Latest Movie :

ஐயகோ... அப்பட்டமான படுகொலைகள்!


                 

கொள்ளையடித்தால் குற்றம்...

கொலை செய்தால் பாராட்டு!

'இவன்தான் கொள்ளைக்காரன்... இவனைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு' இப்படி  ஒரு  அறிவிப்பு... அத்தனை மீடியாக்களிலும் செய்தி... அடுத்த சில மணி நேரங்களில் 'கொள்ளைக்காரர்கள் என்கவுண்டர்'!



தமிழக போலீஸ் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி சாதனை புராணம் பாடுகிறது. மீடியாக்கள் பாராட்டி மகிழ்கின்றன. குமுதம், விகடன், நக்கீரன் என புலனாய்வுப் பத்திரிகைகளில் சீக்கிரமே திரிபாதி சிரித்த முகத்தோடு பேட்டி கொடுப்பார். கொள்ளையர்களை வீழ்த்தியது எப்படி என விவரித்து சிலாகிப்பார். கொள்ளையர்கள் சுட்டதால்(?) காயமடைந்த காவலர்களை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்த்து ஆறுதல் சொன்னாலோ, அன்பளிப்பு வழங்கினாலோ ஆச்சரியம் இல்லை. 

சரி, அந்த கூத்துகள் எல்லாம் கிடக்கட்டும்... நிஜத்தில் அந்த என்கவுண்டர் எப்படி நடந்தது? சில மணி நேரங்களிலேயே கொள்ளையர்களின் இருப்பிடத்தை போலீஸ் நெருங்கியது எப்படி? போலீஸ் அதிகாரிகளுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே சண்டை நடந்தது உண்மைதானா?

மனத்தைக் கொஞ்சம் தைரியப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே... நடந்தது அப்பட்டமான படுகொலை. கையெடுத்துக் கும்பிட்டவர்களைத்தான் கொன்று போட்டிருக்கிறது காவல்துறை. 

என்கவுண்டர் சம்பவத்தில் பங்கு பெற்ற யாராலும் மறுக்க முடியாத இந்த உண்மையை 'கும்பல்' அப்படியே இங்கே அம்பலமாக்குகிறது... கனத்த இதயத்தோடு!

கொள்ளைக்காரனின் படத்தை அத்தனை டி.வி.க்களும் மாற்றி மாற்றி காட்டிய நேரம்... கொள்ளைக் கும்பலின் தலைவன் இதனை அறியாமல் தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளரைப் பார்க்க வருகிறான். போலீஸ் காட்டிய புகைப்படத்தில் இருந்த சிகப்பும் ஊதா நிறமும் கொண்ட கட்டம் போட்ட சட்டை... அதே ப்ளு ஜீன்ஸ். அந்த உடையில் அவனைப் பார்த்த உடனேயே வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் வருகிறது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அவனிடம் என்ன செய்தி எனக் கேட்டிருக்கிறார். ''நாங்கள் நாளை காலை ஊருக்குப் போகிறோம்... வீட்டை வேறு யாரிடமும் கொடுத்து விடாதீர்கள். அடுத்த மாத வாடகையையும் இப்போதே தந்து விடுகிறோம்" எனச் சொன்னான் அவன். அந்த வார்த்தைகள் வீட்டு உரிமையாளரை இன்னும் சந்தேகப்பட வைக்க, அவர் தனக்குத் தெரிந்த கான்ஸ்டபுள் ஒருவருக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லி இருக்கிறார்.


