''முன்ன மாதிரி இல்ல சார்... இப்ப எல்லாருமே சமூக அக்கறையோட படம் எடுக்குறாங்க... கவர்ச்சி, அடிதடி, வன்முறைன்னு பதைபதைக்க வைக்கிற தமிழ் சினிமாக்கள் இப்போ வாரது இல்லை. கல்வியை வலியுறுத்தி, அதுவும் தரமான , தேவையான கல்வியை வலியுறுத்தி ஒரே நேரத்தில் மூன்று தமிழ் படங்கள் வந்திருக்கின்றன. வாழ்க்கைக்கான கல்வியை வலியுறுத்தும் நண்பன்... சிறுவர்களுக்கான கல்வியை வலியுறுத்தும் மெரீனா... சுமையான கல்வியை எதிர்த்து மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு உதவக் கோரும் தோணி... என மூன்று படங்களும் சமூகத்துக்கான ஒளிவிளக்குகள். இனிமேல் பாருங்க... தமிழ் சினிமாவோட வளர்ச்சி எங்கேயோ போயிடும்!"
- கடந்த வாரம் கோடம்பாக்கமே கதியெனக் கிடக்கும் ஒரு நண்பர் சொன்ன ஸ்டேட்மென்ட் இது.
உண்மையிலேயே தமிழ் சினிமா உலகம் இந்தளவுக்கு தலைகீழாக மாறிவிட்டதா என்ன? சமூக அக்கறை, கல்விக்கான வலியுறுத்தல் என சினிமாகாரர்களின் சிந்தனையில் பொறுப்புணர்வு பிறந்தது எப்படி?
நண்பன்
முதலில் இந்த சமூக அக்கறையின் பின்னணியைப் பார்ப்போம்... நண்பன் படத்தை தமிழ் படம் என்றால் அதைவிட பெரிய காமடி இருக்க முடியாது. படத்தில் வரும் கல்லூரி தொடங்கி மாணவர்கள் வரை யார் முகத்திலும் தமிழ் சாயலே இல்லை. இந்தி படத்தின் அறிவிக்கப்பட்ட ரீமேக் என்பதால் கூட இப்படி இருந்திருக்கலாம். அதற்காக இந்தி பட ஹிரோயினின் ஹெல்மெட் கலரைக் கூட மாற்றாமல் காப்பி ரைட் சட்டத்தையே காப்பாற்றிய பெருமை ஷங்கர் சாரையே சாரும்.
ஒரு நல்ல படத்தை தமிழுக்குக் கொண்டுவந்த கடமைக்காக ஷங்கர் சாரை நிச்சயம் பாராட்டலாம். அதுசரி... ஒரு சில்லி போன்காலுக்காக பிளைட்டை பாதியில் நிறுத்தி, நெஞ்சைப் பிடித்தபடி நடித்து, விமான நிலைய அதிகாரிகளை ஏமாற்றி.... முதல் காட்சியிலேயே இயல்பற்ற தனம் இடியாய் இறங்குகிறது.
விஜய் வருகிறார்... படிக்கிறார்... டிகிரி சர்டிபிகேட்டை யாரோ ஒருவருக்கு தானம் செய்துவிட்டு, தனியே ஒரு கிராமத்தை உருவாக்கி, மாணவர்களுக்கு உதவுகிறார். அப்பாடா... எழுதுகிறபோதே கண்ணைக்கட்டுதே... உயிருக்குயிராகப் பழகும் மூன்று நண்பர்களில் ஒருவர் பிரிகிறார்... அவருக்கு என்ன இக்கட்டு இருந்தாலும், அதனை அவர்களிடத்தில் மறைப்பாரா? ஏதோவொரு கிராமத்தில் இருந்தபடி இணையதளத்தை உருவாக்கி விஜய் உலகளாவிய கவனத்தை பெறுவதும், அவரைத் தேடி அக்ரிமென்ட் போட சத்யன் கனவோடு அலைவதும்... சும்மா இருங்க சார்... இதுக்கு மேல படத்தைப் பத்தி எழுத எரிச்சலா இருக்கு.
நல்ல படம் என்பது என்ன? யாதார்த்தப் பாதையில் பயணிக்கும், ஒரு
வாழ்வியலை சொல்லும், மிகைப்படுத்தலோ திணிப்போ இல்லாத படங்களைத்தானே நல்ல படம் என சொல்ல முடியும். அதற்கான அறிகுறியே இல்லாத 'நண்பன்' படத்தை எப்படி நல்ல படம் எனச் சொல்வது? அருகம்புல் ஜூஸ் உடலுக்கு நல்லது என்பதற்காக, அதில் ஸ்வீட்டை அள்ளிக்கொட்டி உருவாக்கினால் எப்படி இருக்கும்? கொஞ்சம் துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவை இருந்தால்தானே அது அருகம்புல் ஜூஸ்!
