அழகிரி, கனிமொழி போட்டி போட்டு வரவேற்பு!
கடந்த 15 மாத இருளைக் கடந்து வெளியே வந்திருக்கிறார் ஆ.ராசா. கனிமொழி, சாகித் பால்வா, சரத்குமார் உள்ளிட்டவர்கள் சிறைக்கொடுமை தாங்காமல் தொடர்ந்து ஜாமீன் மனு போட்டுப் போராடிக்கொண்டிருந்த போதும், ராசா ஜாமீன் கேட்காமலே இருந்தார். வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளியே போனபிறகு கடைசி ஆளாகத்தான் அவர் ஜாமீன் கேட்டார். தொடர்ந்து கோர்ட்டுக்கு தொந்தரவு கொடுக்காததாலோ என்னவோ... சி.பி.ஐ. அதிகாரிகள் கடுமையாக ஆட்சேபித்த பிறகும் ராசாவுக்கு ஜாமீன் வழங்கினார் ஓ.பி.சைனி.
ராசா ரிலீஸ் சுவாரஸ்யங்கள்:

கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்டதைப் போல ஐந்து லட்ச ரூபாய்தான் ஷுரிட்டி தொகையாக கேட்கப்படும் என நினைத்து அவ்வளவு தொகையை மட்டுமே ராசா தரப்பினர் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால், இருபது லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என சொன்னது கோர்ட்.

வங்கித் தொகையிருப்பாக யாரிடமும் பணம் இல்லாததால், இருபது லட்ச ரூபாயை திரட்ட ராசாவுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.

ஷுரிட்டி தொகையைக் கட்ட ஏன் இவ்வளவு தாமதம் எனக் கேட்டார் நீதிபதி சைனி. 'இருபது லட்சம் பணம் இல்லை' என ராசா தரப்பினர் சொல்ல, சைனிக்கு சிரிப்புத் தாங்கவில்லை.

ஜாமீன் ஆர்டர் கிடைத்தாலும், அவர் திகார் ஜெயிலை விட்டு வெளியே வர எப்படியும் இரவு ஏழு மணியாகிவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும், நாலரை மணிக்கே ராசாவுக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டார் மத்திய அமைச்சர் அழகிரி.

யாருடைய காரில் ராசா வெளியே வரப்போகிறார் என ஏக எதிர்பார்ப்பு நிலவியது. பலரும் அனுமானித்தபடியே கனிமொழியின் காரில் வெளியே வந்தார் ராசா.

கனிமொழியின் உதவியாளர் மனு (வக்கீல் சண்முகசுந்தரத்தின் மகன்) ராசாவுக்கான உதவிகளை அன்று முழுக்க செய்தபடி இருந்தார்.

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் காந்தி செல்வனின் வீட்டில் ராசா ஆதரவாளர்களுக்கான உணவு, இனிப்பு தயார் செய்து கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர், நீலகிரி எரியாக்களிலிருந்து ஐநூறுக்கும் அதிகமானோர் வந்திருந்தார்கள். அவர்களுக்கான தங்கும் வசதி ஏற்பாடுகளை ராசாவின் அண்ணன் செய்துகொண்டிருந்தார்.

மீடியாக்களை சந்திக்க ராசா எப்போதுமே தயங்குபவர் கிடையாது. ஆனாலும், கட்சித் தலைமையின் உத்தரவுப்படி மீடியாக்களை சந்திக்காமல் தவிர்த்துவிட்டார்.

ராசா ரிலீஸ் நிகழ்வுகளில் மறந்தும் தயாநிதி மாறன் தலைகாட்டவில்லை. அவர் வெளிநாட்டு பயணத்தில் இருப்பதாக பேச்சு அடிபட்டது.

இரண்டு டயரிகள் முழுக்க ஏதோ எழுதி வந்திருக்கிறார் ராசா. 'புத்தகம் எழுதி இருக்கிங்களா?' என சிவா கேட்க, 'சிறைக்குறிப்புகள்' என்றார் ராசா சிரித்தபடி.

ராசாவின் டெல்லி வீட்டில் வானவேடிக்கை நிகழ்த்தி வரவேற்பு வழங்கப்பட்டது.

ராசாவின் கையிருப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை யார் ஆதாயப்படுத்துவது என்கிற போட்டிதான் தற்போது தி.மு.க.வில் நடக்கிறதாம். வரும் நாடாளுமன்ற தேர்தலையே நடத்துகிற அளவுக்கு ராசாவிடம் பணம் கையிருப்பு இருப்பதாக பரபரப்பான பேச்சு அடிபட்டது. ராசாவுக்கு ஆதரவாக அழகிரி தொடர்ந்து வலம்வரும் பின்னணி இதுதானாம்.

அழகிரியை முந்திக்கொண்டு ராசாவை வரவேற்க ஆர்வம் காட்டியபடி இருந்தார் கனிமொழி. வீட்டுக்கு வந்த ராசா கனிமொழியிடம் சில நிமிடங்கள் தனியாகப் பேசினார்.

என்ன காரணமோ தெரியவில்லை... ராசாவின் மனைவி பரமேஸ்வரி பட்டும்படாமலே நடந்துகொண்டார். பெரம்பலூரிலிருந்து வந்திருந்தவர்களைக்கூட அவர் கண்டுகொள்ளவில்லை.

ஜாமீன் வெளியே வந்த அன்று ஆ.ராசா தூங்கப்போனது அதிகாலை 2:30 மணிக்கு!
- கும்பல்
+ comments + 2 comments
Matter and photos spr.
ராஜா கைது குறித்து ஹிந்து தொடங்கி தினமணி வரை அனைத்துப் பத்திரிக்கைகளிலும் படித்தேன். இந்தளவுக்கு சுவாரஸ்யமான, உண்மையான தகவல்கள் எதிலும் இல்லை. பரமேஸ்வரியின் கோபம் குறித்து இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். கீப் இட் அப் கும்பல்!
Post a Comment