 கான்ஸ்டபுள் தனது உயரதிகாரியான எஸ்.ஐ. ஒருவருக்குத் தகவல் சொல்ல, இருவரும் அந்தக் கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். கொள்ளையர்களின் அறையை அவர்கள் தட்ட, அவர்கள் வெளியே எட்டிப் பார்த்திருக்கிறார்கள். பார்த்த உடனேயே 'அவர்கள்தான் கொள்ளைக்காரர்கள்' என்பது போலீஸுக்கு தெரிந்து விட்டது.  சில நிமிட களேபரத்தில் அந்தக் கொள்ளையர்கள் உஷாராக, போலீஸார் இருவரும் சட்டென அந்த அறையின் கதவை சார்த்திவிட்டார்கள். உள்ளே கொள்ளையர்கள் சப்தமிட்டபடி இருக்க, வெளியே வந்த எஸ்.ஐ. இணைக்கமிஷனர் சண்முகராஜேஸ்வரனுக்கு போன் செய்திருக்கிறார். கொள்ளைக்காரர்களை வெளியே தப்ப விடாதபடி பார்த்துக்கொள்ளச் சொன்ன இணைக்கமிஷனர் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தபடி ஸ்பாட்டுக்கு போனார். 

வெளியே ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் சூழ்ந்துவிட்டதை பார்த்து திகைத்துப்போன கொள்ளையர்கள் ஐவரும் இரு கைகளையும் உயர்த்தியபடி சரணடைகிறோம் எனக் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். உடனே விஷயத்தை கமிஷனர் திரிபாதிக்கு சொல்லி இருக்கிறார் இணைக்கமிஷனர். ரொம்பவே ஆர்வமான திரிபாதி, ''நாம் மீடியாக்களிடம் காட்டிய அந்த சிகப்பு சட்டைக்காரன் அதில் இருக்கிறானா?" எனக் கேட்டிருக்கிறார். ''இருக்கிறான்" என இணைக்கமிஷனர் சொல்ல, ''நான் அங்கே வருவதற்குள் அவனைப் போட்டு விடுங்கள். நான் மேலிடத்தில் பேசிவிட்டு மறுபடியும் உங்களை அழைக்கிறேன்" எனச் சொல்லியிருக்கிறார் திரிபாதி. 
போன் கட்டான அடுத்த நிமிடமே இணைக்கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் அருகே நின்ற போலீஸாருக்கு கண்ணைக்காட்ட, சிகப்பு சட்டைக்காரன் சுட்டு வீழ்த்தப்பட்டான். இதனை கொஞ்சமும் எதிர்பார்த்திராத நான்கு கொள்ளையர்களும் இணைக்கமிஷனர் சண்முகராஜேஸ்வரனின் காலைக் கட்டிப்பிடித்து கதறி இருக்கிறார்கள். அவர் மனம் தாங்காமல் அந்த அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். 

அடுத்த சில நிமிடங்களில் கமிஷனர் திரிபாதியிடம் இருந்து இணைக்கமிஷனர் சண்முகராஜேஸ்வரனுக்கு மீண்டும் போன்... 'அவங்க நாலு பேரையும் போட்ருங்க...' என திரிபாதி சொல்ல, இணைக்கமிஷனருக்கு பதட்டமானது. 'அது சாத்தியம் இல்லை' என சண்முகராஜேஸ்வரன் சொல்ல, கமிஷனரின் குரல் கறாராக இருந்திருக்கிறது. மீண்டும் கண்ணைக் காட்டுகிறார் சண்முகராஜேஸ்வரன். உயிர் பயத்தில் கைகளை உயர்த்தியபடி உறைந்துகிடந்த அந்த நான்கு பேரையும் இரக்கமே இல்லாமல் கண்மூடித்தனமாக சுட்டிருக்கிறது போலீஸ் படை.

