Latest Movie :

எதற்கு இந்த முதல்வர்? கொந்தளிக்கும் சீமான்!



ழத்து அகதிகளைக் கையாளும் அதிகாரத்தை க்யூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும் என உரக்கக் குரல் எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுநாள் வரை ஈழ ஆதரவுத் தலைவர்கள் யாரும் இத்தகைய வலியுறுத்தலை செய்யாதது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி சீமான் இப்படிச் சொல்கிறார்... ''புழல் ஈழ அகதிகள் முகாமில் இருந்து வந்த 6 பேரை ஜூலை 1ஆம் தேதி தமிழக காவல் துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் ஒரு வண்டியில் ஏற்றி சென்னை கடற்கரை சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார்கள்.  அவர்களில் 4 பேரை அன்று நள்ளிரவே விடுவித்துவிட்டு 2 பேரை மட்டும் நீதிபதி முன்பு நிறுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.  
இராமச்சந்திரன் என்கிற ரமேஷ், காந்தி மோகன் என்கிற சுதர்சன் ஆகிய இருவரும் மீதும் சாட்டிலைட் டெலஃபோன் வைத்திருந்தார்கள், ஆஸ்ட்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல பணம் திரட்டினார்கள் என்று குற்றம்சாற்றி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த பிறகு, அவர்கள் இருவரையும் விசாரணைக் காவலில் எடுத்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளது க்யூ பிரிவு. விசாரணையின் போது, ஆஸ்ட்ரேலியாவிற்கு செல்வதற்காக சேர்த்த பணம் யாரிடம் உள்ளது என்று கேட்டுத்தான் துன்புறுத்தி உள்ளனர். ஆக, இவரகள் மீது சாட்டிலைட் ஃபோன் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாற்று பொய்யானது என்பதும், ஆஸ்ட்ரேலியாவிற்கு அகதிகளாகச் செல்ல அவர்கள் சேகரித்த பணத்தை அபரிக்கவே இவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததும் உறுதியானது.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட காந்தி மோகன், இராமச்சந்திரன் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப் படி நேற்று அவர்கள் விடுவிக்கப்பட இருந்த நிலையில், காலை 5 மணிக்கே சிறைக்கு வந்து, மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, அந்த இருவரையும் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு சென்று அடைத்துள்ளது க்யூ பிரிவு. இது முழுக்க, முழுக்க சட்டத்திற்குப் புறம்பான, நீதியற்ற நடவடிக்கையாகும். இந்த இருவரும் நீதிமன்றக் காவலில் இருந்தபோதே விசாரணை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு, இப்போது மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது என்பது சித்தரவதை செய்யவே தவிர, வேறு கரணிகள் இல்லை. ஈழத்து சொந்தங்களை சட்டத்திற்கு புறம்பாகத் தடுத்து வைத்து க்யூ பிரிவு சித்ரவதை செய்கிறது என்கிற குற்றச்சாற்றுக்கு இந்த நிகழ்வே சரியான சான்றாகும்.

இப்படித்தான் பல ஈழ அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறது க்யூ பிரிவு. கடந்த காலங்களில் ஈழ அகதிகளிடம் இருந்த பணத்தை பறித்த க்யூ பிரிவு அதனை ஒருபோதும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது இல்லை. பணம் மட்டுமல்ல, அவர்களிடம் இருந்த கைப்பற்றப்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது இல்லை. தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு செய்துவரும் இப்படிப்பட்ட அராஜகங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவே கடந்த 11ஆம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம் மறியல் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். ஆனால் அந்த போராட்டத்திற்குப் பிறகும் க்யூ பிரிவின் இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கை தொடர்கிறது என்றால், ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களுக்கு இந்த ஆட்சியிலும் மதிப்பில்லை என்றே தெரிகிறது.

இந்த நாட்டில் வாழும் தீபெத் அகதிகளும், பர்மா அகதிகளும் சீரும் சிறப்புமாக முழு உரிமையுடன் பாதுகாப்பாக வாழ்ந்து வருகையில், நமது ஈழத் தமிழ் சொந்தங்கள் மட்டும் அவமானப்படுத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்களை துன்புறுத்துவதற்காகவே சிறப்பு முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் தனிமைச் சிறைக் கூடங்களை க்யூ பிரிவு பயன்படுத்தி வருகிறது" என ஆவேசமாகச் சொல்லும் சீமான் முதல்வர் ஜெயலலிதாவின் பாராமுக போக்கையும் கண்டிக்கத் தவறவில்லை.

''ஈழத் தமிழ் சொந்தங்கள் அரசியல் சம உரிமை பெறும் வரை ஒயமாட்டேன் என்று தமிழக சட்டப் பேரவையிலேயே தமிழக முதல்வர் முழங்கினார், ஆனால் அவருடைய ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டிலேயே அவர்கள் கேவலமாக நடத்தப்படுவது முரண்பட்ட நிலையாக உள்ளது. எனவே இதற்கு மேலும் தாமதிக்காமல், இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்" என ஆவேசமாக சொல்லி இருக்கிறார் சீமான். 


கொடநாட்டில் குளிர் குறைந்துவிட்ட வருத்தத்தில் சிம்லாவுக்கு பறக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு இந்த கோரிக்கையெல்லாம் எங்கே கேட்கப் போகிறது?!

- கும்பல் 
Share this article :

+ comments + 3 comments

23 July 2012 at 00:36

க்யூ பிராஞ்சுக்கு இதுவே வேலையாகப் போய்விட்டது. அகதிகளை புலிகளாகப் பார்ப்பதும், அவர்களுடைய பொருட்களைப் பிடிங்கிக்கொள்வதுமே இவர்களுக்கு அத்தியாவசிய பணி. சமீபத்தில் அகதிப் பெண்ணை க்யூ பிராஞ்ச் அதிகாரிகளே பாலியல் பலாத்காரம் செய்ததாக செய்தி வந்தது. கார்டூனில் போட்டிருப்பது போல சீமானின் இந்த ஆவேசமெல்லாம் கொடநாட்டில் இருக்கும் முதல்வரம்மாவுக்கு கேட்குமா என்ன?

24 July 2012 at 20:28

KEEP IT UP SEEMAN...

கேட்க வேண்டியவர்கள் காதுகளில் விழுந்தால் சரி...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger