சசிகலா - ஜெயலிதாவின் மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. பலரும் எதிர்பார்த்தது போலவே 28 ம் தேதி மதியம் 2.15 மணிக்கு சுபயோக சுப நேரத்தில் கார்டனில் கால்வைத்து இருக்கிறார் சசிகலா. கனகராஜ் என்கிற டிரைவர்தான் அவரை உள்ளே கொண்டுபோய் விட்டிருக்கிறார். இதனால், கடந்த 99 நாட்களாக நடந்த பனிப்போர் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழக அப்பாவிப் பெருமக்கள் இந்த மோதலையும், தலைகீழ் முடிவையும் அதிர்ச்சி மாறாமல் பார்த்தபடி இருக்கிறார்கள்.
"முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. ஜெயலலிதா அக்கா மீது எனக்கு மிகுந்த மதிப்பும், அன்பும் எப்போதும் உண்டு. அவருக்கு எதிராக செயல்பட்டவர்களோடு எந்த காலத்திலும் எனக்கு ஒட்டுறவு கிடையாது" என சசிகலா 28 -ம் தேதி காலையில் வெளியிட்ட அறிக்கை அ.தி.மு.க. வட்டாரத்தையே பரபரப்பாக்கியது. சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், கொழுந்தன் ராவணன் உள்ளிட்ட உறவினர்கள் பலரும் தற்போது சிறையில் இருக்கும் நிலையில், சசியின் அறிக்கை ஜெயா தொலைக்காட்சியில் வெளியானது அனைவரையும் திகைக்க வைத்தது.
'சசிகலாவும் கைதாகிறார்' , 'அடுத்த அரெஸ்ட் சசி' என மீடியாக்கள் எழுதிக் குவித்து வந்த நிலையில், அவர் கம்பீரமாக கார்டனில் கால் வைத்திருக்கிறார். (உண்மை நிகழ்வுகளுக்கும் தமிழக மீடியாக்களுக்கும் இருக்கும் தொலைவை என்னவென்று சொல்வது?)
சசிகலாவும் ஜெயலலிதாவும் திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தினர். ''சமீப காலமாக சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் சொந்தங்களை அவரால் கண்ட்ரோலில் வைத்திருக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ராவணனுக்கும் திவாகரனுக்கு மோதல் பகிரங்கமாகவே நடக்கத் தொடங்கியது. அவர்களை சமாதானப்படுத்தக்கூட சசிகலாவால் முடியவில்லை. இதற்கிடையில் எம்.நடராஜனும் அவர் ரூட்டில் தனி ஆவர்த்தனம் நடத்தத் தொடங்கினார். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் சசிகலாவும் ஜெயலலிதாவும் பேசி மொத்த சொந்தங்களையும் வெளியேற்றினார்கள். தன்னையும் வெளியேற்றுவது போல காட்டிக்கொண்டால் தான் உறவுகளுக்கு சந்தேகம் வராது என சசிகலா நினைத்தார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பினால் போதும் என சொந்தபந்தங்கள் நினைத்திருக்கும் இந்த வேளையில் சசிகலா கார்டனில் கால் வைத்திருக்கிறார்'' என்கிறார்கள் கார்டனின் நிகழ்வுகளை அறிந்தவர்கள்.
மோதலோ... காதலோ... ஆனால், தமிழக மக்களின் அப்பாவித்தனம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 'அம்மா மாறிட்டாங்க', 'அம்மா திருந்திட்டாங்க', 'சசிகலா உறவுகளை வெளியே அனுப்பியதன் மூலமாக கட்சியை அம்மா காப்பாத்திட்டாங்க' என நம்பிக்கை புராணம் பாடியவர்கள் கரண்டில் அடிபட்ட காக்காயாக (தமிழக கரண்டில் அல்ல) வீழ்ந்து கிடக்கிறார்கள்.
அம்மையார் மனம் மாறிவிட்டதாக நம்பி சசிகலாவுக்கு எதிராகப் பேசியவர்களும் செயல்பட்டவர்களும் உயிரைக் கையில் பிடித்தபடி தவிக்கிறார்கள்.
எது எப்படியோ... தோழிகளின் நட்புக்கு முன்னால் தமிழக மக்கள் மறுபடியும் முட்டாளாக்கப்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் தான் ஜெயலலிதாவை சசிகலாவிடம் இருந்து பிரித்தோம் என சாதனை புராணம் பாடிய சோ போன்ற சுண்ணாம்பு டப்பாக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?!
- கும்பல்



+ comments + 3 comments
arumaiyana katrurai. arumaiyaana sethi.... nandri
சோ ஒரு சோமாறிப்பயல் என்று தமிழ்நாடே நன்கறியும்.
சண்டை எல்லாம் சும்மா! கண் துடைப்பு!
Post a Comment