மத்திய அரசு இரட்டை வேடம்: விஜயகாந்த் தாக்கு
கூடங்குளம் விவகாரத்தில் அப்துல் கலாமின் யோசனை ஏற்றுக் கொள்ளும் மத்திய அரசு, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஏற்றுக் கொள்ள மறுத்து இரட்டை வேடம் போடுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
முல்லைப் பெரியாறு விஷயத்தில் மத்திய அரசு மெத்தனத்துடன் செயல்படுகிறது. பாதிக்காப்பட்டுள்ள தமிழர்களை விட கேரளாவில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டுமே என்ற ஒரே கவலைதான் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கேரளாவுக்கும், மத்திய அரசுக்கும். இரு அரசுகளுக்கும் ஆட்சி பற்றிய கவலைதான், இரு மாநில மக்களைப் பற்றிய கவலை ஒரு துளி கூடக் கிடையாது.
கேரளா சென்ற ஐயப்பமார்களையும், அங்கு வாழ்ந்த தமிழர்களையும் பாதுகாக்கத் தவறிவிட்டது கேரள அரசு. சமூக விரோதிகளால் தமிழர்கள் தாக்கப்படுவதை கேரள அரசு வேடிக்கை பார்க்கிறது , அரசியல் தூண்டுதல் இல்லாமல் 2 லட்சம் மக்களுக்கு மேல் முல்லைப் பெரியாறுக்காக தமிழர்கள் போராடுகின்றனர் , திமுக , அதிமுக அரசுகள் இந்த பிரச்னையை பல ஆண்டுகளாக தீர்க்கவில்லை என்பதை மக்கள் உனர்ந்துள்ளனர் . இந்த பிரச்னையில் அதிமுக அரசின் அணுகுமுறையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்பதைத் தான் இந்த போராட்டங்கள் உணர்த்துகின்றன .
இதில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப் பட்டு பிறகு சட்டமன்றம் கூடி இருக்க வேண்டும். இந்த பிரச்சனையில் கேரளா, மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவு தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறிவிட்டது, அதனால் நமது சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பதில் ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத அலபாமா மாநில கவர்னரை சுட்டுக் கொன்றுவிட்டு கோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ஜான் . எஃப் . கென்னடி. அத்தகைய மன உறுதி , நமது உச்ச நீதிமன்றத்தின் 142 அடி கொள்ளளவு நீரை முல்லை பெரியாறில் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல் படுத்துவதில் நமது பிரதமருக்கு வர வேண்டும் இங்குள்ள தீர்ப்புக்கு மரியாதை இல்லை.
மத்திய அரசோ , நிறைவேற்றவோ , அமல்படுத்தவோ, முடியவில்லை . இந்த லட்சணத்தில் எத்தனை வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நமது சட்டமன்றம் நிறைவேற்றி என்ன பயன் ? ஜெயலலிதாவும் , கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள் என்பதுதான் நாம் கண்ட பலன் . இது போன்ற நிலைமை இனி ஏற்படாமல் இருக்க வாஜ்பாய் உருவாக்கிய தங்க நாற்கர சாலை போல இந்திய நதிகள் அணைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும்
கூடங்குளம் மக்களின் 120 நாள் போராட்டத்தின் தன்மையை உணர்ந்து பிரதமர் அந்த மக்களை நேரில் சந்தித்து அவர்களது அவநம்பிக்கையை போக்கி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் ரஷியாவில் போய் நின்று கொண்டு , இன்னும் 1 வாரத்தில் கூடங்குளம் அணு உற்பத்தி துவங்கும் என்பது முறையல்ல . கூடங்குளம் பாதுகாப்புக்கு ராணுவத்தை ஈடுபடுத்தலாம் என்ற அப்துல் கலாமின் ஆலோசனையை மத்திய அரசு மகிழ்ச்சியாக நிறைவேற்றத் துடிக்கிறது . அதே நேரத்தில் முல்லை பெரியாறில் ராணுவ பாதுகாப்பு அவசியம் என்ற அதே அப்துல் கலாமின் ஆலோசனையை காது கொடுத்து கேட்க மத்திய அரசு மறுக்கிறது . மத்திய அரசின் இந்த இரட்டை வேடம் மக்களை ஏமாற்றும் செயல்.
தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் , செவிசாய்க்க வேண்டும் . எதையுமே காதுகொடுத்து கேட்கும் பழக்கம் தமிழக அரசிடம் இல்லை. தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது . ஆனால் , ஆள் மாற்றம் ஏற்படவில்லை. தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் ஊழல் மூலம் எல்லா மட்டங்களிலும் ஊழலும் , லஞ்சமும் புரையோடிக் கிடக்கிறது என்பது நிரூபணமாகி விட்டது. விழுந்து விழுந்து படிப்பவனுக்கு வேலையே இல்லை.
முல்லை பெரியாறு தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நான் விவாதத்தில் கலந்து கொண்டு பேச இயலாமைக்கு கால தாமதமாக பேரவைக்குள் நான் செல்ல முடிந்தது தான் காரணம். அதற்கு காரணம் , அன்றைய தினம் சென்னையின் போக்குவரத்து நெரிசல் தான், வேறு எந்த எண்ணமும் கிடையாது.
Labels:
தமிழகம்

Post a Comment