மோதலில் தொடங்கி பின்னர் காதலாக மாறி பாரதிராஜாவும் அமீரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் கைகோர்த்தார்கள். இயக்குனர் சங்கத் தேர்தலில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு மறைந்து அவர்கள் இருவரும் ஓன்று சேர்ந்தது கோடம்பாக்கத்தையே ஆச்சர்யப்படுத்தியது. தேனியில் நடந்த படபூஜையில் பாரதிராஜா அமீரை வாழ்த்த, அமீர் பாரதிராஜாவை புகழ வாயடைத்துப் போனார்கள் கோடம்பாக்க புள்ளிகள். ஆனாலும் யார் கண் பட்டத்தோ... அமீர் பாரதிராஜா பிரிவு மீண்டும் உருவாக்கி விட்டது.
சமீபத்திய பெப்சி - தயாரிப்பாளர் சங்க பிரச்சனையில் அமீர் திறந்து ஈடுபடுவது பாரதிராஜா உள்ளிட்ட பலரையும் கடுப்பாக்கி இருக்கிறது. பெப்சி விவகாரத்தால் ஆதிபகவான் படத்தை முடிக்காமல் அமீர் இழுத்தடிப்பதும் சிக்கலாகி இருக்கிறது. நடிகர் சிவக்குமார் தரப்பிலானவர்களும் பருத்திவீரன் பிரச்சனையால் அமீர் மீது ஆவேசத்தில் இருக்கிறார்கள். எவ்வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் என்பதாலோ... இல்லை, மத ரீதியான பாகுபாட்டாலோ அமீர் மீது இப்படி அக்னியைக் காட்டியபடி இருக்கிறது கோடம்பாக்கம்.
இதற்கு சிகரம் வைத்த கணக்காக தனது படத்தில் இருந்து அமீரை நீக்கி இருக்கிறார் பாரதிராஜா. படத்தில் வரும் கட்டுவிரியன் பாத்திரத்துக்காக முதலில் நடிகர் பார்த்திபனை ஒப்பந்தம் பண்ணியிருந்த பாரதிராஜா பின்னர் அமீரை அணுகினார். அமீர் நீக்கத்துக்குப் பிறகு இயக்குனர் சேரனிடம் பேசினார். கட்டுவிரியன் பாத்திரத்துக்கு சேரனின் உடல்வாகு சரிப்படாது என்பதால், அவரைத் தவிர்த்து விட்டு இயக்குனர் செல்வமணியிடம் பேசினார். 'எனக்கு நடிப்பே வராது' என கையெடுத்து கும்பிட்டபடி செல்வமணி விலகிக்கொள்ள, எரிச்சலான பாரதிராஜா இப்போது தன மகன் மனோஜையே அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டார்.
இதுகுறித்த செய்தி இதுவரை வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அமீர் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் மனோஜ் நடிப்பது உறுதியாகி விட்டது. ''சங்கப் பிரச்சனையாலோ தனிப்பட்ட வருத்தத்தாலோ அமீரை நான் நீக்கவில்லை. ஜனவரி மாதமே ஆதிபகவானை முடித்துவிட்டு என் படத்தில் நடிப்பதாக அமீர் உறுதி கொடுத்திருந்தார். ஆனால், அவர் இன்றுவரை ஆதிபகவானை முடிக்கவில்லை. சங்க ரீதியான பிரச்சனையில் எனக்கு மனவருத்தம் இருந்தது உண்மைதான். அதனால் தான் என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். ஆனால், படத்தில் இருந்து அமீர் நீக்கப்பட்டதற்கு அவரேதான் காரணம்'' என நெருக்கமானவர்களிடம் சொல்லி இருக்கிறார் பாரதிராஜா.
தற்போது வெளி மாநிலத்தில் இருக்கும் அமீர் இந்த விவகாரம் குறித்து இதுவரை ஏதும் சொல்லவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களோ, ''இந்த மோதலுக்கு முழு காரணமும் சேரன் தான். அமீரை படத்தைவிட்டு நீக்கச் சொல்லி பாரதிராஜாவை வற்புறுத்தியவர் அவர்தான்!" என்கிறார்கள் ஆவேசமாக. பாரதிராஜாவுடன் சேரனும் தன் இயக்குனர் சங்கத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது!
- ஏ.ஆர்.எம். தாஸ்



+ comments + 2 comments
அமீர் நடித்தாலும் சரி, அமீர்கான் நடித்தாலும் சரி... பாரதிராஜாவோட அன்னக்கொடியும் கொடிவீரனும் படம் வருமா வராதா? அதைச் சொல்லுங்கள் முதலில்... சேரன் மீது 'கும்பலு'க்கு அப்படி என்ன கோபம்? தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துக்களாக வருகிறதே?!
பாரதிராஜா சார்...... சீக்கிரம் பஞ்சாயத்தை முடிச்சிட்டு படம் எடுங்க... உங்க பையனை இந்த படத்திலயாவது நடிக்க வையுங்க... கல்லைக்கூட நடிக்க வைச்ச மனுஷன் புள்ளைய நடிக்க வைக்க இப்படி போராடுறாரே...
-விக்கி என்கிற வெற்றிச்செல்வன்
Post a Comment