மோசத்துக்குரிய பாரதிராஜா...
பாரதிராஜா சார்... உங்களின் படத்தை விட 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்' என்கிற உங்களின் குரலை அதிகம் ரசித்தவன் நான். வழக்கத்தைத் தாண்டிய அன்பும் வாஞ்சையும் அந்த வார்த்தைகளில் நிறைந்திருக்கும். கோபக்கார பாரதிராஜா இந்த வார்த்தைகளை மட்டும் எப்படி குழந்தைத்தனமாக சொல்கிறார் என பல நேரங்களில் நான் நினைத்ததுண்டு. உங்களின் வார்த்தைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமற்ற போக்கு அப்போதே எனக்குப் புரிந்ததோ என்னவோ... அதனால் கூட எனக்கு அந்த ஆச்சரியம் ஏற்பட்டிருக்கலாம்.
சரி, விசயத்துக்கு வருகிறேன்... உங்களிடத்தில் யாரும் மாற்றுக் கருத்துப் பேசினால் உங்களுக்குப் பிடிக்காது என்பது எனக்கும் தெரியும். உங்களை மிக நெருக்கமாக நான் பார்த்திரா விட்டாலும், அடிக்கடி பார்த்திருக்கிறேன்... ரசித்திருக்கிறேன்... வியந்திருக்கிறேன்.அதனால், உங்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தை நான் இங்கே முன்வைக்கப் போவதில்லை. முன்வைக்க வேண்டிய அவசியமும் இல்லை... காரணம்... இப்போதெல்லாம் உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்து வைத்துக் கொள்கிறீர்கள். முகத்தை உயர்த்தி 'என்னைய்யா...' என அடர்ந்த குரலில் நீங்கள் கணைப்பது காதில் கேட்கிறது... உங்களின் சமீபத்திய தலைகீழ் மாற்றங்களை பட்டியல் போடுகிறேன்... இதை முழுதாகப் படித்த பிறகுதான் உங்கள் தலைகீழ் மாற்றமும், தடுமாற்றமும் (நான் அதை சொல்லவில்லை) உங்களுக்கே புரியவரும்!
ஈழ விவகாரத்தில் இருந்தே ஆரம்பிக்கிறேன்... நீங்கள் தேசியத் தலைவர் பிரபாகரனை நேரில் சென்று பார்த்தவர். அந்த சிலிர்ப்பு நிமிடங்களை சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தவர். பல வருடங்களுக்கு முன்னாள் நீங்கள் விகடனில் கொடுத்த அந்த பேட்டி அப்படியே என் நினைவில் நிற்கிறது. ஈழப் போர் நடந்தபோது ஈழப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத காங்கிரசையும் தி.மு.க.வையும் கடுமையாக திட்டினீர்கள். பிலிம் சேம்பர் வளாகத்தில் கூட்டம் போட்டு, இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கினீர்கள். மத்திய அரசு கொடுத்த மகத்தான விருதை டெல்லிக்கு திருப்பி அனுப்பி, தமிழனின் மானத்தை காத்தீர்கள். எந்த மறத்தமிழனும் செய்யத் துணியாத காரியம் அது. மத்திய அரசின் விருதை ஒருமுறை திருப்பி அனுப்பினால்,அதன் பிறகு அப்படி ஒரு அங்கீகாரத்தை நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பதை நன்றாகவே அறிந்திருந்தும் நீங்கள் கோபப்பட்டது பேராச்சரியம்.
அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்கு எதிராக இந்தளவுக்குக் கொந்தளித்த நீங்கள், சமீபத்தில் மதுரையில் நடந்த 'திரும்பிப் பார்க்கிறேன்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் என்ன பேசினீர்கள்? நீங்களும் உங்களின் குடும்பப் பாரம்பரியமும் காங்கிரசிலேயே ஊறி வளர்ந்ததாக நீங்கள் வரலாறு சொன்னதைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். ஆனால், தமிழர்களின் நலன்காக்க காங்கிரசால் மட்டுமே முடியும் என நீங்கள் முழங்கிய வார்த்தைகளைத்தான் இப்போதும் நம்ப முடியவில்லை.
