பேசுங்கள் ஜெயா...
சசிகலா குடும்பத்தினரைக் கூண்டோடு அ.தி.மு.க - விலிருந்து ஜெயலலிதா வெளியேற்றி இருப்பது இதுவரை ஜெயலலிதா செய்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளிலேயே உச்சமானதாக கருதப்படுகிறது. ஆனால், ஏன் இந்த நடவடிக்கை என்பதுதான் மர்மமாக இருக்கிறது. ஜெயலலிதா -சசிகலா நட்பு தொடர்பான எல்லாமே எப்போதுமே மர்மமாக இருப்பது போலவே இப்போதும் மர்மம் தொடர்கிறது.
தி.மு.க - வில் எப்படி கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் பல்வேறு கிளைகள் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுததினவோ அதற்கு நிகராக அ.தி.மு.க - வில் சசிகலா குடும்பம் இருந்து வந்திருக்கிறது என்பதே உண்மை. ஆனால், இரண்டுக்கும் ஒரு முக்கியமான அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க - வில் செல்வாக்குடன் இருந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலனோர் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரபூர்வ பொறுப்புகளில் இருந்தார்கள். அதனால் பொதுமக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் இருந்தது. ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர்கள் அப்படி எந்த பொறுப்பிலும் இல்லாமலே ஆதிக்கம் செல்லுத்தினர்கள். பொதுமக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திலிருந்து இதுவரை தப்பித்தே வந்திருக்கிறார்கள். சசிகலா இதுவரை பத்திரிகைகளுடன் பேசியதோ அறிக்கை வெளியிட்டதோ கிடையாது.
சசிகலா குடும்பத்தினர் என்ன செய்தாலும் அத்தனைக்கும் ஜெயலலிதாவே பொறுப்பேற்க வேண்டி வந்திருக்கிறது. ஜெயலலிதா ஒவ்வொரு முறை ஆட்சியில் இருக்கும்போதும் சம்பாதித்த கெட்ட பெயருக்கு சரி பாதி காரணம் சசிகலா குடும்பத்தை சார்ந்த செயல்கள்தான். வளர்ப்பு மகன் திருமணம் முதல் சிறுதாவூர், கொடநாடு, டான்சி, ப்ளசன்ட் ஸ்டே விவகாரங்கள் வரை சசிகலா குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. அரசு ஊழியர் நீக்கம், சமச்சீர் கல்வி குளறுபடி, அண்ணா நூலக மாற்றம் போன்ற அராஜகங்களுக்கு சசிகலாவை பழிக்க முடியாது. அவற்றுக்கு ஜெயலலிதாவே முழுப்பொறுப்பு.
சுமார் இருபது ஆண்டுகள் ஜெயலிதாவுடன் ஒரே வீட்டில் குடியிருந்து அவரை பராமரிக்கும் பொறுப்பை நிர்வகித்து வந்த சசிகலா இப்போது தூக்கி எறியபட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சசிகலா குடும்பத்தினரின் அத்துமீறல்கள், அராஜகங்கள், அளவுகடந்து போய்விட்டன. ( இதற்கெல்லாம் ஏதாவது அளவு உண்டா என்ன? ). இனியும் சகிக்க முடியாது என்று உயர் அரசு அதிகாரிகள் நேரடியாகவே ஜெயலலிதாவிடம் புகார் செய்துவிட்டனர். ஜெயலலிதாவுக்கே தெரியாமல் பல பேரங்களை சசிகலா வகையறாக்கள் நடத்தி வந்தனர் என்பது இப்போது ஜெயலலிதாவுக்கு தெரிந்து விட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கபட்டால், கட்சி, ஆட்சி முழுவதையும் சசிகலா குடும்பமே கைப்பற்ற பெங்களுருவில் சதித்திட்டம் தீட்டப்பட்டது. இனி ஜெயலலிதாவின் உயிருக்கே கூட ஆபத்து என்ற நிலையில் ஜெயா தன் பால்ய நண்பர், பத்திரிக்கையாளர் சோவின் உதவியை நாடினார். சோவும், நரேந்திர மோடியும் சேர்ந்து செய்த ஏற்பாட்டின்படி குஜராத்தில் இருந்து நம்பிக்கை கூடிய பாதுகாவலர்களும், நர்சுகளும் போயஸ் தோட்டத்தில் குடியேற்றப்பட்டு சசிகலா வெளியேற்றப்பட்டார். இப்படி பத்திரிக்கைகளில் செய்தியாக வளம் வருகின்றன. இவற்றில் எது உண்மை எது பொய் என கண்டறியப்படாத மர்மம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயா வாயைத் திறக்க வேண்டும். பேச வேண்டும். ஏனென்றால் ஏன் அவர் இப்போது சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை மக்களுக்கு சொல்லியாக வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. இதற்கு முன்னர் சசிகலாவை பற்றிய விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் வந்தபோது, என் உடன்பிறவா சகோதரி என்றும் தம்மை கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர் என்றும், அவருக்கு கட்சி ஆட்சிக்கு தொடர்பு இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டவர் ஜெயலலிதா. பின்னர் சசிகலா குடும்பத்தினர் பலருக்கும் கட்சிப் பொறுப்புகளைக் கொடுத்ததும் அவர்தான்.