மெரீனா
அடுத்து மெரீனா... 'அவசியம் இந்த சமூகம் பார்க்க வேண்டிய படம்' என
விக்ரம், சினேகா, அமீர், சசிகுமார், பிரகாஷ்ராஜ் என பலரும் தங்களின் வேலை வேட்டியை விட்டு விட்டு நம் முன்னால் வந்து நின்று வலியுறுத்திய படம். 'அனைத்து சிறுவர்களும் படிக்கணும்' என முதல் காட்சி தொடங்கி முடிகிற காட்சி வரை வலியுறுத்துகிறார்கள்... வலி என்றால் அப்படியொரு வலி... ஒரு பாத்திரம் கூட பார்ப்பவர்களின் மனதில் ஒட்டிவிடக் கூடாது எனத் திட்டம் போட்டு எடுத்தால் எப்படி இருக்கும்... அப்படியொரு படம்! படிப்பை வலியுறுத்தி ஜெயப்பிரகாஷ் பேசும் ஒரு வசனம் போதும்... கல்வி பிரசாரத்துக்கு கேசட் போட்டு விற்கலாம். படம் முடிந்து திரும்புகையில், 'புள்ள குட்டிகளை படிக்க அனுப்புங்கடா... படம் எடுக்க அனுப்பாதீங்க...' என சம்பந்தப்பட்ட இயக்குனரின் தலைமுறைகளை தோண்டி எடுத்து திட்டத் தோணுகிறது.
கடைசியாய் நம்ம நடிப்புலக நாயகன்... சிவாஜி கணேசனின் அண்ணனாகப் பிறந்திருக்க வேண்டிய பிரகாஷ்ராஜ் இயக்கிய தோணி... நல்ல படம்தான். மராத்தியப் படத்தின் ரீமேக். இயக்குனர் அவதாரம் எடுக்க விரும்பிய பிரகாஷ்ராஜ் இந்தக் கதையை தேர்ந்தேடுத்ததற்கே பாராட்டலாம். ஆனால், படத்தில் என்ன நடக்கிறது? வசனத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பிரகாஷ்ராஜை பேட்டாலேயே விளாசத் தோன்றுகிறது. உங்க முகத்தை கொஞ்சம் கண்ணாடியில் பாருங்க சார்... உதட்டை சுளித்தபடி நீங்கள் ஸ்க்ரீன் முழுக்கத் தெரியும் ஒரு காட்சி போதும்... உவ்வே வரவைக்க!
தோணி
அந்த சிறுவனின் மனநிலை மீது பயணித்திருக்க வேண்டிய படம், முழுக்க
முழுக்க நம்ம ராஜ்... பிரகாஷ்ராஜ் சார் மீதே பயணிக்கிறது. முதல்பாதி வரை ஒரு தகப்பனின் தவிப்பாக பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் நாமும் கலக்கிறோம்... ஆனால், இரண்டாம் பாதி... பேசுகிறார் பேசுகிறார் பேசிக்கொண்டே இருக்கிறார். விஜய் டி.வி. நீயா நானாவில் பேசுகிறார்... கதறி அழுகிறார்... அவருடைய கதறலுக்கு தமிழகமே கலங்குகிறது. ஒரே நாளில் பிரசித்தி புள்ளியாகிறார். ஆட்டோகாரர் தொடங்கி அயல்நாட்டு டாக்டர் (தலைவாசல் விஜய்) வரை பாராட்டி தள்ளுகிறார்கள். முதலமைச்சரே 'என்னங்க சுப்பு... நல்லா இருக்கீங்களா?' என விஜய் டி.வி. நீயா நானா
ரசிகரைபோல கேட்கிறார். ஸாரி ராஜ் சார்... முடியலை. ஆயிரம் பொதுக் கூட்டம் நடத்தினால் கூட ஒரு அமைச்சரின் கவனத்தை கூட இங்கே திருப்ப முடியாது. உங்க படத்துக்கு கிடைச்ச வெற்றி என்ன தெரியுமா... 'விஜய் டி.வி. நீயா நானா நிகழ்ச்சியில் பேசினால் ஒரே நாளில் பேமஸ் ஆகிடலாம்' என்பது மட்டும் தான்.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல் என ஒரு சின்னப் பையன் மீது ஏன் இத்தனை பாடங்களை சுமத்துறீங்க என்பது உங்களின் முக்கியமான கேள்வி. பத்தாம் வகுப்பு வரை அனைத்து விதமான பாடங்களையும் அறிகிற மாணவன், ப்ளஸ் ஒன் சமயத்தில் விருப்ப பாடத்தையும் அதனோடு கூடிய துணைப் பாடத்தையும், கல்லூரியில் விருப்பப் பாடத்தை மட்டுமே எடுப்பது தான் தமிழக கல்வி முறை. நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லுரி வரை ஒரே பாடத்தை எடுத்துப் படித்தால்... அந்த மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? எதைப் பற்றியும் சிறு அறிதலாவது வேண்டும் என்கிற கல்விக் கொள்கை உங்களுக்கு மட்டும் கசப்பது ஏன்?
