ராவணன் திகில் வாக்குமுலம்!
ஜெயலலிதாவின் இரண்டு டார்கெட்டில் ஒன்று சாதிக்கப்பட்டு விட்டது... கோவை ராவணன் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். என்னதான் போலீஸ் விரட்டி விரட்டிப் பிடித்தாலும், அவர் முகத்தில் சிறிதும் வாட்டமில்லை. ஏதோ சாமியார்கள் ஜெயிக்குப் போகும் காட்சியைப் போல் சிரித்த முகத்துடனேயே உள்ளே போனார்.
அந்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் அர்த்தங்கள் அதிகம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில். சசிகலா கார்டனை விட்டு வெளியே அனுப்பப்படுவதற்கு பத்து நாட்கள் முன்பு வரை எதற்கெடுத்தாலும் ராவணன் பெயர்தான் அடிபட்டது. 'நான் ராவனன்கிட்ட சொல்லிட்டேன்... அவர் பார்த்துக்குவார்' என கட்சிக்காரர்களிடமே ஜெயலலிதா சொல்வார். ஜெயலலிதா பெயர் சொல்லி அழைக்கும் மிகச் சிலரில் ராவணன் மிக முக்கியமானவர்.
'அம்மாவின் குணம் தெரிந்து நடப்பவர்' என கட்சிக்காரர்களின் பாராட்டுக்கும் உரியவர் ராவணன். இருந்தும் எப்படி இந்தளவுக்கான சிக்கலில் அவர் மாட்டினார்? எதற்கெடுத்தாலும் ஜாதகம் பார்ப்பது ராவணனின் வழக்கம். எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும், அதை ஜாதக ரீதியான ஆராய்ச்சி நடத்தித்தான் செய்யத் தொடங்குவார். கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அவர் ஜாதகம் பார்த்த போதுதான் சிக்கல் தொடங்கியது. 'பிரமாதமான ஜாதகம்... ஒரு அரசனுக்கு உரிய ஜாதகம் இது. நிச்சயம் இந்த ஜாதகத்தைக் கொண்டவர் சீக்கிரமே அரசாளுவார்' என சொல்லப்பட்ட, அதுவரை அடக்கி வாசித்த ராவனனனுக்கு திடீர் ஆசை தொற்றிக்கொண்டது.
இதற்கிடையில் பெங்களுரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என உறுதியாக நம்பிய மன்னார்குடி திவாகரன் (சசிகலாவின் தம்பி) தானே முதல்வராக மகுடம் சூட்ட ஆசைப்பட்டார். தன் மனக்கிடக்கையை அக்காவிடம் சொன்னார். அதற்கான வேளைகளில் தீவிரமானார். எம்.எல்.ஏ.க்கள் , அமைச்சர்கள் என கட்சிக்காரர்களை வளைக்கும் வேலைகளை செய்யத் தொடங்கினார்.
கொழுந்தன் ராவணனா.. தம்பி திவாகரனா ... என்பதில் தான் சசிகலாவுக்கு திண்டாட்டம் தொடங்கியது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் யார் முதல்வராவது என சசிகலா உறவுக்காரர்கள் நடத்தும் போட்டி உச்சகட்டத்தை எட்டிய போதுதான் விஷயம் முதல்வருக்குப் போனது. உளவுத்துறை பதிவு செய்திருந்த உரையாடலைக் கேட்டு ஆடிப்போனார் முதல்வர்.
அதன் பிறகுதான் சசிகலா வகையறாக்களை வெளியேற்றும் வேலைகள் கடகட வேகத்தில் நடந்தன. முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட திவாகரனையும் ராவணனையும் வளைக்க உத்தரவானது. போலீஸ் நடத்திய முதல்கட்டத் தேடுதலில் இருவரையும் நெருங்கவே முடியாத நிலை. அடுத்தபடியாய் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் முலமாக போலீஸ் சில விசயங்களை கசியவிட்டது. 'சரண்டரானால் கண்ணியமாக நடத்துவோம். தேடிப்பிடிக்கிற நிலை வந்தால் மிகக் கேவலமாக நடத்தச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது' என சொல்ல, ராவணனுக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது. போலீஸ் தரப்புடன் அவரே பேச்சுவார்த்தை நடத்த... கைது வைபோகம் நடந்தது.
ஆனால், திவாகரன் போலிசின் பசப்பு வேலைகளுக்கெல்லாம் பணியவில்லை. முடிந்தால் பிடித்துபார் என்பதுதான் அவர் பாணி. இதற்கிடையில், சிறையில் இருக்கும் ராவணன் அதிகாரிகள் தரப்பில் அள்ளிவிடும் செய்திகள் பயங்கரமாக இருக்கிறதாம். 'அம்மா சொன்ன எத்தனையோ வேலைகளை நான் செஞ்சிரிக்கேன். அதையெல்லாம் பட்டியல் போட்டா அவங்க தாங்குவாங்களா? நீங்க என்ன கேசை வேணும்னாலும் போட்டுக்கங்க... கொலை , கொள்ளை, செக்ஸ்னு என்ன செக் ஷன் வேணும்னாலும் போட்டுக்கங்க. நான் பார்த்துக்குறேன்' என சர்வ சாதாரணமா சொல்லி வருகிறார் ராவணன். அதனால், அவரை எப்படி டீல் செய்வதெனத் தெரியாமல் ஆடிக்கிடக்கிறார்கள் அதிகாரிகள்.
இன்னொருபுறம் திவாகரனின் கண்ணாமூச்சி வேலைகளும் அதிகாரிகளை அல்லாட வைத்தபடி இருக்கின்றன. 'இரண்டு நாட்களுக்குள் திவாகரனை பிடிக்க முடியாவிட்டால் யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வீட்டுக்கு போய்விடுங்கள்' என ஜெயலலிதா ஆவேசமாக சத்தமிட்டதாகவும் சொல்கிறார்கள். மொத்தத்தில் ராவணனின் கித்தாய்ப்பு பேச்சும், திவாகரனின் தலைமறைவு மிரட்டலும் ஆளும்கட்சியை அலறவைத்திருப்பது உண்மை!
பின்குறிப்பு: இதற்கெல்லாம் அடுத்தபடியாக சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனையும் கைது செய்ய உத்தரவு வரும் என்கிறார்கள்.
- கும்பல்






+ comments + 2 comments
வாரப் பத்திரிக்கைகளையே மிஞ்சுகிற அளவுக்கு அசாத்திய தகவல்களை
சேகரித்து மீடியாக்களுக்கே தீனி போடும் பகுதியாகி விட்டது கும்பல்.
சூப்பருங்கோவ்!
SPR... NEXT ATHIRATI ENNA?
Post a Comment