Latest Movie :

திகாருக்கு தயா(ர்)நிதி!


சி.பி.ஐ. வலையில் சிக்கினார்!  
திகாரை நோக்கிக் கிளம்பத் தயாராகி விட்டார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் பேரப்பில்லையுமான தயாநிதி மாறன். கூடவே அவருடைய உடன்பிறந்த சகோதரர் கலாநிதி மாறனும்!

 "மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி தவறாக பயன்படுத்தி, ஏர்செல் நிறுனத்தை மேக்சிஸ் நிறுவனம் வசம் செல்ல வைத்தது உண்மையே. இந்த விஷயத்தில், அண்ணன், தம்பி இருவருமே தீவிரமாக செயல்பட்டு, முறைகேடுகளை அரங்கேற்றி உள்ளனர் . சிவசங்கரனின் தொழில்களை ஒன்றுமில்லாமல் செய்து, நாசமாக்கி உள்ளனர். குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அடிப்படை முகாந்திரம் இருப்பதென்பதும் உண்மையே' என, பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அளித்துள்ள அறிக்கையில், சி.பி.ஐ., சுட்டிக்காட்டியிருக்கிறது. இத்தனை காலமா காங்கிரஸ் காலைப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக்கொண்ட தயாநிதி மாறன் முதல் முறையாக விழி பிதுங்கி இருக்கிறார்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான சிவசங்கரன், தனக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும்படி வேண்டி விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை கிடப்பில் போட்டு காலம் தாழ்த்திய தயாநிதி, ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்று விடும்படி மறைமுகமாக நிர்பந்தப்படுத்தி உள்ளார். வேறு வழியின்றி, ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் கைகளுக்கு மாறியது. இதன்பின், மள மளவென ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு பிரதி உபகாரமாக 'சன் டைரக்ட்' நிறுவனத்திற்கு, மேக்சிஸ் நிறுவனம் சார்பில், 550 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.

இதையடுத்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது. இந்த சர்ச்சை, கடந்த ஓராண்டாக நீடித்து வரும் நிலையில், தன் விசாரணை அறிக்கையை, கடந்த 12ம் தேதி பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் சி.பி.ஐ., சமர்ப்பித்துள்ளது. கடந்த 2004 முதல் 2007 வரை, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி, தன் பதவியை முற்றிலும், சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்தியுள்ளதாக பொளேரென சொல்லி இருக்கிறது அந்த அறிக்கை. ஏர்செல் நிறுவனம் கேட்டிருந்த, 'ஸ்பெக்ட்ரம்' லைசென்ஸ்களை தாமதப்படுத்தியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. தாமதப்படுத்துவதற்கான உறுதியான காரணங்கள் எதுவும் இல்லை. ஆனாலும், வேண்டுமென்றே அந்நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டுள்ளன. ஏர்செல் நிறுவனத்தை, தொலைத் தொடர்பு தொழிலில் இருந்தே விரட்டியடிக்கும் நோக்கில், இவ்வாறு செயல்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நாட்டின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்று விடும்படி அந்நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவசங்கரனோ தன் நிறுவனத்தை விற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அப்போது அமைச்சராக இருந்த தயாநிதியும், அவரது சகோதரர் கலாநிதியும், இப்பிரச்னையில் தாங்களே நேரடியாக களம் இறங்கி, தீவிரமாக நெருக்கடி அளித்துள்ளனர். இவர்களின் தலையீடு அதிகமாக இருந்துள்ளது.அமைச்சரும், அவரது சகோதரரும் ஏர்செல் நிறுவனத்தை, மேக்சிஸ் நிறுவனத்திற்கு செல்ல வைப்பதில், தனி ஆர்வமும், தீவிரமும் காட்டினர் என்பதற்கு அடிப்படை முகாந்திரங்கள் நிறையவே உள்ளன.

இவர்களின் தீவிரமான நெருக்கடி காரணமாக, வேறு வழியின்றி மேக்சிஸ் நிறுவனம் வசம் ஏர்செல் நிறுவனம் போயுள்ளது. அவ்வாறு போன பிறகு, வேக, வேகமாக லைசென்ஸ்கள் மேக்சிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அதுவரை இழுத்தடிக்கப்பட்டு காலதாமதம் செய்யப்பட்ட லைசென்ஸ்கள், நிறுவனம் கைமாறியவுடன் விரைவாக அளிக்கப்பட்டிருப்பதும் உண்மையே.


