Latest Movie :

மதுரை கலெக்டர் சகாயம் மாற்றப்பட்டது ஏன்?





டந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம் அது. முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர்கள் பலருக்கும் பரவசம் போங்க போன் போட்டுக் கொண்டிருந்தார். ''எனக்கு அப்பவே தெரியும்... தி.மு.க.வோட அட்டூழியங்களுக்கு இந்தத் தேர்தல்ல சரியான அடி கிடைக்கும்னு நல்லா தெரியும். அவங்களோட அடாவடிகளை கர்த்தராலேயே பொறுக்க முடியலை. அதனாலதான் அந்தம்மாவை கர்த்தர் தனி மெஜாரிட்டியில ஜெயிக்க வைச்சிருக்கார்!" என போனிலேயே ஸ்வீட் கொடுக்காத குறையாகக் கொண்டாடினார். 

அதே அதிகாரியின் சமீபத்திய புலம்பல்...

''கர்த்தர் இந்த ஆட்சியில நடக்குற எல்லா அட்டூழியங்களையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கார். விலைவாசி தொடங்கி அதிகாரிகளை பந்தாடுற கொடுமைகள் வரைக்கும் இங்கே ஆட்சியா நடக்குது? சீக்கிரமே இதுக்கெல்லாம் கர்த்தர் முடிவு காலத்தை கொடுப்பார்!"

அனேகமாக இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள் இந்த புலம்பல் அதிகாரி யார் என்று? சாட்சாத் நம்ம உமாசங்கர்தான். நேர்மையிலும், கடமையிலும் நெருப்புக்கு நிகரான இந்த அதிகாரியின் புலம்பலில் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையான ஆதங்கம் இருக்கிறது. அவர் மட்டுமல்ல... அரசுக்கு நெருக்கமானவர்கள் என வர்ணிக்கப்படும் அதிகாரிகள் தொடங்கி தள்ளிவைப்புக்கு ஆளாகி இருக்கும் அதிகாரிகள் வரை இந்தப் புலம்பல் எதிரொலிக்கவே செய்கிறது. 

மதுரை கலெக்டராக சகாயம் ஒரு வருடத்துக்கும் மேலாக நீடித்ததே பெரிய ஆச்சரியம்தான். மணல் கொள்ளை தொடங்கி அழகிரியின் ஆட்டம் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சகாயம் திடீரென கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். ஆள் இல்லாத பாலைவனத்துக்கு அனுப்பினாலும், கடமை கடமை என கண்ணை மூடிக்கொண்டு பணியாற்றக் கூடியவர்தான் சகாயம். ஆனால், மதுரையின் அமைதிக்கும், நிம்மதிக்கும் உத்திரவாதமாக இருந்த கண்ணப்பன், சகாயம் இருவரும் சமீப காலங்களுக்குள் தூக்கி அடிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வி எல்லோரையும் குடைகிறது. 

'அரசு அதிகாரி என்றால் டிரான்ஸ்பர் என்பது சகஜமானதுதானே... இதற்கு ஏன் மீடியாக்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?' என மிக இயல்பாக இந்த பரபரப்பு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சகாயம். ஆனால், அவர் தூக்கியடிக்கப்பட்ட காரணத்தைத் தெரிந்துகொள்ள மதுரைவாசிகள் ஆதங்கம் அடங்காமல் இந்த விவகாரத்தை விவாதித்தபடியே இருக்கிறார்கள். 

'சகாயம் இருக்கும் வரை மதுரையைப் பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை அம்மா...' என முதல்வரிடமே ஒரு அதிகாரி அடித்த கமெண்டுதான் சகாயத்துக்கு சறுக்கலை உண்டாக்கிய முதல் சம்பவம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். 'அப்போ, அவர் அங்கே தனி ஆட்சி நடத்துறாரா... இந்த ஆட்சிக்கும் மதுரைக்கும் சம்பந்தம் இல்லையா... குற்றங்கள் குறைந்து மதுரை இன்றைக்கு நிசப்தமாக இருப்பதற்கு அம்மாதானே காரணம்' என கமென்ட் அடித்த அதிகாரியை மொய்த்த காச்மூச் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. அடுத்த சம்பவங்கள் ஆளுங்கட்சி புள்ளிகளால் உண்டானவை. 'நாங்க சொல்றதை காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறார். பப்ளிசிட்டிக்காக மீடியாக்களை கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். நம்ம கட்சிக்காரங்களையே கைது பண்ணி நடுநிலையானவர் மாதிரி காட்டிக்கிறார்...' என இன்னும் இன்னுமான புகார்கள் சகாயத்தின் மீது படைஎடுத்தபடி இருந்தன.

