உ.பி., பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களின் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலேயே, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கி விட்டது.
உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-மந்திரி மாயாவதி, முலாயம்சிங் யாதவின் மகனும், சமாஜ்வாடி கட்சியின் செயல் தலைவருமான அகிலேஷ் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேற்கண்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் தேதியை தேர்தல் கமிஷன் நாளை (வெள்ளிக்கிழமை) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி மாதத்தில் 5 கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.
பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்த உ.பி.யைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளித் தேர்வுகளுக்கு இடையூறு இல்லாத வகையில் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
எனவே அதற்கேற்ற வகையில் தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகியவை சிறிய மாநிலங்கள் என்பதால், இந்த மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
கடந்த வாரம் பேட்டியளித்த தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, 5 மாநில தேர்தல் தேதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்றார்.

Post a Comment