காங்கிரசை இந்தளவுக்கு நம்பிக்கையாகப் பார்க்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு எதற்காக உங்களின் விருதை தூக்கி வீசினீர்கள்? எதற்காக காங்கிரசை கருவறுக்க வேண்டும் என முழக்கம் செய்தீர்கள்? ஒருவேளை இரண்டே வருடங்களில் உங்களின் இதயத்தைக் குளிர்விக்கும் அளவுக்கு காங்கிரசின் கண்ணியமும் தமிழனைக் காக்கும் கடமை உணர்வும் பெருகிவிட்டதா? இல்லை, தங்கபாலு மாற்றப்பட்ட பிறகு காங்கிரசின் தலைவிதிதான் மாறிவிட்டதா?
இன்றைக்கு இந்தளவுக்கு காங்கிரசுக்கு சான்றிதழ் கொடுக்கும் நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு, உங்களின் அலுவலகம் சுக்குநூறாக நொறுக்கப்பட்டபோது, அதைச் செய்தவர்கள் யார் எனத் தெரிந்தும் அவர்களைக் குறிப்பிட்டு புகார் எழுத முடியாமல் விக்கித்து நின்றீர்களே... அன்றைக்கு இந்த நாட்டை ஆண்டதும் இதே காங்கிரஸ்தானே... உங்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது காங்கிரஸ் கயவர்கள் இல்லை என்று இப்போது உங்களால் மறுக்க முடியுமா? உங்களின் அலுவலகத்தைப் பார்த்து நீங்கள் பதறியதும், காங்கிரசுக்கு எதிராகக் கொந்தளித்ததும்... உங்களுக்காக ஓடிவந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும்.
சரி, காங்கிரஸ் விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு மாறியது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது... கைம்மாறு நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சீமானை பாராட்டி நீங்கள் எப்படி எல்லாம் பேசினீர்கள் என்பதற்கு இப்போதும் யூ ட்யுப் ஆதாரமிருக்கிறது. ஆனால்,சமீபத்தில் சீமானைப் பற்றி நீங்கள் பேசியது என்ன? ஈழ விவகாரத்துக்காக ராமேஸ்வரத்தில் நீங்கள் கூட்டிய கூட்டத்தை பயன்படுத்தி சீமான் அரசியல் ஆதாயம் தேடிவிட்டதாக பரபரப்பு பேட்டி கொடுக்கின்றீர்கள்.
வார்த்தைக்கு வார்த்தை அப்பா என சொல்லும் அந்த மகத்தான மகனை இவ்வளவு இழிவாக நீங்கள் இடித்துரைத்தது ஏன்? உங்களின் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் அந்தணக் கூட்டத்தை ராமேஸ்வரத்தில் நடத்தியிருக்காவிட்டால் சீமான் என்கிற தலைவன் தமிழகத்தில் தோன்றியிருக்க மாட்டானா? நீங்கள் போட்ட பிச்சையில்தான் அந்த பிரளய வீரன் பிறந்தானா?
சரி, அடுத்த விசயத்துக்கு வருகிறேன்... சமீபத்தில் இயக்குனர் சங்கத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டிர்கள்... உங்களை எதிர்த்து அமீர் நிற்க... உடனே உங்களுக்கு கடுமையான ஆத்திரம். 'அமீரும் சேரனும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்' என பரபரப்பு பேட்டி கொடுத்தீர்கள். அடுத்த சில நாட்களிலேயே பதவியேற்பு... அமீரைக் கடுமையாக வசைபாடி உங்களின் ஆதரவாளர் பாலு தேவர் மூலமாக பரபரப்பு போஸ்டர் அடித்தீர்கள்.
அடுத்த சில நாட்களில் என்ன அதிசய மாற்றமோ... 'அமீர்தான் என் படத்துக்கு ஏற்ற கதாநாயகன். அப்படியே நச்சுன்னு பொருந்தி இருக்கான்!' எனச் சொல்லி உங்களின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு அமீரை கதாநாயகனாக்கி பாராட்டு மழை பொழிந்தீர்கள். இயக்குனர் சங்கத் தேர்தலின்போது உங்களுக்காக அமீரை பகைத்துக் கொண்டவர்கள் உங்களின் தலைகீழ் பல்டியைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். (இதற்கிடையில் நீங்கள் பார்த்திபனை ஏமாற்றிய கதையையும் நினைவில் ஓட விட்டுப் பாருங்கள்)
அடுத்து என்ன நடந்ததோ... 'இயக்குனர் சங்கத்துக்கு நான் தலைவரா... இல்லை அந்த அமீர் பயலா?' என ஆவேசமாக சத்தம் போட்டீர்கள். உங்களை மோசம் செய்ததாக சுட்டிக் காட்டிய சேரனை நேரில் வரச் சொல்லி, அமீருக்கு எதிராக பேட்டி கொடுக்கச் சொன்னீர்கள். சீக்கிரமே உங்களின் படத்திலிருந்து அமீரை மாற்றப் போவதாகவும் நெருக்கமானவர்களிடம் சொல்கிறீர்கள்.