''எங்கேயோ உட்கார்ந்தபடி எழுதப்பட்ட கதை இது" என காவல்துறையைச் சார்ந்த யாரும் இந்தக் கட்டுரையை மறுக்கலாம். ஆனால், கொள்ளையர்களால் சுடப்பட்டு(?) தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கும் துரைப்பாக்கம் ஆய்வாளர் கிறிஸ்டின் ஜெயசீலாவுக்கும், தேனாம்பேட்டை ஆய்வாளர் ரவிக்கும் இந்த உண்மையை மறுக்கும் தைரியம் இருக்கிறதா என சொல்லட்டும். கொள்ளைக்காரர்கள் 23 -ம் தேதி காலை நான்கு மணிக்கு கோரக்பூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி செல்ல டிக்கெட் புக் பண்ணி வைத்திருந்தார்கள். சில மணி நேரங்கள் அவர்கள் தப்பி இருந்தால் கோரக்பூர் எக்ஸ்பிரஸில் அவர்கள் தப்பி இருப்பார்கள். 'நீங்கள் மட்டும்தானா... இல்லை உங்கள் கும்பலில் வேறு யாரும் இருக்கிறார்களா?' என போலீஸ் கேட்டபோது முன்பதிவு டிக்கெட்டை காட்டி கொள்ளைகாரர்கள் சொன்ன உண்மை இது. இந்த தகவலை மீடியாக்களிடம் போலீஸ் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?   கோரக்பூர் எக்ஸ்பிரஸில் இறந்து போன நால்வரும் டிக்கெட் பதிவு செய்திருந்த தகவலை யார் வேண்டுமானாலும் ரயில்வேயில் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். 


காலைக் கட்டிப்பிடித்து கதரியவர்களை சுட்டதற்கு பெயர் என்கவுண்டரா? ஈவு இரக்கமற்ற அந்தப் படுகொலைகளை பாராட்டி பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதும் பாராட்டுப் பத்திரங்கள் வேறு... 30 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த குற்றத்துக்காக ஐந்து இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்ட நிகழ்வை சொல்லி, நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள போலீஸால் எப்படி முடிகிறது? 

சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வது தொடங்கி சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரை இந்தப் படுகொலைகளின் பின்னணியில் ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அப்பாவி பொதுமக்களுக்கு இந்தப் பின்னணிகள் எல்லாம் ஒருபோதும் புரியப்போவது இல்லை. 'கொள்ளையடிச்ச பாவிகளுக்கு சரியான தண்டனை' என டீக்கடை பெஞ்சுகளில் உட்கார்ந்து வெட்டி நியாயம் பேசி அவர்கள் விலைவாசி சிரமத்தை மறக்கலாம்... மின்வெட்டை மறக்கலாம்... செயின் பறிப்பை மறக்கலாம். மீடியாக்களின் பாராட்டு முதல்வரின் வாழ்த்து என போர் புரிந்து வெற்றி பெற்ற போலீஸ் அதிகாரிகள் பெருமிதத்தில் மிதக்கலாம்... நடந்த உண்மைகளை அறிந்தவர்களாக நாங்கள் கேட்கும் ஒரே கேள்வி... கொல்ல்லையடித்தால் குற்றம்... கொலை செய்தால் விருதா?

 - கும்பல் 




  

Share this article :

+ comments + 3 comments

23 February 2012 at 23:52

பிரமிக்க வைக்கிர புலனாய்வு கட்டுரை.... பெரிய மீடியக்களும் அவிழ்க்க முடியாத அல்லது அவிழ்க்க முயலாத உண்மைகளை பட்டியலிட்டதில் கும்பல் தனித்து மிளிர்கிறது! வாழ்த்துக்கள்!

24 February 2012 at 19:05

நடந்த என்கவுன்டர்கள் நிஜமானதுதானோ என நினைத்திருந்தேன். ஆனால் கும்பல் எழுதிய கட்டுரையைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். குற்றவாளிகள் கையில் உயிரோடு சிக்கியும் அவர்களை போலீஸ் சுட்டது எதனால்? மனிதாபிமானமே இல்லாமல் இப்படி நடந்து கொள்ள போலீஸாருக்கு எப்படித்தான் மனசு வருகிறதோ? உங்களீன் கட்டுரையை படித்ததிலிருந்து தூக்கமே இல்லை.

Anonymous
27 February 2012 at 00:02

கொடுமை... மனிதர்கள் வாழுகிற மண்ணில் தான் நாம் வாழ்கிறோமா என எண்ணத்தோன்றுகிறது. இந்தப் படுகொலைகளை தட்டிக்கேட்க இந்த மண்ணில் யாருமேயில்லையா?

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger