நெருப்புக்கு நல்லது எது கெட்டது எது எனத் தெரியாது. அதேபோல்தான் சர்ச்சைகளும்...! கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டி ஒய்வு பெற இருந்த கடைசி நாளில் சஸ்பென்ட் செய்யப்பட்டார் அல்லவா! சொத்து ரீதியான புகார்கள் அவர் மீது அடுத்தடுத்து தொடரப்பட, கடந்த பல மாதங்களாக அவை கிடப்பில் கிடந்தன. திடீரென கடைசி நாளில் அவை உயிர் பெற்று துக்கையாண்டியை சிக்கலில் ஆழ்த்தி இருக்கின்றன. துக்கையாண்டிக்கு நெருக்கமான போலீஸ் தரப்பு பெரிதாகப் போராடியும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
இதற்கிடையில் துக்கையாண்டி மீதான இன்னும் சில ஆஃப் தி ரெக்கார்ட் புகார்களை தீவிரமாகக் கையிலெடுக்கத் தொடங்கி இருக்கிறது விஜிலன்ஸ் தரப்பு. துக்கையாண்டியின் மகள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் சீக்கிரமே மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இங்கேதான் சிக்கல்... துக்கையாண்டியின் மகளை மனம் செய்திருப்பவர் யார் தெரியுமா? நேர்மையான செயல்பாடுகளுக்கும், தடாலடியான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றவரான விஜயகுமார் ஐ.பி.எஸ். தான். தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.யாகப் பணியாற்றும் விஜயகுமார் நடுநிலையாளர்களால் பாராட்டப்பட்டவர்.
ஆனால், துக்கையாண்டியை ஒழித்துக்கட்ட தீவிரம் காட்டும் அரசுத் தரப்பு அதிகாரிகள் சிலர் இந்த விவகாரத்தில் விஜயகுமாரையும் சிக்க வைக்க காய் நகர்த்தி வருகிறார்கள். ''சொத்து மோசடிகளில் சிக்கியவருக்கு மருமகன் ஆனதைத் தவிர வேறு எத்தகைய தவறையும் செய்யாதவர் விஜயகுமார்" என காவல் துறைக்குள்ளேயே சில ஆதங்கக் குரல்கள் கிளம்பியிருக்கின்றன.
பார்க்கலாம்... சர்ச்சை தீ எப்படிஎல்லாம் பரவுகிரதென்று...!

+ comments + 1 comments
விஜயகுமார் நல்ல அதிகாரி!!!!!!!!
Post a Comment