5 கோடியைத் தாண்டியது தமிழக வாக்காளர் எண்ணிக்கை: பிரவீண் குமார்
தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியைத் தாண்டியுள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.04 கோடியாக அதிகரித்துள்ளது.
அதில், ஆண் வாக்காளர்கள் 2.53 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் 2.50 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள அம்சங்கள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த அக்டோபரில் அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் நவம்பர் 11-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பெயர்களைச் சேர்க்கக் கோரி 38.98 லட்சம் மனுக்கள் வரப்பெற்றன. அதில், 33.26 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏற்கப்பட்ட மனுக்களின் சதவீதம் 85 ஆகும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 2.53 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பேரவைத் தேர்தலின் போது, வாக்குச் சாவடி சீட்டுகள் விநியோகம் செய்யப்படாமல் 10 லட்சம் வரை தேங்கியிருந்தன. அவற்றை கள ஆய்வு செய்த போது உயிருடன் இல்லாதது, முகவரி மாறிச் சென்றது போன்ற காரணங்களால் 2 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
திருப்பூர் அதிகம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விகிதம் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, 4.73 கோடியில் இருந்து 5.04 கோடியாக அதிகரித்துள்ளது.
பெயர் சேர்ப்பு விகிதம் ஆண்களில் 6.4 சதவீதமாகவும், பெண்களில் 6.6 சதவீதமாகவும் உள்ளது. பிற பிரிவினர் (திருநங்கையர்) சேர்ப்பு விகிதம் 38.7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, பெயர் சேர்ப்பு விகிதம் திருப்பூர் மாவட்டத்தில் மிக அதிகமாக 10 சதவீதமாகவும், குறைந்த அளவாக அரியலூர் மாவட்டத்தில் 3.78 சதவீதமாக உள்ளது.
தொகுதிகளுடன் ஒப்பிடும்போது, அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 13.47 சதவீதமும், குறைந்த அளவாக பத்மநாபபுரம் தொகுதியில் 0.8 சதவீதமாகவும் இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் பெயர் சேர்ப்பு விகிதம் 6.61 சதவீதமாக உள்ளது.
வாக்காளர் பட்டியலும், அடையாள அட்டையும்: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் மாநிலம் முழுவதும் 99.87 சதவீதமும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிப்புப் பணிகள் 99.91 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 66 ஆயிரம் பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,300 பேருக்கும் புகைப்படம் இல்லை. சென்னையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் 88.1 சதவீதம் முடிவுற்றுள்ளன.
இளம் வயது வாக்காளர்கள்: வாக்காளர் பட்டியலில் இளம் வயது வாக்காளர்கள் 16 லட்சம் உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பெயர் சேர்ப்பு விகிதம் 2.29 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அது ஒரு சதவீதம் மட்டுமே இருந்தது. வெளிநாடுவாழ் இந்தியர்களைப் பொறுத்தவரை 14 ஆண்களும், 7 பெண்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்றார் பிரவீண் குமார்.
வயது வாரியாக வாக்காளர்கள் விவரம்:
வயது வாக்காளர்கள்
(லட்சத்தில்)
18-19 16.77
20-24 50.06
25-29 66.29
30-39 125.66
40-49 102.64
50-59 71.47
60-69 45.67
70-79 20.39
80-க்கு மேல் 5.36
Labels:
kumbal,
praveenkumar,
tamilnadu election commision,
கும்பல்,
தமிழகம்,
தினகரன்,
தினத்தந்தி,
தினமணி

Post a Comment