இவ்வாறு ஒருபுறம், லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னொரு புறம் பிரதி உபகாரமாக, லஞ்சப் பணப் பரிவர்த்தனை நடந்து முடிந்துள்ளது. 
அதாவது, ஆஸ்ட்ரோ என்ற நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். இந்த ஆஸ்ட்ரோ நிறுவனமானது, அமைச்சராக இருந்த தயாநிதியின் சகோதரருக்கு சொந்தமான, சன் குழுமத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. சாதாரணமாக வெறுமனே வாங்கவில்லை. சன்குழுமத்தின் ஒவ்வொரு பங்குக்கும், பிரீமியமாக 69 ரூபாய் 75 பைசா வரை கூடுதலாக கொடுத்து, வாங்கியுள்ளது.

இதே காலகட்டத்தில், மேக்சிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ரால்ப் மார்ஷல் என்பவர், மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இருவருடனுடம் தீவிர தொடர்பில் இருந்துள்ளார். இதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியதிலும், இழுத்தடிக்கப்பட்ட லைசென்ஸ்கள் வேக, வேகமாக பிறகு வழங்கப்பட்டதிலும், சன் குழுமத்தின் பங்குகளை, கூடுதல் விலை கொடுத்து ஆஸ்ட்ரோ வாங்கியதிலும், தயாநிதி, கலாநிதி ஆகிய இரண்டு பேரின் தலையீடுகள், தீவிரமாகவும் அதிகமாகவும் இருந்துள்ளன. தவிர, ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனது தொழில் வர்த்தக தொடர்புகளை நாசப்படுத்தி, அவற்றை ஒன்றுமே இல்லாமல் செய்திருப்பதிலும், இந்த இருவரது பங்களிப்புகளும் அதிகமாகவே உள்ளன. 

ஒட்டுமொத்த முறைகேட்டின் மூலம், பிரதி உபகாரமாக வந்த லஞ்சப் பணம் என்பது 550 கோடி ரூபாய். மிகவும் துல்லியமாக கூற வேண்டுமெனில், 549.96 கோடி ரூபாய். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதும், வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் தர மறுத்ததும், காலம் தாழ்த்தி இழுத்தடித்ததும் உண்மையே. இதே காலகட்டத்தில், முழு தகுதி படைத்த டிஷ்நெட் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, அதற்கு மாறாக மேக்சிஸ் நிறுவனத்திற்கு லைசென்ஸ்கள் தரப்பட்டுள்ளதும் உண்மையே.கலாநிதிக்கு அமைச்சர் தயாநிதி வெறும் சகோதரர் மட்டுமல்ல. கலாநிதியுடன் தொழில் வர்த்தக தொடர்புகளுடையவராக, நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், கடந்த 9.10.2011ம் தேதி சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன், சன் டைரக்ட், ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் மற்றும் பெயர் தெரியாத சில நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு சி.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாநிதியிடம் கடந்த வாரம், ரகசியமான இடத்தில் வைத்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியதாக நேற்று செய்திகள் வெளியாகின. விசாரணை அனைத்தும் முடிந்து விட்டதால், விரைவில் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்யப் போகிறது என, அந்தச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சி.பி.ஐ., வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியது உண்மையே' என்று தெரிவித்தன. விசாரணை முடிந்து விட்டாலும், இவ்விஷயத்தில் இந்தியா - மலேசிய அரசுகளுக்கு இடையில், ஆதாரப்பூர்வ தகவல்களை திரட்டுவதற்கு விசேஷ நடைமுறைகளைப் பின்பற்றி பெற, அதிகாரப் பூர்வமான கடிதப் போக்குவரத்துகள் தொடர்கின்றன. எனவே, குற்றப் பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும் கூறின.


Share this article :

+ comments + 2 comments

தலைப்பு சூப்பர்... ஆ.ராசா, கனிமொழி வரிசையில் அடுத்து மாறன் பிரதர்ஸா... தி.மு.க. சிறப்பாக செழிக்கட்டும்!

29 July 2012 at 20:04

தயார்நிதி.... டைட்டில் சூப்பர். அரசியல், சினிமா என பலதரப்பு செய்திகளையும் கொட்டி திக்குமுக்காட வைக்கும் கும்பல் வாழ்க!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger