வெற்றிடத்தை நிரப்ப வேல்முருகன் வேண்டும்!
''பொங்கல் திருநாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் வேல்முருகன்...'' - கும்பல் ஸ்க்ரோலிங்கில் ஓடிய செய்தி உண்மையாகி இருக்கிறது. பொங்கல் திருநாளில் ''தமிழர் வாழ்வுரிமைக் கட்சி...'' என்ற பெயரில் புதியக் கட்சி தொடங்கி இருக்கிறார் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன். இளமைத் துடிப்பான இதயங்கள் அவருக்குப் பக்க பலமாக அணிதிரண்டு வருகிறார்கள்.
வேல்முருகன் வித்தியாசமான அரசியல்வாதி என்பது பலரும் அறிந்ததுதான். பா.ம.க.வில் இருந்தாலும், சாதியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். பிற சாதி நண்பர்களை அனுசரித்து நடப்பார். கட்சியின் கொள்கைகளைத் தாண்டியும் மனிதாபிமான உண்மைகளை ஒப்புக்கொள்வார். ஈழ விவகாரத்தில் ஐயா மருத்துவரே அடக்கி வாசித்த போதும், இவருடைய உணர்வுப்பூர்வமான துடிப்பை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், அதுவே அவருக்கு வினையாக முடிந்ததுதான் துயரம்!
''வேல்முருகன் தன்னை நல்லவர் என்று யாருக்கும் நிருபிக்க வேண்டியது இல்லை. அவர் நல்லவர் என்று மருத்துவர் அய்யாவுக்கே தெரியும். கள்வர்களுக்கு மத்தியில் நல்லவராக இருப்பதுதான் அவருக்கான சிக்கல்" என்கிறார்கள் நடுநிலையான பா.ம.க.வினர்.
அதேநேரம் , பண ரீதியான குற்றச்சாட்டுகளை அவர் மீது வாரி இறைக்கிறார்கள் மருத்துவர் ஐயாவின் ஆதரவாளர்கள். ''நெய்வேலி அனல்மின் நிலைய பிரச்சனையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஐந்து கோடி ரூபாய் வேல்முருகனுக்கு கொடுத்தார். அந்தப் பணத்தைப் பற்றி வாயே திறக்காத வேல்முருகன், தேர்தல் முடிந்து மருத்துவர் ஐயா கேட்டபோது பிரசாரத்துக்கு செலவாகி விட்டதாகச் சொன்னார். இது மன்னிக்ககூடிய விஷயமா?" என்கிறார்கள் அய்யாவின் ஆதரவாளர்கள்.
''அய்யாவப் பத்தி தப்புத் தப்பா பேசினார். அன்புமணிக்கும் சில தவறான சகவாசங்ககளை ஏற்படுத்தினார். குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட வேல்முருகன் இப்படி எல்லாம் செய்தால், கட்சியை விட்டு நீக்காமல் பதவி உயர்வா கொடுப்பார்கள்?'' எனக் கேட்பவர்களும் உண்டு.
எது உண்மையோ... ஆனால், பா.ம.க.வில் இருந்த கடைசி நம்பகமான புள்ளியும் வெளியே வந்துவிட்டார் என்பதுதான் உண்மை. சாதியக் கூறுகளை வெறியாக மனதில் ஏற்றிக் கொள்ளாமல், சமுக பிரச்சனைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மனிதராக அந்தக் கட்சியில் இருந்த ஒரே ஆள் வேல்முருகன்தான். அவரும் வெளியே வந்துவிட்ட நிலையில், சாதியை மட்டுமே வைத்து அரசியல் நடத்தும் சங்கமாக இனி பா.ம.க. இருக்கும் என்பது மறுக்க முடியாதது.
அதே நேரம், வேல்முருகனுக்கு காத்திருக்கும் சவால்களுக்கும் குறைவு இல்லை. பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட போது வேல்முருகனுக்கு பல கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வந்தது. திருமாவளவன் நேரடியாகவே சிறுத்தைகள் கட்சிக்கு அழைத்தார்.
வேல்முருகனின் மிக முக்கிய நண்பரான நாம் தமிழர் சீமான், 'கட்சியில் என்னைவிட உயரிய பொறுப்பை நீ எடுத்துக்கொள். நீயும், அண்ணன் கொளத்தூர் மணியும் வந்து விட்டால் மூன்றாவது பெரிய சக்தி நாம்தான் என்றாகிவிடும்' என்றார்.
ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்தும் வேல்முருகனுக்கு அழைப்பு வந்தது. அத்தகைய அழைப்புகளை எல்லாம் புறந்தள்ளி தனி இயக்கம் கண்டதே வேல்முருகனுக்கு மகத்தான மகுடம் தான். ஆனாலும், ஏற்கனவே பா.ம.க.வைவிட்டு வந்தவர்கள் அண்ட இடம் இல்லாமல், ஒண்ட வழி இல்லாமல் அல்லாடி நிற்பதைப்போல அல்லாமல், வலு மிகுந்த சக்தியாக வேல்முருகன் உருவெடுக்க வேண்டிய நேரம் இது. கட்சிக்கான கட்டமைப்பை செவ்வனே ஏற்படுத்தி, மக்களோடு மக்களாக நிற்க வேண்டிய சூழல் நெருங்கி வந்திருக்கிறது.
நல்லவராக மட்டுமல்லாது, வல்லவராகவும் வேல்முருகன் இயங்க வேண்டிய நேரமிது. புயலில் கட்சி தொடங்கியவர் புயலாகவே மாற வேண்டும். வெட்டி வீழ்த்தப்பட்ட மண்ணாக மாறிக் கிடக்கும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் கண்ணீரை உடனடியாக துடைக்க வேல்முருகன் வீதிக்கு வர வேண்டும்.
ஏக்கருக்கு மூவாயிரம், நான்காயிரம் எனக் கொடுக்கப்படும் நிவாரணங்களை எல்லாம் தீர்வாக நினைக்காமல், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு முழுமையான மீட்சியை உருவாக்க வேல்முருகன் ஆக்கப்பூர்வமாக போராட வேண்டும். தானே புயலின் பாதிப்பு எத்தகையது என்பது இன்று வரை தமிழக மக்களுக்கோ அரசுக்கோ முழுமையாகப் புரியவில்லை. முப்பது நாற்பது வருட விவசாயத்தை ஒரே நாளில் இழந்து தவிக்கும் மக்களை உடனடியாகத் திரட்டி ஆக்கப்பூர்வ உதவிகளுக்கு குரல் கொடுக்க வேல்முருகன் காலத்துக்கு வரவேண்டும்.
துக்க வீட்டில் தான் நல்ல மனிதர்களை அடையாளம் காட்ட முடியும் என்பார்கள். இன்றைக்கு கடலூர் துக்க வீடாகத்தான் கிடக்கிறது... வேல்முருகன் நல்ல மனிதரா இல்லையா என்பதை அவருடைய போராட்டமும், அரசின் கவனத்தை ஈர்க்கும் பக்குவமும் தான் நிரூபிக்கும்.
அடுத்தகட்டமாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் வேல்முருகன் இப்போதே தயாராக வேண்டும். வடமாவட்டங்களில் முதல்கட்ட ஒருங்கிணைப்பை உண்டாக்கி, ஒரு நாடளுமன்ற உறுப்பினரையாவது வேல்முருகன் பெற்றுக்காட்ட வேண்டும். பிறகு வரும் தேர்தல்களில் பார்க்கலாம் என வேல்முருகன் நினைத்தால், அந்த ஒத்திவைப்பே அவரை ஒன்றும் இல்லாத தலைவராக்கிவிடும்.
இவற்றை எல்லாம் கடந்து, வெறும் அரசியலுக்காக மட்டுமல்லாது, தமிழர் நலனுக்கான அத்தனை விசயங்களிலும் கொஞ்சமும் சமரசம் ஆகாத - பணத்துக்கும் வளைப்புக்கும் விலைபோகாத - கூட்டணிக்காக கொள்கை மறக்காத தலைவராக வேல்முருகன் தன்னை நிரூபிக்க வேண்டிய நேரமும் இதுதான். அதற்கான வயதும் வேல்முருகனுக்கு இருக்கிறது... வாய்ப்பும் இருக்கிறது. கண்ணியமிக்க தலைவர்களின் பங்களிப்பு தமிழகத்தில் காலியாகவே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கும் தகைசார்ந்த தலைவனாகவே வேல்முருகனை நாம் பார்க்கிறோம். நம் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் பொறுப்பு அந்த இளங்குதிரைக்கு இருக்கிறது!
- கும்பல்
Labels:
kumbal,
velmurukan,
கும்பல்,
சீமான்,
தமிழர் வாழ்வுரிமை கழகம்,
ராமதாஸ்,
வேல்முருகன்










+ comments + 1 comments
வேல்முருகனை எல்லோரும் தான் நம்பினோம்... ஆனால், அவர் தனிக்கட்சி தொடங்கியதில் எம்மைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. சீமான், வைகோ, திருமாவளவன் என ஈழ ஆதரவு சக்திகள் யார் பின்னாலாவது அவர் நின்றிருக்க வேண்டும். பத்தோடு பதினொன்றாவது ஆளாக அவர் இருந்து என்ன செய்யப் போகிறார்?
Post a Comment