உங்களுக்கு என்னய்யா ஆகிவிட்டது...? உங்களின் கருத்துக்கு நீங்களே மாற்றுக் கருத்துப் பேசும் ஆளாக நீங்களே மாறிப்போனது ஏன்? காங்கிரஸ் தொடங்கி நேற்றைக்கு வந்த அமீர் வரை நீங்கள் ஏன் எந்த விவகாரத்திலும் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் குழப்புகின்றீர்கள்? ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... காங்கிரசை ஆதரித்து நீங்கள் பேசியது காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. காங்கிரசின் வெறித்தனபோக்கால் ரத்த உறவுகளை பறிகொடுத்துத் தவிக்கும் அத்தனைத் தமிழர்களையும் உங்களின் குரல் பொசுக்கிப் போட்டிருப்பது உங்களுக்குப் புரியுமா? அமீரை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் சேரனைத் தூண்டி விடுகிறீர்களே... அமீர் என்கிற ஒருவரைப் பழிவாங்க 23,000 தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் உங்களின் வஞ்சகத்தை எப்படியய்யா மன்னிப்பது?
இன்று ஒரு பேச்சு... நாளை ஒரு பேச்சு என நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்களின் நாவை இஷ்டத்துக்கு மாற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், இனியும் 'பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்...' என்கிற பசப்பு வார்த்தைகளை உச்சரிக்காதீர்கள். இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன்... மனம் முழுக்க அவ்வளவு கோபம் இருக்கிறது. ஆனால், எங்களின் அடையாளமாகவும், ஆழ்மனம் கொண்டாடும் அற்புதப் படைப்பாளனாகவும் இருக்கும் உங்களை இத்தோடு விட்டுவிடுகிறேன்.
இப்படிக்கு,
வாஞ்சை என எண்ணி உங்களின் வஞ்சகத்தை அறிந்த ஒருவன்








+ comments + 2 comments
பாரதிராஜா சாருக்கு தன்னை சுயப்பரிசோதனை செய்துகொள்ள சரியான
கட்டுரை இது. காங்கிரஸை பாராட்டிப் பேசிய பின்னர் அவர் மீதிருந்த
அபிப்பிராயமே போய்விட்டது. இனியாவது திருந்துங்க ராஜா சார்!
பாரதிராஜாவுக்கு 10 கேள்விகள்
1. காங்கிறச் கட்சியைப் பொறுத்தமட்டில் என்னதான் உங்களின் நிலைப்பாடு ?
2. தி.மு.க.வை திட்டிக்கொண்டே கலைஞர் டி.வி.யில் தொடர் ஒளிபரப்பிக்கொண்டிருந்தீர்களே... அதன் பின்னணீ என்ன?
3. அமீரும் நீங்களும் எதிரியா நண்பர்களா?
4. சீமான் உங்களின் மகனா, இல்லை உங்களைப் பொறாமைப்படவைக்கும் தலைவரா?
5. சேரன் உங்களை ஏமாற்றியவரா... இல்லை, உங்களின் கைத்தடியா?
6. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் பார்த்திபனை ஏன் மாற்றினீர்கள்? சாதியம்தான் காரணமா... சம்பாத்தியம் காரணமா?
7. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிரச்சாரம் செய்ய எம்.நடராஜன் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தார்? நீங்கள் அதை வைத்து நிலம் வாங்கிப் போட்டது எங்கே?
8. அன்னக்கொடியும் படத்தில் நீங்கள் மாற்றம் செய்யப் போகும் அடுத்த நடிகர் யார்?
9. சீக்கிரமே வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், அய்யாவின் ஆதரவு யாருக்காம்?
10. நீங்க நல்லவரா... கெட்டவரா?
Post a Comment