முருகன். ஆனாலும், எதிராளிகளின் திட்டமறிந்து செயல்படுவதே அவருக்கு தக்க தற்காப்பாக அமையும். போலீஸ் அதிகாரிகள் பலரையும் நட்பு வட்டத்தில் வைத்திருக்கும் வேல்முருகன் அவர்கள் மூலமாகவே தனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வது நல்லது.
வேல்முருகனின் குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சிகள் ஏற்கனவே நடந்தன. வேல்முருகனின் மனைவிக்கு பல தொலைபேசி எண்களில் இருந்தும் வேல்முருகனின் வாய்ஸில் பேசி அவர் குடும்பத்தை சிதைக்க முயற்சி நடந்தது. அதனை சமயோசிதமாக வென்று காட்டிய வேல்முருகன், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளிலும் வெற்றிபெற வேண்டும்.
+ comments + 1 comments
வேல்முருகன் தனிக்கட்சி நடத்துகிறார் என்பதே இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது தான் தெரிகிறது. சட்டமன்றத்தில் கேள்விகளால் துளைத்தெடுத்த வேல்முருகன் இப்படி அட்ரஸ் இல்லாத ஆளாக மாறியதுதான் காலம் செய்த கோலம்!
Post a Comment