இவற்றையெல்லாம் விட, அழகிரியின் குடும்பத்தினர்களில் ஒருவரையாவது கைது செய்து உள்ளே தள்ள நடவடிக்கை மேற்கொள்ளும்படி கண்ணப்பன், ஆஸ்ரா கார்க், சகாயம் மூவருக்கும் உத்தரவிட்டப்பட்டதாகவும், அரசின் எதிர்பார்ப்புக்கு தக்க வேகத்தில் செயல்பட சகாயம் மறுத்ததாகவும், சட்டரீதியான முறையிலேயே செயல்பட முடியும் எனச் சொன்னதாகவும் கோட்டை முழுக்க பேச்சிருக்கிறது. சகாயம் டம்மியான பதவிக்கு மாற்றலான பின்னணி இதுதான் என்கிறார்கள் பலரும். 


அதிகாரிகள் தூக்கியடிக்கப்படுவதோ, அலைக்களிக்கப்படுவதோ இந்த ஆட்சியில் புதிதாக நடப்பவை அல்ல. ஆனால், மக்களின் பேரபிமானத்தையும், நம்பகத்தையும் பெற்ற அதிகாரிகளை தொடர்ந்து இப்படி நாலாபுறங்களுக்கும் தூக்கி அடிப்பது, இதர அதிகாரிகளையும் எச்சரிக்கும் சர்வாதிகாரமயன்றி வேறென்ன?  அரசின் நிலைப்பாடு என்ன எனப் புரியாமல், யாருக்குத் தலையாட்டுவது, யாரை தவிர்ப்பது எனப் புரியாமல் தடுமாறும் அதிகாரிகள் எத்தனை பேர்? 

உதாரணத்துக்கு ஒரே ஒரு சம்பவம்...

கேபிள் ஊழியர்களை மிரட்டிய கலாநிதி மாறனை உடனே கைது செய்யப்போவதாக அரசுத்தரப்பு ஆவேசமாக அறிவித்ததையும், அடுத்த நாளே கலாநிதி தனி விமானத்தில் வெளிநாட்டுக்கு கிளம்பிப் போனதையும் மக்கள் நன்கறிவார்கள். கலாநிதி மாறன் பத்து நாட்கள் கழித்து சென்னை திரும்பினார். அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களுக்குள் கலாநிதிக்கும் கார்டனுக்கும் என்ன ஒப்பந்தம் நடந்தது? 'கலாநிதி ஸ்டேஷனில் ஆஜராகாவிட்டால் கைது செய்வோம்' என மீடியாக்களிடம் முழங்கிய அந்த போலீஸ் அதிகாரி இந்த அரசின் நிலைப்பாடு புரியாமல் உளறிவிட்டோமே என மனதுக்குள் என்ன பாடுபடுவார்? நாளைக்கு தி.மு.க. ஆட்சி வந்தால் அந்த அதிகாரியை கலாநிதி சும்மா விடுவாரா?

பணியைச் செய்தாலே பனிஷ்மென்ட் என்கிற இந்த நிலை நீடித்தால் சகாயத்துக்கு மட்டுமல்ல... எந்த அதிகாரிக்கும் சகாயமாக இந்த அரசு இருக்கப்போவது இல்லை. கடமையே கதியெனக் கிடந்த ஒரு அதிகாரியை கர்த்தரின் புகழ் பரப்பும் கூட்டங்களை நடத்தும் மதப்போதகராக மாற்றியதும், எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தனிக்கட்சி தலைவராகவும் மாற்றிது இத்தகைய பந்தாடல்கல்தானே... 'தினம் ஒரு மாற்றல்...' என தினசரிப் பத்திரிக்கைகளுக்குத் தீனியும், 'ஓராண்டு சாதனை பாரீர்' என வெட்கப்படத்தக்க விளம்பரங்களும் கொடுப்பதற்குத்தான் அரசு என்று பெயரா? 

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமையாளராக தன்னைக் காட்டத் துடிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முதலில் தன் நிலைப்பாடுகளைத் தானே தீர்மானிப்பவராக மாற வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்!

- கும்பல்  
Share this article :

+ comments + 2 comments

23 May 2012 at 20:06

ஆள் இல்லாத பாலைவனத்துக்கு அனுப்பினாலும், கடமை கடமை என கண்ணை மூடிக்கொண்டு பணியாற்றக் கூடியவர்தான் சகாயம். / இந்த வரிகள் போதும்... சகாயத்தின் சாதனையை சொல்ல!

சொத்து சுகங்களுக்காக அலையும் அதிகாரிகளுக்கு மத்தியில், தனக்கு இருக்கும் சொத்து விபரத்தை தைரியமாக வெளியிட்டவர் சகாயம். கும்பல் சொல்வதைப்போல் அவர் இத்தனை நாட்கள் மதுரையில் தாக்குப் பிடித்து இருந்ததே பெரிய விசயம் தான். கோ ஆப்டெக்ஸிலும் கலக்குங்க சகாயம் சார்!

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger