டெல்லியில் நடந்த 'அட்ராசக்க' அதிரடி!
கடந்த 13 -ம் தேதி... டெல்லியில் நடந்த அந்த சந்திப்பைப் பற்றி இப்போதுதான் டெல்லியின் தி.மு.க. புள்ளிகளுக்கே தெரிய வந்திருக்கிறது. சசிகலாவின் கணவர் எம்.நடராஜனும் மத்திய நிதித்துறை இணையமைச்சரும் முக்குலத்துப் பிரமுகருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கமும் சந்தித்த நிகழ்வுதான் டெல்லியை மட்டும் அல்லாது தமிழகத்தையும் தடதடக்க வைத்திருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தெரிந்து நடந்த சந்திப்புதானா இது என்பது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் யோசிக்க வைத்திருக்கிறது.
கைது நடவடிக்கைக்குப் பிறகு இன்னமும் மனவருத்தம் மாறாமல் இருக்கும் நடராஜன் திடீரென மத்திய நிதித்துறை இணையமைச்சரை சந்தித்தது ஏன்? சாதிய ரீதியில் இருவரும் மிக நெருங்கிய உறவினர்கள் என்றாலும் கட்சி வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பெரிய அளவுக்கு பேச்சுவார்த்தை இருந்தது கிடையாது. கைது மனக்கசப்புகளைக் கடந்து சசிகலாவுக்காக நடராஜன் அமைதியாகத்தான் இருப்பார் என ஜெயலலிதா நம்பியிருந்த நிலையில், நடராஜனின் இந்த சந்திப்பு கார்டனை அதிர வைத்திருக்கிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்த இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. சீக்கிரமே ராவணனும், மன்னார்குடி திவாகரனும் பவருக்கு வருவார்கள் என பலரும் அனுமானமாக சொல்லி வரும் நிலையில், நடராஜனின் இந்த மூவ் உறவு வட்டாரத்திலும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. பணப்பரிமாற்றம் சம்மந்தமான சந்திப்புதான் இது எனச் சொல்பவர்களும் உண்டு.
திருச்சி சிறைக்குள் இருந்து வெளியே வந்தபோது நடராஜன் சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவு கூறத்தக்கவை...
''நேரடி அரசியலுக்கு வரவேண்டாம் என நினைத்த என்னை நேரடி அரசியலுக்கு வரவைத்துவிட்டார் அம்மையார். இதை நினைத்து அவர் சீக்கிரமே வருந்துகிற நிலை வரும்!"
மனப்புழுக்கம் மாறாமல் இருக்கும் நடராஜன் தன் பழிதீர்ப்புக்கான வேலையைத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. பழனிமாணிக்கம் உடனான சந்திப்பு நடராஜனின் நம்பிக்கையை காப்பாற்றுமா இல்லை, சாதாரண சந்திப்புகளில் ஒன்றாகவே இருக்குமா என்பதுதான் கேள்வி!
- கும்பல்


Post a Comment