கல்வித் திட்டத்தைப் பற்றிய இதர விசயங்களை நீங்கள் விளாசி இருப்பதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். 18 * 7 எவ்வளவு சார் எனக் கேட்பது அசாத்திய செருப்படி! ஆனால், அதையே திரும்பத் திரும்ப கேட்டு செருப்படிகளையே உருப்படிகளாக மாற்றுவது நியாயமா சார்? இயல்பே இல்லாத செயற்கைத்தனமான படத்தை எடுத்துவிட்டு எப்படி சார் இந்தளவுக்கு சமூக புரட்சி செஞ்சா மாதிரி சிரிக்கிறீங்க? தோணி நாட் அவுட்டோ இல்லையோ... அதை நம்பிப் பார்த்த நாங்க அவுட்!
சமூக புரட்சி செய்ய நினைக்கும் கோடம்பாக்க புண்ணியவான்களே... உங்க மனசுக்கு ஏதும் ஆதங்கமா பட்டால் நடுவீதியில் இறங்கி மனுஷ மக்களை சந்திச்சு சொல்லுங்க... அதை விட்டுட்டு படம் பார்க்க வர்றவனை சட்டையப் பிடிச்சு உட்கார வச்சு பாடம் நடத்தி அனுப்பாதீங்க. ஒரு நிமிஷம் யோசிங்க... 100 ரூபாய் பணம் கொடுத்து உங்ககிட்ட பாடம் கத்துக்கிட்டுப் போகணும்னா நாங்க படத்துக்கு வாரோம்? யதார்த்தப் படம் எடுக்க முடியலைன்னா கவர்ச்சி, அடிதடின்னு ஏதாச்சும் அட்டு படமாச்சும் எடுங்க... இப்படி அட்வைஸ் படம் எடுக்காதீங்க!







+ comments + 9 comments
its a good dimension of tamil industies
ha ha ha foolish artical..! ! good way to waste ur time...! ! ! intha mathiri padangalai vimarsanam pani ungaluku pugal , vilambaram theeda pakkurenga nu matum theliva theriuthu..! ! "ITHELLAM ORU PULAPPADA??'
யதார்த்தப் படம் mattum nalla padama....??? can u explain what is cinema? wts the need of that?
மிக்ஃ சிறப்பான கட்டுரை. கோடம்பாக்க அதிமேதாவிகலுக்கு பாடம் கொடுக்கும் அருமையான கட்டுரை. இனியாவது அட்வைஸ் பண்ணுவதை நிறுத்துங்கப்பா!
இதெல்லாம் ரொம்ப தாமதமாக நடக்கிறது. எப்போதோ நடந்திருக்க வேண்டியது. இந்தப் பூச்சாண்டியை குண்டர் சட்டத்துல தள்ளினாத்தான் சரிப்படும்!
ஆயிர ரூபா கொடுத்து நெட் கனெக்ஷன் வாங்கி ப்ளாக்ஸ்பாட்டுக்கு படம் எப்படி எடுக்கனும்னு நீங்க பண்ற அட்வைசையா கேக்க வாரோம். நல்ல பதிவு போடலைன்னா ஷகிலா போஸ்டர் மாதிரி கவர்ச்சி படங்களையாவது போடுங்க.. இப்படி அட்வைஸ் பதிவு போடாதிங்க..
நல்ல பதிவு... கருத்து சொல்ல விரும்புபவர்கள் அதனை சொல்லும் விதமாகச் சொல்ல வேண்டும். இப்படி கொல்லும் விதமாகச் சொல்லக் கூடாது. கோடம்பாக்கமே கொஞ்சம் திருந்து!
intha padangalum waste na appo yentha padangal thaanga paarkalamnu solreenga? Illa padame paarka kudatha?
-Gopi
ஏதோ ஒரு படம் பார்ப்பதற்கு இந்த படங்களை பார்க்கலாம். மசாலா இல்லாம இருக்கிற தமிழ் படமே இல்லை என்றாகிவிட்ட நிலையில் இந்த படங்களை பார்து விட்டுதான் போவோமே....
Post a Comment