சந்தோஷ் சிவனின் அழகிய ஒளி ஓவியத்தில் திரைக்கு வந்திருக்கிறது உருமி. கேமிராவுக்காக மட்டுமே படத்தை பத்து தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்படியொரு தத்ரூபப் பதிவு. மன்னர்கள் காலத்துக் கதையைச் சொல்ல, பிரமாண்டமான செட், படைகள் எனக் காட்டுவது அத்யாவசியம். ஆனால், அதனை தவிர்த்து, தன் செய்நேர்த்தியின் மூலமாக மன்னர்களின் கதை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் சிவன்.
வாஸ்கோடா காமாவின் மிளகுப் பிரியம் தொடங்கி வணிக நோக்கத்தைத் தாண்டி நாட்டையே வசப்படுத்தும் தந்திரத்தை அவர் கைக்கொண்டது வரை வரலாற்று புத்தகங்கள்கூட சொல்லாத கதையை பிரமாதமாகப் பிரித்து மேய்கிறது உருமி! மலைவெளிகளையும், பணியும் சாரலுமாகக் கடக்கும் இயற்கைச் செழிப்பையும், காட்டு முயலின் கர்ப்பத்துடிப்பு தொடங்கி சேற்று யானையின் காலடி வரை சந்தோஷ் சிவனின் கேமிரா விளையாடித் திளைத்திருக்கிறது. கதையில் ஒன்ற முடியாத அளவுக்கு காட்சிகளின் அழகான பதிவு வியக்க வைக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என நினைக்க வைக்கிறது ஒவ்வொரு காட்சியும். கவர்ச்சிக்கான களம் பல இடங்களில் அமைந்தும், அதனை மிகுந்த நாகரிகத்தோடு கையாண்டிருக்கிறது சிவனின் கண்கள்.
அன்றைக்கு எப்படி வெள்ளையர்கள் வணிகத்துக்காக நம் மண்ணை வளைத்து சிதைத்தார்களோ... அதே கொடுமை இன்றைக்கும் தொடர்கிறது. மாவோயிஸ்ட் மண்ணில் நிகழும் மக்களின் போராட்டங்களை வலுவாக எடுத்துச் சொல்லவும், மக்களின் பக்கம் நிற்கவும் எந்த ஊடகங்களுக்கும் துணிவில்லை. மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்குக்கும் குறைவில்லை. இத்தகைய காலச்சூழலில் உருமி சரியான சவுக்கடியாக திரைக்கு வந்திருக்கிறது.
அன்றுபோல் இன்றைக்கும் மேற்கத்திய வல்லூறுகளின் பசிக்கு நாம் இரையாகப் போகிறோமா... இல்லை, அவர்களின் சதினுட்பம் உணர்ந்து, வல்லூறுகளை விரட்டியடிக்கத் தயாராகப் போகிறோமா என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி நிறைகிறது உருமி. பிருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா என அத்தனைக் கதாபாத்திரங்களும் தங்களின் அதிகபட்ச உழைப்பை பதிவு செய்திருக்கும் படம் இது.
பி.கு: நல்ல படங்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான் தெரிந்த கதையாயிற்றே... உருமிக்கு தமிழில் பெரிய வரவேற்பு இல்லை. சில வாரங்கள் தாக்குப் பிடித்து ஓடினாலே சாதனைதான் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.


+ comments + 2 comments
உங்களின் கட்டுரையை படித்துவிட்டுத்தான் உருமி படம் பார்த்தேன். நல்ல படம். ஒளிப்பதிவு பிரமாதம். திரைக்கதையை இன்னும் புரியும்விதமாக சொல்லியிருந்தால் வெற்றிப்படமாக ஜொலித்திருக்கும்!
உருமி.... சபாஷ் சந்தோஷ் சிவன்!
Post a Comment