சசிகலா கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பேரங்கள் முதல்; ஆட்சியில் அரசு நிர்வாக பேரங்கள் வரை அனைத்திலும் பங்கேற்று வந்தார் என்று நேரடியாக இவற்றில் சம்பந்தப்பட்ட பலரும் தனி பேச்சில் சொல்கிறார்கள். அப்படி அவரை இதுவரை பங்கேற்க அனுமதித்தவர் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் சம்மதம் இல்லாமல் சசிகலா கோட்டைக்கு செல்ல முடியாது. அமைச்சர்களுடன் பேசி முடிவுகளை எடுக்க முடியாது. இத்தனை காலம் இதையெல்லாம் அனுமதித்த ஜெயா - ஏன் இதுவரை இதை அனுமதித்தார் என்பதையும் சொல்ல வேண்டும். இனி அனுமதிக்க முடியாது என்ற நிலை அவருக்கு இப்போது ஏன் வந்தது என்பதையும் சொல்லவேண்டும். கடுமையான தவறுகளை சசிகலா குடும்பத்தினர் செய்திருந்தார்கள் என்றால் அதற்கு, கட்சியிலிருந்து நீக்குவது மட்டும் தண்டனையாகாது. சட்டப்படியான தண்டனைகள் தரப்பட வேண்டும்.
இவை எதுவும் உட்கட்சி விவகாரம் என்றும் அந்தரங்க விஷயம் என்றும் தப்பிக்க முடியாது. உட்கட்சி விவகாரங்கள் கூட பொதுமக்கள் அக்கரைகுரியவைதான். ஏனென்றால், கட்சி என்பதே பொது விஷயம் தான். இன்று தனியார் வணிக நிறுவனங்கள் கூட நீதிமன்றம் முன்பு தங்கள் இயக்குனர் குழுவில் என்ன நடந்தது என்பதை பகிரங்கபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆட்சி நடத்தும் அரசியல் கட்சிக்கு இதில் எந்த சலுகையும் தரமுடியாது.
சசிகலா குடும்பத்தை வெளியேற்றியது; நிச்சயம் ஜெயலலிதாவுக்கு,கட்சியிலும் ஆட்சியிலும் பொதுமக்கள் செல்வாக்கிலும் கணிசமான லாபங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இதுவரை ஏன் சசிகலாவை அவர் சீராட்டினார், இப்போது ஏன் தூக்கி எறிகிறார் என்ற இரண்டுக்கும் மக்களிடம் காரணம் சொல்ல வேண்டிய தார்மிகக் கடமை அவருக்கு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவின் மௌனம் தவறானது. பேசினால் சசிகலா தரப்பிலிருந்து, ஜெயலிதாவுக்கு எதிரான விஷயங்கள் அம்பலப்படுதபடும் என்ற அச்சத்தினால் மெளனமாக இருக்கிறார் என்றே இந்த மௌனம் பொருள் கொள்ளப்படும். எனவே ஜெயலலிதா இப்போதேனும் எல்லா உண்மைகளையும் மக்களிடம் பேசியேயாக வேண்டும். - நன்றி கல்கியில் ஞாநி
Labels:
தமிழகம்

Post a Comment